இறந்த யானையின் உடல் இறந்தவற்றை உண்ணும் பாறு கழுகுகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு உணவாக விடப்பட்டது | Wild Animal Carcass Disposal Guidelines
எமது குழுவினரோடு தெங்குமரகடா - வனச்சரகத்தில் பாறு கழுகுகள் குறித்தான களப்பணியில் இருந்தோம். யானை ஒன்று இறந்து கிடப்பதாகவும் அதனை உடற்கூராய்வு செய்ய இருப்பதாகவும் என்ஜி ஓ என்ற முறையில் நீங்கள் கலந்து கொள்ள இயலுமா என வனச்சரகர் கேட்டார். இறந்த காட்டுயிர்களை எப்படிக் கையாளவேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறை ஒன்றை அண்மையில் தமிழ்நாடு அரசின் காட்டுயிர் உயர் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டிருந்தது. அந்நடைமுறை எப்படிக்கையாளப்படுகிறது என்பதைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்பதால் உடனே ஒத்துக்கொண்டேன்.
காட்டுச்சாலை வழியே கடந்து சென்றோம். வனத்துறை முன்களப்பணியாளர்கள் வழிகாட்டுவதற்காக வழியில் காத்திருந்தனர். சென்று பார்த்தபோது, பெரும்பாறை ஒன்று சரிந்து கிடப்பதுபோல யானை கிடந்தது. சுமார் 50 வயது மதிக்கத்தக்கதாக இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். 13 ஆண்டுகட்கு முன்னர் இதே வனப்பகுதியில் யானை இறந்ததற்கு உடற்கூராய்வுக்கு வந்திருந்த நினைவு வந்தது. உடற்கூராய்வு செய்வதற்கு முன்னரே பாறு கழுகுகளின் எச்சம் யானையின் உடலில் ஆங்காங்கே இருந்தது. ஏற்கனவே அவை இரையைக் கண்டுவிட்டது என்பதைத் தெரிவித்தது. ஆயினும் தோல் கடினமாக இருந்ததால் எளிமையான பகுதியான யானையின் கண்களை மட்டும் பாறு கழுகு கொத்தி எடுத்துச் சென்றிருந்தது.
பொதுவாக செம்முகப்பாறுவின் அலகு கூர்மையாக வளைந்து இருப்பதால் அவை தான் முதலில் வந்து இறந்துகிடக்கும் விலங்கின் உடலைத் தனது கூரிய அலகால் கிழித்துத் தானும் உண்டுவிட்டு பிற விலங்குகளும் உண்பதற்குத்தோதாக வழிவகுக்கும். மற்ற பாறு கழுகுகளின் அலகானது கவ்விக் கிழித்து எடுத்துச்சென்று உண்பதற்குத் தோதாக இருக்கும்.
தற்போது செம்முகப்பாறுவின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டதும் கவலைகொள்ளத் தக்கது. அண்மையில் பந்திப்பூர் சரணாலயத்தில் 5 பாறு கழுகுகள் இறந்தன. அதில் இரண்டு செம்முகப்பாறுவும் இருந்தன. ஏற்கனவே குறைவாக உள்ள நிலையில் இதுபோன்று அழிவும் பேரிடியாக விழுகிறது.
யானையின் உடலைச் சுற்றி ஆயிரக்கணக்கான ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன. அப்படியே தனது சந்த தியைப் பெருக்கும் விதமாக முட்டையும் இட்டன.
முன்களப்பணியாளர்கள் உதவியுடன் முதுமலைச் சரணாலயத் துணை இயக்குநர் திரு. வித்யாதரன் மேற்பார்வையில் காட்டுயிர் மருத்துவர் ராஜேசு அவர்கள் உடற்கூராய்வு மேற்கொண்டார். யானையின் இரைப்பையில் கடந்த 5 நாட்களாக உணவெடுத்ததற்கான அறிகுறி ஏதும் இல்லை. வயதானதாலும் வேறு சில உடல் குறைபாட்டினாலும் இறந்திருக்கலாம் எனத்தெரிவித்தார். தந்தம் ஏதும் இல்லாத மோழையானையாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆந்திராக்சு போன்ற தொற்றுநோய் உருவாக்கும் நுண்ணுயிர்கள் இல்லாததால் உடற்கூராய்வுக்குப்பின்னர், யானையின் உடல் இறந்தவற்றை உண்ணும் பாறு கழுகுகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு உணவாக விடப்பட்டது. அவை எளிதில் அணுகும் வண்ணம் அருகிலிருந்த முட்செடிகள் களையப்பட்டன. இறந்த யானையின் உடலானது குறைந்தது 350 பாறு கழுகுகளுக்கு உணவு வழங்கும். அத்துடன் பன்றிகளும், கழுதைப் புலிகளும் பல்லாயிரம் ஈக்களும், புழுக்குளும் பயனடையும். மகிழ்ச்சி. இது தொடரவேண்டும்.
