பறவையியலாளர் ரத்னம் வளாகத்தில் அமையப்பெற்றுள்ள ‘அருளகம்’ அமைப்பின் புதிய அலுவலகத்தை அக்டோபர் 1 அன்று மதிப்பிற்குரிய புலவர் பா.நா. காளிமுத்து அவர்கள் வாழ்த்துரை வழங்கித் திறந்து வைத்தார். இந்நிகழ்விற்கு திருமதி மரகதம் ரத்னம் அவர்கள் முன்னிலை வகித்தார்.
சுற்றுச்சூழல் மற்றும் உள்ளூர்த் தாவரப் பாதுகாப்பை வலியுறுத்தும் முகமாகச், செல்வி சக்தி சரவணன் ‘எலும்பொட்டி’ செடியையும் Ormocarpum cochinchinense, செல்வன் சிறீரஞ்சன் மல்லிகார்ச்சுணன் எழுகா என அழைக்கப்படும்’கள்ளி முளையா’ Caralluma fimbriata செடியையும் நட்டு வைத்தனர்.

நிகழ்வில் அருளகத்தின் செயலர் திரு. சு. பாரதிதாசன் பேசுகையில்:
“பறவையியலாளர் ஐயா ரத்னம் அவர்களின் 95-ஆவது அகவையை முன்னிட்டு, பறவைகளையும் பட்டாம்பூச்சிகளையும் கவரும் வகையில் 95 தாவரங்கள் வளர்க்கப்பட உள்ளன எனவும் அருளகத்தின் 25-ஆம் ஆண்டை முன்னிட்டு, தமிழ்நாட்டில் அழியும் அபாயத்திலுள்ள 25 அரிய தாவர இனங்களை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியிலும் ஈடுபட உள்ளதையும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, அருளகத்தின் தலைவர் திரு. ஆரண்யா சரவணன் பேசுகையில்:
“எதிர்காலத்தில் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் சூழலியல் குறித்துப் பயிற்றுவிக்கும் முதன்மை மையமாக அருளகம் செயல்படும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, அருளகத்தின் ‘முன்னத்தி ஏர்’ திரு. கோ. இராம்மோகன் அவர்கள் புலவர் பா.நா. காளிமுத்து அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி வரவேற்றுச் சிறப்பு செய்தார். திருமதி மரகதம் ரத்னம் அவர்களுக்கு திருமதி சோபா சிறப்பு செய்தார்.
கட்டிடத்தை வடிவமைத்த வல்லுநர் அர்ச்சுணன் அவர்கட்கும் தட்சர் சீனிவாசன் அவர்களது குழுவினருக்கும் நன்றி பாராட்டப்பட்டது. புலவர் பா.நா.காளிமுத்து அவர்களது புதல்வி திருமதி மாதவி மகாலிங்கம் அவர்கட்கும் அருளகம் சார்பாக நன்றி பாராட்டப்பட்டது.

இவ்விழாவில் பல்வேறு பகுதிகளில் களப்பணியாற்றி வரும் அருளகத்தின் பணியாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.