ஊட்டி / கோயம்புத்தூர்: இயற்கையின் துப்புரவாளர்களாகச் செயல்பட்டு, இறந்த விலங்கினங்களின் உடல்களை உண்டு நோய்த் தொற்றுகளிலிருந்து மனிதர்களையும் வனவிலங்குகளையும் பாதுகாப்பதில் பாறுக் கழுகுகள் (Vultures) பெரும் பங்காற்றுகின்றன. பேரழிவின் விளிம்பிலுள்ள இந்த அரிய பறவைகளைப் பாதுகாப்பது குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் வார சனிக்கிழமை ‘பன்னாட்டுப் பாறுக் கழுகுகள் விழிப்புணர்வு நாளாகக்’ கடைப்பிடிக்கப்படுகிறது.
இதனையொட்டி, ‘அருளகம்’ அமைப்பு, ஊட்டி அரசு கலைக் கல்லூரியின் வனவிலங்கு உயிரியல் துறை மற்றும் ‘ஸ்டேட் ஸ்ட்ரீட்’ (State Street) அமைப்பின் தன்னார்வலர்களுடன் இணைந்து செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதி வரை நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது.
இளைய தலைமுறையினரிடம் பாறுக் கழுகுகள் குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வினாடி-வினா, பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலும் வளாகத்தில் அமைக்கப்பட்ட பதாகையில் பங்கேற்பாளர்கள் பாறுக் கழுகுகள் பாதுகாப்பிற்கான தங்களது ஆதரவை உறுதிமொழியாகக் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில் அருளகம் அமைப்பின் செயலர் சு.பாரதிதாசன், உயிரியல் துறைத் தலைவர் முனைவர் இராமகிருட்டிணன், அருளகத்தின் உயிரியலாளர் சுந்தரி ஆகியோர் பங்கேற்றுப் பாறுக் கழுகுகளின் சூழலியல் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு விளக்கினர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நீலகிரியின் சோலைக்காடுகளுக்குச் சொந்தமான ‘ரோடோடென்ட்ரான்’ (Rhododendron) மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டன. மேற்குத் தொடர்ச்சி மலையின் பல்லுயிர் வளம் குறித்துத் தன்னார்வலர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதோடு, கல்லூரி வளாகத்திலிருந்த ஆக்கிரமிப்பு அயல் தாவர இனங்கள் அகற்றிச் சீரமைக்கப்பட்டன.
செப்டம்பர் 6 அன்று ஆனைக்கட்டி கிராமத்தில், ‘பாறுக் கழுகுகளுக்குப் பாதுகாக்கப்பட்ட மண்டலம்’ (Vulture Safe Zone) உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், ‘Vulture Trophy’ கைப்பந்துப் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு சீகூர் வனச்சரகர் முன்னிலை வகித்தார். இளைஞர்களை விளையாட்டு மூலம் ஒருங்கிணைத்த இந்நிகழ்வில், இயற்கையாக இறக்கும் கால்நடைகளின் உடல்களைப் பாறுக் கழுகுகளுக்குப் பாதுகாப்பான உணவாகக் கிடைக்கச் செய்வது குறித்தும், இதற்குப் பொதுமக்கள் குறிப்பாகக் கால்நடை வளர்ப்போர் ஒத்துழைப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


பாறுக் கழுகுகளின் அழிவிற்கு முக்கியக் காரணியாக இருக்கும் ‘டைக்ளோஃபெனாக்’ (Diclofenac) போன்ற தீங்கு விளைவிக்கும் NSAID மருந்துகளைக் கால்நடைகளுக்குப் பயன்படுத்துவதைத் தவிர்க்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு மாற்றாக, பத்மஸ்ரீ Dr. புண்ணியமூர்த்தி அவர்களின் வழிகாட்டுதலில், ‘Your Farm’ நிறுவனம் தயாரித்த இயற்கையான மூலிகை சார்ந்த ‘Ethno-Veterinary Medicine (EVM) Kits’ கால்நடை வளர்ப்போருக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

நீலகிரிப் பகுதியை அதிகாரப்பூர்வமாகப் பாதுகாப்பான உயிர்க்கோள மண்டலமாக அறிவிக்க, வனத்துறை வழிகாட்டுதலின்படி இறந்த கால்நடைகளிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இம்மாதிரிகளைப் பத்திரமாகச் சேமிக்க IPAN அமைப்பிற்கு உறைவிப்பான் (Freezer) ஒன்று அருளகம் சார்பாக வழங்கப்பட்டது. அதனை அந்நிறுவனப் பொறுப்பாளர் நைஜல் ஆட்டர் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வுகள் அனைத்திலும் ஸ்டேட் ஸ்ட்ரீட் நிறுவனத்தின் தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
பாறுக் கழுகுகளைப் பாதுகாப்பது என்பது ஒரு தனிப் பறவையினத்தைக் காப்பது மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த இயற்கை உணவுச் சங்கிலியையும் மனிதகுலத்தின் சுகாதாரத்தையும் பாதுகாப்பதாகும் என்று அருளகத்தின் செயலர் சுட்டிக்காட்டினார்.