இந்தியக் காட்டுயிர் ஆராய்ச்சி நிறுவனத்தில் (WII) முதுகலைக் காட்டுயிரியில் மாணவர்களுடன் உரையாடல் | தெங்குமரகடா | Sept 2025
இந்தியக் காட்டுயிர் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுகலைக் காட்டுயிரியில் பயிலும் 20 மாணாக்கர்கள் ஆராய்ச்சியாளர் முனைவர் சி. இரமேசு அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டிலுள்ள முதுமலை, சத்தியமங்கலம், ஆனைமலை உள்ளிட்டச் சரணாலயங்களுக்குக் கானுலா வர உள்ளதாகவும் அவர்கள் செப்டம்பர் மாதம் 26ந்தேதி தெங்குமரகடாப் (கெத்தப்பட்டி) பகுதிக்கு வருகை தர உள்ளதாகவும் அப்போது அவர்களுடன் பாறு கழுகுகள் குறித்து உரையாடவருமாரும் கடிதம் வந்திருந்தது. எமது குழுவினர் தெங்குமரகடாப் பகுதியில் களப்பணியில் இருந்ததால் எனக்கும் நல்வாய்பாகப் பொருத்தமாக அமைந்தது.
குறித்த நாளில் குறித்த நேரத்தில் காராச்சிக்கோரைச் சோதனைச் சாவடியை அடைந்து காத்திருந்தேன். சிறிது நேரத்தில் மாணாக்கர்களும் வந்துவிட்டனர்.
குழித்துறை பட்டியில் அவர்களுடன் அறிமுக உரை நிகழ்த்திவிட்டு ஆற்றோரம் இருந்த மத்தி மரங்களையும் பாறு கழுகுகள் இம்மரத்தில் தான் கூடமைக்கின்றன என்கிற செய்தியையும் அதற்கான உத்தேசமான காரணங்களையும் அவர்களுடன் பகிர்ந்துகொண்டேன். வானத்தில் பறந்து திரிந்த பாறு கழுகுகளையும் தொலைநோக்கி வழியே பார்த்து இரசித்தனர். கூடுதலாக ஆற்றோரக் காடுகளின் அவசியம் குறித்தும் சத்தியமங்களம் பகுதி எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்தும் எடுத்துரைத்தேன். திப்பு சுல்தான் இப்பகுதியை ஆண்ட வரலாறு குறித்தும் பட்டி மாடுகள் எவ்விதம் பாறு கழுகுகளுக்கு உணவாய் உதவியாய் இருந்தன என்பது குறித்தும் கவனப்படுத்தினேன். திப்பு சுல்தான் காலத்தில் அமைக்கப்பட்ட பாலத்தையும் மாணவர்கள் பார்த்து இரசித்தனர்.
அதனைத் தொடர்ந்து, அருளகம் அமைப்பு மக்களுடன் இணைந்து மேற்கொண்டுவரும் களப்பணிகள் குறித்தும் பல்வேறுபட்ட மக்களுடன் உயிரினங்கள் பாதுகாப்பு தொடர்பான செய்தியை எப்படிக் கொண்டுபோய் சேர்க்கிறோம் என்பது குறித்தும் சக பணியாளர்களான திரு. பரமன், செல்வி. சுந்தரி, செல்வி. ரேவதி, திரு. சந்தோசு ஆகியோர் எடுத்துரைத்தனர். தெங்குமரகடா மக்கள் தாமாக முன்வந்து இடமாற்றம் செய்வது குறித்தும் அதற்கு எந்தளவுக்கு வரவேற்பு உள்ளது எனவும் கேட்டறிந்தனர்.
தற்காலத்தலைமுறையின் தேவைகள் எதிர்பார்ப்புகள் வேறு மாதிரி உள்ளதாகவும் காட்டின் நுண் இசைவிலிருந்து அவர்கள் அந்நியமாகி வருவதாகவும் அதனால் காட்டுயிர்களோடு ஒத்திசைந்து வாழ்வது வருங்காலங்களில் சாத்தியப்படுமா என்ற கேள்வியை மாணவர்கள் எழுப்பினர்.
பழங்குடிகளாகிய நாங்களும் யானை வந்தால் விரட்டுவோம் எனவும் சேதாரம் நேர்ந்தாலும் அதுவும் உண்ணட்டும் எனப் பொறுத்துக்கொள்வோம் எனவும் சுந்தரி எடுத்துச் சொன்னார். ஆனால் இதே மன நிலை பழங்குடி அல்லாத மற்றவர்களிடம் இல்லை என்பதையும் குறிப்பிட்டார்.
அடுத்ததாக கல்வி குறித்துப் பேச்சு வந்தது. பழங்குடி மாணவர்களிடையே குறிப்பாக ஆண்கள் இடைநிற்றல் அதிகளவில் உள்ளது என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குரிய காரணம் கேட்டனர். படித்தால் மட்டும் வேலை கிடைக்கிறதா என்ற எதிர்கேள்வியை இளைஞர்கள் கேட்கின்றனர் எனவும் தற்போது பெண்களாகிய நாங்கள் எல்லாம் படித்து வேலைக்கு வந்தவுடன் பையன்களது மனப்போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ரேவதி தெரிவித்தார். மேலும் இந்த ஆண்டு இடை நின்ற 6 பழங்குடி மாணவிகளுடன் சேர்த்து மொத்தம் 13 மாணவிகளின் படிப்புத் தொடர அருளகம் அமைப்பு முன்முயற்சி எடுத்ததையும் சுந்தரி தெரிவித்தார்.
வருங்காலத்தில் இங்குள்ள மாணவர்களாகிய நீங்கள் வனத்துறை உயரதிகாரியாக வரலாம். வேறு பொறுப்புக்கும் வரலாம். இந்தியா போன்ற பெரும் மக்கள் திரளுடைய நாட்டில் மக்களுடன் இணைந்து காட்டுயிர்ப் பாதுகாப்பை முன்னெடுப்பதுதான் சரியான தீர்வாக இருக்கும் என்பதை எடுத்துச் சொல்லி எனது உரையாடலை நிறைவு செய்தேன்.
அருமையான அறிவுத்திறன் மிக்க மாணவர்களுடன் உரையாடியது நிறைவாய் இருந்தது. இதற்கு வழிவகுத்த இந்தியக் காட்டுயிர் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் ஆராய்ச்சியாளர் முனைவர் சி. இரமேசு அவர்கட்கும் முனைவர் இலட்சுமி நாராயணன் அவர்கட்கும் திரளான நன்றியினைத் தெரிவித்தேன்.
Bharathidasan S,
Secretary,
Arulagam,
