பொதுவெளியில் ஜாதி அடையாளங்களை அகற்றுவது என்பது ஒரு சமூகத்தின் முற்போக்கான வளர்ச்சிக்கு மிக முக்கியமான அங்கமாகும். அந்த வகையில், பொது இடங்கள் மற்றும் தெருக்களின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கக் கோரி தமிழ்நாடு அரசு அக்டோபர் 6, 2025 அன்று வெளியிட்ட அரசாணையை (G.O.) உறுதிசெய்து, செப்டம்பர் 23, 2026 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.


நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த அரசாணையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவைத் தள்ளுபடி செய்ததுடன், விடுபட்ட தெருக்கள் மற்றும் பொது இடங்களையும் கண்டறிந்து ஜாதிப் பெயர்களை அகற்றும் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. சாதியற்ற சமத்துவச் சமூகத்தை உருவாக்கத் துணியும் தமிழ்நாடு அரசின் இந்நடவடிக்கையும், அதனைச் சட்டரீதியாக உறுதிசெய்த உயர்நீதிமன்ற நீதியரசர்களின் உத்தரவும் பெரிதும் பாராட்டத்தக்கவை.
இருப்பினும், ஜாதி மற்றும் மத ரீதியிலான வகைப்பாடுகள் மனிதச் சமூகத்தின் முகவரிகளோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவை தாவரங்கள், மலர்கள், விதைகள் மற்றும் மரங்களின் வழக்கப் பெயர்களிலும் நீக்கமறக் கலந்திருக்கின்றன.

Jasminum grandiflorum என அறிவியல் பெயரால் அழைக்கப்படும் முல்லை மலர் ஜாதி மல்லி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. தென் தமிழகத்தில் பிச்சிப்பூ எனவும் சந்தன மல்லி என்றும் அழைக்கபடும் இம்மலர் சங்க இலக்கியங்களில் தளவம் மற்றும் கொகுடி என அழகுற அழைக்கப்படுகிறது.
Nutmeg – Myristica fragrans) தேங்கமழ் பாதிரி எனச் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இம்மரம் ‘ஜாதிக்காய்’ என்ற பெயராலேயே பரவலாக அறியப்படுகிறது.
Marigold / French Marigold சாமந்திப்பூவின் ஒரு குறிப்பிட்ட வகையானது ‘துளுக்க சாமந்தி’ என அழைக்கப்படுகிறது. வரலாற்று ரீதியாக ஈரான் மற்றும் துருக்கி (துருக்கர்/துளுக்கர்) பகுதிகள் வழியே வந்த வர்த்தகத் தொடர்புகளால் இப்பெயர் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
அதேபோல Melia azedarach வேம்பு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவகை மரம் ‘தர்கா வேம்பு’ (மலபாரிக் வேம்பு என்ற வழக்கும் நிலவுகிறது. இதுவும் பெர்சியன் பகுதியிலிருந்து இங்கு வந்த தால் அவ்வாறு அழைக்ப்பட்டிருக்கலாம்.
Solanum virginianum என அறிவியல் பெயரால் குறிப்பிடப்படும் கண்டங்கத்திரி பறையன் கண்டங்கத்தரி எனவும் சாதிப் பெயரொட்டோடு சில பகுதிகளில் அழைக்கப்படுவதாக அறிகிறோம்.
அதேபோல Limonia acidissima எனப்படும் நல்விளா மரம் சில பகுதிகளில் பார்ப்பன விளா என அழைக்கப்படுகிறது.

அதேபோல Santalum album சந்தன மரம் சாதிச் சந்தனம் என அழைக்கப்படுகிறது.

Sterculia foetida குதிரைக் குளம்பன் மரம் பறையன் மரம் / பேய் மரம் எனவும் அழைக்கப்படுகிறது.

தெருக்களின் பெயர்களிலிருந்து ஜாதி வால்களை அறுத்தெடுப்பது போன்றே, அன்றாடப் பயன்பாட்டிலுள்ள தாவரங்களின் பெயர்களிலும் சங்க இலக்கியங்கள் வழங்கிய தளவம், பிச்சி, கொகுடி போன்ற தூய தமிழ் மரபுப் பெயர்களை மீட்டெடுத்துப் பயன்படுத்துவது பண்பாட்டுச் செழுமையை உயர்த்தும்.
மொழியும் சமூகமும் இயல்பான சமத்துவப் பாதையில் நடைபோட, இத்தகைய விழிப்புணர்வும் பெயரமைப்புகளின் மறுபரிசீலனையும் இன்றியமையாதவை.

சு பாரதிதாசன்

அருளகம் நாற்றுப்பண்ணை