காட்டுயிர் வார விழாவை (Wildlife Week) முன்னிட்டு, ‘அருளகம்’ நிறுவனத்தின் சார்பில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக தலமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட காளித்திம்பம் மற்றும் ராமரணை ஆகிய கிராமங்களில் பாறு கழுகுகள் (Vultures) பாதுகாப்பு மற்றும் கால்நடைகளுக்கான மரபுவழி மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.

இதில் முத்தாய்ப்பாக புலி மற்றும் சிறுத்தைகளின் தாக்குதலால் கால்நடைகளை இழந்தவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் மாற்று இழப்பீடாகக் கன்றுக்குட்டிகள் வழங்கப்பட்டன. ராமரணை கிராம ஊர் தலைவர் திரு. ராமன் மற்றும் காளித்திம்பம் கிராமத்தைச் சேர்ந்த திரு. பத்ரன் ஆகியோர் முதல் கட்டமாகக் கன்றுக்குட்டிகளைப் பெற்றுக்கொண்டனர்.

பாரம்பரிய கால்நடை மருத்துவம்:
கால்நடைகளுக்குத் தடைசெய்யப்பட்ட நச்சு வலிநிவாரணி மருந்துகளைத் தவிர்த்து, மரபுவழி மருத்துவ சிகிச்சையை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.அருளகம் அமைப்பின் செயலாளர் திரு. பாரதிதாசன், வனத்தை ஒட்டிய கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும், அழியும் நிலையிலுள்ள பாறு கழுகுகளையும் இணைந்து பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.

அருளகத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. அமிர்தலிங்கம், கிராமத்திலேயே சிலரைத் தேர்ந்தெடுத்து அடிப்படை கால்நடை முதலுதவி பயிற்சி அளிக்கும் திட்டத்தை விளக்கினார்.
ஒவ்வொரு ஊர்களிலும் பாறுக் கழுகு பாதுகாப்புக் குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
கோபல்ஸ் அமைப்பைச் சேர்ந்த முனைவர் கோகுல், வெற்றிலை, மிளகு, கல் உப்பு, சீரகம், முருங்கை இலை, பிரண்டை, துளசி உள்ளிட்ட வீட்டிலுள்ள இயற்கை மூலிகைகளைக் கொண்டு அம்மை, கழிச்சல், வயிற்று உப்புசம், குடல்புண் மற்றும் உண்ணிப் பிரச்சினைகளுக்குச் சிகிச்சை அளிக்கும் முறைகளை விளக்கினார்.
வனத்துறையைச் சேர்ந்த காப்பாளர் திரு. பாலாஜி கால்நடைகளுக்கான மூலிகை மருந்துகளை வழங்கிச் சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் கௌமாரம் சுசிலா பன்னாட்டுப் பள்ளியின் ஆசிரியர் திருமதி. சித்ரா தலைமையில், 11-ஆம் வகுப்பு வணிகவியல் துறை மாணவிகளான சாருணிகா, நிவேதா, கரிஷ்மா, ஷாரந்திகா மற்றும் அஞ்சலி ஆகியோர் கலந்துகொண்டனர். மாணவிகள் பாறு கழுகுகள் பற்றிய தகவல்களை அறிந்துகொண்டதுடன், அப்பகுதியில் ‘வெண்முதுகு பாறு கழுகுகள்’ (White-rumped Vultures) வானத்தில் வட்டமிட்டதை நேரடியாகக் கண்டு களித்தனர்.
காளித்திம்பம் மற்றும் ராமரணை கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திரளாகக் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
இந்நிகழ்ச்சியை அருளகத்தைச் சேர்ந்த உயிரியலாளர் சுந்தரி,
ஓவியக் கலைஞர் சந்தோஷ், சமூகவியலாளர்கள் ரேவதி மற்றும் ஜான்
ஆகியோர் ஒருங்கிணைத்தனர்