
மரபு வழிக் கால்நடை மருத்துவம் குறித்த பயிற்சி சத்தியமங்கலத்தில் நடைபெற்றது
தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம், தமிழக இயற்கை உழவர் கூட்டியக்கம் ஏற்பாடு செய்த மரபு வழிக் கால்நடை மருத்துவம் குறித்த பயிற்சி (26-04-25) சத்தியமங்கலத்தில் நடைபெற்றது. இதில் வேளாண் ஆராய்ச்சிமைய மாணாக்கர்கள், கால்நடை வளர்ப்போர் உள்ளிட்டோர் திரளாகக் கலந்துகொண்டனர்.
மரபு வழி மருத்துவத்தை முழு மூச்சாக அனைத்து மாநிலங்களுக்கும் பிற நாடுகளுக்கும் எடுத்துச்சென்று பரப்பிக் கொண்டிருக்கும் பேராசிரியர் புண்ணியமூர்த்தி அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பயிற்சி வழங்கினார். மடிநோய் வராமல் தடுக்கும் வழிகள், மாசி வரவில்லையென்றால் என்ன செய்யவேண்டும், பருவம்தோரும் சினைப்பிடிக்கச் செய்யும் வழிமுறைகள், இயற்கை முறையில் குடற்புழுக் கட்டுப்பாடு மற்றும் கழிச்சல் தடுப்பு ஆகியவற்றை முள்ளங்கி, பிரண்டை, சோற்றுக்கற்றாளை ஆகியவற்றைக் கொண்டு குணப்படுத்தும் முறைகளை எடுத்துக்கூறினார். அத்துடன் அடுக்களை அஞ்சறைப்பெட்டியில் உள்ள பொருட்களைக் கொண்டு நோய்களைக் கட்டுப்படுத்தும் முறைகளையும் எடுத்துரைத்தார். அவர்கூறிய செயல்விளக்கம் எளிமையாகவும் கால்நடை வளர்ப்பவர்கட்குக் கட்டுப்படியாகக் கூடிய வகையிலும்இருந்தது.
நிகழ்வுக்குச் சத்தியமங்கலம் இயற்கை விவசாயத்தின் முன்னோடி திரு சுந்தரராமன் ஐயா தலைமை தாங்கினார். வானகம் அமைப்பின் மருதம் குமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.
நிகழ்வில் அருளகத்தின் செயலர் சு.பாரதிதாசன், கால்நடைகளுக்குத் தரப்பட்ட வலி போக்கி மருந்துகளால் பாறு கழுகுகளுக்கு நேர்ந்த அவலத்தை எடுத்துரைத்தார். தற்போது சத்தியமங்கலம், முதுமலைப் பகுதியில் மட்டுமே இவை வாழ்ந்துவருவதாகவும் இங்கு வசிக்கும் கால்நடை வளர்ப்போர், மருந்து விற்பனையாளர்கள் கால்நடை மருத்துவர்கள் ஆகியோரின் ஆதரவு தேவை என்றும் வலிமருந்துகளுக்கு மாற்று மருந்தாக புண்ணியமூர்த்தி ஐயா அவர்கள் கூறிய வழிமுறைகளைச் செயல்படுத்து வதன் மூலம் நல்ல பயனைக் காணலாம் என்றும் கேட்டுக்கொண்டார். தடைசெய்யப்பட்ட கால்நடை மருந்துகளை அறவே தவிர்க்கக்கோரியும் கேடு விளைவிக்கும் மருந்துகளைப் புறக்கணிக்கக்கோரியும் பாதுகாப்பான மருந்துகளான மெலாக்சிகம், டோல்பினாமிக் ஆசிட் ஆகியவற்றோடு மரவுவழி மருத்துவத்தைப் பயன்படுத்தவும் அருளகம் அமைப்பு முழூ வீச்சில் இதனை இப்பகுதியில் எடுத்துச் செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.
நிகழ்வை ஐந்துணை வேலுச்சாமி, பெரு. நடராஜன், ஜோதி அருணாச்சலம், மோகன் ஆகியோர் நெறிப்படுத்தினர்.
கால்நடை வளர்ப்பு பொருட்கள் கேட்ட கேள்விக்கு பேராசிரியர் புண்ணியமூர்த்தி அவர்கள் எளிய முறையில் விளக்கங்களை அளித்தது பயனுடையதாக இருந்தது.