பேசுபொருளாக இருந்துவருகிற ‘ஒன்ஹெல்த்’ (One Health) எனும் ‘நல்பெருவாழ்வுக் கோட்பாடு’, பத்மஸ்ரீ விருதுபெற்ற மூத்த கால்நடை மருத்துவர் புண்ணியமூர்த்தி அவர்களின் தீவிர முயற்சியால் இன்று களத்தில் நனவாகிச் செயல்வடிவம் பெறத் தொடங்கியுள்ளது. மனிதர்கள் மட்டும் தனித்து நலமாக வாழ்ந்துவிட முடியாது; நாம் வாழும் புறச்சூழலும், காட்டுயிர்களும், மனிதர்களைச் சார்ந்திருக்கும் வளர்ப்பு விலங்குகளும் நலமுடன் இருந்தால் மட்டுமே மனிதகுலத்தின் நல்வாழ்வும் உறுதியாகும் என்பதே இக்கோட்பாட்டின் அடிப்படை உணர்வாகும்.

இந்த உயரிய நோக்கில், மருத்துவர் புண்ணியமூர்த்தி அவர்கள் ‘நல்பெருவாழ்வு’ எனும் தொலைநோக்குச் சிந்தனையை மிகுந்த முனைப்புடன் முன்னெடுத்து வருகிறார்.
“ஒவ்வொரு மருத்துவத் தீர்மானமும், ஒரு சூழலியல் முடிவே!” (Every medical decision is an ecological decision)
என்ற அழுத்தமான பார்வையோடு அண்மையில் தஞ்சாவூரில் சிறப்புச் சிந்தனை அரங்கமும் கலந்துரையாடலும் ஒருங்கிணைக்கப்பட்டன.

கால்நடைகளின் நலனைப் பேணுதல், மண்ணின் இயற்கை வளத்தை மீட்டெடுத்தல், கால்நடைகளுக்குத் தேவையற்ற முறையில் வழங்கப்படும் ‘நுண்ணுயிர் எதிர்ப்பி’ (Antibiotics) மருந்துகளின் பயன்பாட்டைத் தவிர்த்தல் மற்றும் கலப்படமற்ற தூய பால் உற்பத்தியை உறுதிசெய்தல் ஆகிய முதன்மைப் புள்ளிகளை மையமிட்டு மருத்துவர் புண்ணியமூர்த்தி அவர்களின் உரை அமைந்திருந்தது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்திருந்த களச் செயல்பாட்டாளர்கள் பலரும் இந்நிகழ்வைச் சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் முக்கியத் தொடர்ச்சியாக, மூன்று மாத கால அளவிலான ‘மரபு வழிக் கால்நடை மருத்துவம்’ (EVM – Ethno-Veterinary Medicine) பட்டிதொட்டி எங்கும் கொண்டுசேர்க்கும் திட்டம் முறைப்படி அறிவிக்கப்பட்டது.

மருத்துவர் புண்ணியமூர்த்தி அவர்கள் வழிகாட்டுதலோடு இதனைச் சத்தியமங்களம், தாளவாடி, முதுமலைப் பகுதிகளில் முன்னோடியாகச் செயல்படுத்திவரும் ‘அருளகம்’ அமைப்பின் செயலர் சு.பாரதிதாசன் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு சிற்றுரை ஒன்றை ஆற்றினார்.
அவர்பேசும்போது, மரபுவழிக் கால்நடை மருத்துவ முறைகளைக் களத்தில் செயல்படுத்தியதன் மூலம், தீர்வு கிடைக்கப்பெற்றதையும் மக்களிடையே ஏற்பட்ட நம்பிக்கையான மாற்றங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அழியும் அபாயத்திலிருக்கும் பாறுகழுகுகளைப் (Vultures) பாதுகாக்கும் நோக்கில், அரசால் தடைசெய்யப்பட்ட (டைக்குளோபினாக், அசிக்குளோபினாக், கீட்டோபுரோபென், நிமுசுலாய்டு) மருந்துகளின் பயன்பாட்டைக் குறைக்க மரபுவழி மருத்துவம் பெரிதும் உதவியாக இருந்துவருவதையும் குறிப்பாக மடிநோய்க்கு நல்லதொரு தீர்வைத் தந்ததையும் அழுத்தமாகப் பதிவு செய்தார்.

“நல்வாழ்வுக் கோட்பாட்டின்” (One Health Approach) அடிப்படையில் பாறுகழுகுகளையும் கழுதைப்புலிகளையும் பாதுகாப்பதற்காக ‘அருளகம்’ அமைப்பு சமர்ப்பித்த திட்ட முன்வரைவை அங்கீகரித்து, அதனை மூன்றாண்டுக் கால அளவில் செயல்படுத்துவதற்காக ‘ஹெபிடாட்’ (Habitat) அறக்கட்டளை ஒரு கோடி ரூபாய் நிதியுதவி (நல்கை) வழங்கியதையும் நன்றியுடன் தெரிவித்துக்கொண்டார்.

இயற்கையோடு இயைந்த பாரம்பரிய மருத்துவமும் சூழலியல் பாதுகாப்பும் கரங்கோர்க்கும்போது மட்டுமே, மனிதகுலமும் ஒட்டுமொத்த உயிர்க்கோளமும் ‘நல்பெருவாழ்வு’ பெற முடியும் என்பதை உணர்த்திய ஒரு சிறப்புமிக்க தொடக்கத்திற்கு அச்சாரமாக இக்கூட்டம் அமைந்தது.