அருளகம் கோயம்புத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு தொண்டு நிறுவனமாகும். அரிதான, அச்சுறுத்தலுக்கு உள்ளான மற்றும் கவனிக்கப்படாத தாவர, விலங்கினங்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள், மக்கள் பங்கேற்கும் பாதுகாப்பு முயற்சிகள் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றில் கடந்த 25 ஆண்டுகளாக க் கவனம் செலுத்தி வருகிறது. மேலும், தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்திட்டங்களைச் செயல்படுத்தும் பதிவுபெற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் (NGOs) அருளகமும் ஒன்றாகும்.
தொலைதூரப் பழங்குடியின ஊரை நோக்கி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் (STR) மேற்கொண்டு வரும் பாதுகாப்புப் பணிகளின் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம் தாளவாடியில் உள்ள சோளகர் தொட்டி என்ற தொலைதூரக் கிராமத்தில் அருளகம் தன் பணிகளைச் செய்துவருகிறது. கர்நாடக எல்லையை ஒட்டி அமைந்துள்ள இக்கிராமம், அப்பகுதியில் உள்ள தமிழ்நாட்டின் எல்லைக் கிராமங்களில் ஒன்றாகும்..
இக்கிராமத்தில் சோளகர் பழங்குடியினத்தைச் சேர்ந்த சுமார் 65 குடும்பங்களும், 300 மக்களும் வசிக்கின்றனர். இச்சமூகத்தினருக்குத் தனியான மொழியும், சுற்றியுள்ள காடுகளோடு வலுவான பிணைப்பும் உள்ளது. இருப்பினும், இவர்களுக்கான கல்வி வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. 2025 ஆம் ஆண்டு வரை, இக்கிராமத்திலிருந்து ஆறு பேர் மட்டுமே கல்லூரிப் படிப்பை முடித்திருந்தனர்; அவர்கள் அனைவரும் மாணவிகள். பெரும்பாலான மாணவர்கள் பள்ளிப் படிப்பைப் பாதியில் கைவிட்டிருந்தனர். மூன்று மாணவர்கள் மட்டுமே கல்லூரி வரை சென்ற நிலையில், துரதிர்ஷ்டவசமாக அவர்களும் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டனர். பெரும்பாலான குடும்பங்கள் பருவகால விவசாயம், கால்நடை மேய்த்தல் மற்றும் கூலி வேலைகளையே நம்பி வாழ்கின்றனர்.
வாய்ப்பைக் கண்டறிதல் சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில் பணியாற்றியபோது, சமூக மற்றும் கல்விச் சூழல் காரணமாகப் பள்ளிப் படிப்பைப் பாதியில் கைவிட்ட பல இளைஞர்களை அருளகம் கண்டறிந்தது. ஒரு நிகழ்வில், 10-ஆம் வகுப்பு முடித்து 11-ஆம் வகுப்பில் சேர்ந்த இரு மாணவர்கள், ஆசிரியர் ஒருவர் நடத்திய விதம் காரணமாகச் சேர்ந்த மூன்றாம் நாளிலேயே படிப்பை நிறுத்தியது தெரியவந்தது.
முறையான திறன், அனுபவம் மற்றும் வேலைவாய்ப்புகள் இல்லாததால், பல இளைஞர்கள் பல ஆண்டுகளாக எவ்வித வேலையுமின்றி முடங்கிக் கிடந்தனர்.
அருளகத்தின் செயலாளரான திரு. சு. பாரதிதாசன் அவர்களுக்கு, பழங்குடியினர் நல இயக்ககம் மூலமாக வேலூரில் உள்ள நெட்டூர் டெக்னிக்கல் ட்ரெய்னிங் ஃபவுண்டேஷன் (NTTF) வழங்கி வரும் சிஎன்சி (CNC – Computer Numerical Control) இயக்கம் சார்ந்த டிப்ளமோ பயிற்சிப் பற்றித் தெரியவந்தது.
இப்பயிற்சி குறித்து மேலும் அறிய அருளகம் குழுவினர், NTTF அமைப்பின் திரு. ஞானவேல் அவர்களைத் தொடர்புகொண்டனர். 2026 ஆம் ஆண்டுக்கான பயிற்சியில் இந்த இளைஞர்களைச் சேர்க்க வேண்டும் என்று திரு. சு. பாரதிதாசன் முடிவெடுத்தார்.
அருளகம் குழுவைச் சேர்ந்த திருமதி R. சுந்தரி, திருமதி S. ரேவதி மற்றும் திரு E. ஜான் ஜேபஸ் ஆகியோர் இக்கிராமத்திற்குத் தொடர்ந்து சென்று, இளைஞர்களைச் சந்தித்து, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளவும் ஊக்கமளித்தனர்.
நம்பிக்கையுடனும் ஆர்வத்துடனும் திரு K. பசவண்ணா, திரு K. அர்ஜுன், திரு M. பிரபு மற்றும் திரு K. வேலு ஆகிய நால்வரும் விண்ணப்பித்து, இந்த ஆற மாத டிப்ளமோ பயிற்சிக்குத் தேர்வாகினர்.
அருளகம், ‘ஸ்டேட்ஸ்ட்ரீட் ஃபவுண்டேஷன்’ (State Street Foundation) அமைப்போடு இணைந்து, அந்த மாணவர்களைத் தங்கள் கோயம்புத்தூர் அலுவலகத்திற்கு அழைத்துப் பாராட்டி, வேலூர் புறப்படும் முன் ஊக்கமளித்தது. திருமதி கவிதா பாரதிதாசன் அவர்கள், அடுத்த ஆறு மாதங்களில் அவர்கள் சந்திக்கக் கூடிய சவால்கள் குறித்துப் பேசினார். ஸ்டேட்ஸ்ட்ரீட் நிறுவன தன்னார்வலர்களின் ஆதரவோடு பயணம், உணவு, பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியத் தேவைகளுக்கான நிதி உதவிகளை அருளகம் உறுதிசெய்தது.
சவால்கள் நிறைந்த தொடக்கம் அவர்களின் முதல் நாள் மிகவும் கடினமாக இருந்தது. வாழ்நாள் முழுவதும் குளிர்ந்த மலைப் பகுதியில் வாழ்ந்த அவர்களுக்கு, வேலூரின் வெப்பமும் புழுக்கமும் மிகுந்த சிரமத்தைக் கொடுத்தன; குறிப்பாக அவர்கள் கோடைகாலத்தில் அங்குச் சென்றிருந்தனர். மறுநாள் காலையில், அருளகம் குழுவைத் தொடர்புகொண்ட மாணவர்கள், வெயிலைத் தாங்க முடியவில்லையென்றும், கிராமத்திற்கே திரும்ப யோசிப்பதாகவும் கூறினர்.
உடனடியாகப் பணம் அனுப்பப்பட்டு, வெயில் காலத்திற்கு ஏற்ற இலகுவான ஆடைகளை வாங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். மேலும், வெப்பத்தைச் சமாளிக்கக் காலையிலும் மாலையிலும் குளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
மாணவர்கள் சில வாரங்கள் தொடர்ந்து படித்தாலும், அவர்களின் ஆரம்பகால ஆர்வம் குறையத் தொடங்கியது. உணவு, வெயில், தூக்கமில்லாத இரவுகள் மற்றும் புதிய சூழலோடு ஒன்ற முடியாமல் திணறினர். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, நால்வரும் வீடு திரும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
அவர்களின் சிரமத்தைப் புரிந்துகொண்ட திரு. ஜான், அம்மாணவர்களைச் சந்தித்து வார இறுதியில் சென்னைக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தார். சூடான வானிலைக்கு ஏற்ற புதிய ஆடைகள் மற்றும் மெல்லிய போர்வைகளை வாங்குவதற்கும் மாணவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.
வளாகத்திற்குத் திரும்பிய பிறகு, கோடைகால இரவுகளில் விடுதி மொட்டை மாடியில் தூங்குவது சற்றே வசதியாக இருப்பதை உணர்ந்தனர்.
துரதிர்ஷ்டவசமாக, வெப்பத்தின் காரணமாக உடலில் கொப்பளங்கள் ஏற்படுவதாகவும், காலநிலையைச் சமாளிக்க முடியவில்லை என்றும் கூறி வேலு இறுதியில் பயிற்சியிலிருந்து விலகினார்.
தரமான உணவிற்காகக் குரல் கொடுத்தல் மே 6 அன்று காலையில், மீதமிருந்த மாணவர்களுக்கு மற்றொரு சவால் காத்திருந்தது. காலை உணவின் போது, உணவில் புழுக்கள் இருப்பதைக் கண்டனர்.
அமைதியாக இருக்காமல், மாணவர்கள் பயிற்சி மையத்தின் முதல்வரை அணுகி, சத்தான மற்றும் சுகாதாரமான உணவை வழங்குமாறு கோரினர். இது குறித்து விசாரித்த முதல்வர், மாணவர்களின் புகார் உண்மையானது என்பதை உறுதிப்படுத்தினார். நிர்வாகம் உடனடியாக உணவுக் பட்டியலை மாற்றி, உணவின் தரத்தை உயர்த்தியது.
உணவுப் பிரச்சினையை வெற்றிகரமாகத் தீர்த்ததை மாணவர்கள் அருளகம் குழுவிடம் தெரிவித்தனர்.
மாணவர்கள் மாற்றத்தைக் கொண்டு வந்ததற்காக மட்டுமன்றி, அவர்கள் தங்களை அமைப்பாக்கிக் கொள்ளவும், தங்கள் கவலைகளை எடுத்துரைக்கவும், அதிகாரிகளைத் துணிச்சலுடன் அணுகவும் கற்றுக்கொண்டதை எண்ணி திரு. சு. பாரதிதாசன் பெரும் மகிழ்ச்சியடைந்தார்.
வளரும் தன்னம்பிக்கை ஜூன் 2026-இல், மீதமுள்ள மூன்று மாணவர்களுக்கும் சீருடைகள் மற்றும் காலணிகள் வழங்கப்பட்டன. அவர்கள் தங்களின் செய்முறைப் பயிற்சியைத் தொடங்க ஆர்வமாக இருந்தனர். ரீசார்ஜ் மற்றும் பிற அத்தியாவசியத் தேவைகளுக்காக அருளகம் ஒவ்வொரு மாதமும் நிதி உதவி வழங்கி வந்தது.
ஜூன் 8, 2026 அன்று, NTTF ஏற்பாடு செய்த கல்விச் சுற்றுலாவிற்கு மாணவர்கள் சென்றனர். இரண்டு உற்பத்தி நிறுவனங்களைப் பார்வையிட்ட மாணவர்கள், வேலூர் கோட்டை மற்றும் பொற்கோவிலையும் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றனர்.
இதற்குள் மாணவர்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழலுக்குப் பழகி, புதிய நண்பர்களைப் பெற்று, நிறுவனத்துடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டனர்.
மற்றொரு பின்னடைவு ஜூலை இறுதியில் மற்றொரு பின்னடைவு ஏற்பட்டது. திரு M. பிரபு 10-ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாததால், அவரைப் பயிற்சியிலிருந்து விலகுமாறு நிர்வாகம் கேட்டுக்கொண்டது.
சேர்க்கையின் போதே 10-ஆம் வகுப்பு தேர்ச்சி கட்டாயம் என்று NTTF தெரிவித்திருந்தது. இருப்பினும், ஒரு விதிவிலக்காக பிரபுவுக்கு வாய்ப்பளித்துச் சேர்த்திருந்தனர்.
இந்த முடிவால் ஏமாற்றமடைந்த போதிலும், திரு M. பிரபு கணிசமான தூரம் முன்னேறியிருந்தார். முதல் தலைமுறை கற்றல் சமூகத்தினர் சந்திக்கும் சவால்களையும், அவர்களுக்குத் தொடர்ச்சியான கல்வியும் சமூக ஆதரவும் வழங்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவரது அனுபவம் உணர்த்தியது.
ஒரு புதிய தொடக்கம் ஆகஸ்ட் 2026-க்குள், திரு K. பசவண்ணா மற்றும் திரு K. அர்ஜுன் ஆகிய இருவரும் படிப்பைச் சிறப்புடன் முடித்தனர்.
மேலும் மகிழ்ச்சியளிக்கும் விதமாக, இரு மாணவர்களுக்கும் பெங்களூரைச் சேர்ந்த AMS டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் மாதச் சம்பளத்துடன் கூடிய தொழிற்பயிற்சி (Internship) வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் அவர்களுக்கு மாதத்திற்குச் சுமார் ₹25,000 ஊதியம் கிடைக்கும். காஞ்சிபுரம் மண்டலத்தின் முக்கியத் தொழில் மையமான ஸ்ரீபெரும்புதூரில் இவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
ஒரு காலத்தில் பள்ளிப் படிப்பைப் பாதியில் கைவிட்டு, நிச்சயமற்ற எதிர்காலத்தைச் சந்தித்த இரு இளைஞர்களுக்கு இது ஒரு மகத்தான சாதனையாகும்.

பள்ளிப் படிப்பைக் கைவிட்டவர்களிலிருந்து தொழில் வல்லுநர்களாக பள்ளிப் படிப்பைப் பாதியில் கைவிட்டு, வேலைவாய்ப்போ மேல்முறையான கல்வியோ பெற முடியாத நிலையில் இருந்த இரண்டு பழங்குடியின மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற அருளகத்தின் முயற்சிகள் உதவியுள்ளன.
அவர்களின் பயணம் எளிதானதாக இருக்கவில்லை. கல்வி பின்னடைவுகள், சமூக அழுத்தங்கள், நிதி வரம்புகள், அறிமுகமில்லாத சூழல், கடுமையான வெப்பம், வீட்டின் நினைவுகள் மற்றும் ஊருக்குத் திரும்பும் எண்ணம் ஆகியவற்றை அவர்கள் கடந்து வர வேண்டியிருந்தது. இருப்பினும், தங்கள் சமூகம், அருளகம், NTTF ஆகியவற்றின் ஊக்கத்தினாலும், தங்களின் சுய முயற்சியினாலும் திரு K. பசவண்ணா மற்றும் திரு K. அர்ஜுன் ஆகியோர் உறுதியுடன் போராடி வெற்றி பெற்றனர்.
ஒரு வாய்ப்பை வழங்குவது என்பது வெறும் தொடக்கம் மட்டுமே என்பதை அவர்களின் கதை நினைவூட்டுகிறது. விளிம்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்குத் தொடர்ச்சியான வழிகாட்டுதல், நிதி உதவி, ஊக்கம் மற்றும் அவர்களின் திறனை நம்பும் மனிதர்கள் தேவைப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டின் மலைக் கிராமத்திலிருந்து உற்பத்தித் துறையில் காலடி எடுத்து வைக்கும் வரை, திரு K. பசவண்ணா மற்றும் திரு K. அர்ஜுன் ஆகியோர் பிரகாசமான, சுயசார்புள்ள எதிர்காலத்தை நோக்கிய முக்கியமான முதல் அடியை எடுத்து வைத்துள்ளனர்.


பள்ளிப் படிப்பைப் பாதியில் கைவிட்ட இருவரை, அருளகத்தின் தலையீடு திறமைமிக்க இளம் பணியாளர்களாக மாற்றியுள்ளது — இவர்களது பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளது.
இத் திட்டத்திற்குத் தொடர்ந்து வழிகாட்டி வரும் பழங்குடியினர் நல இயக்ககம், ஸ்டேட்ஸ்ட்ரீட் தன்னார்வலர்கள் மற்றும் அருளகம் குழுவினர், குறிப்பாக திரு E. ஜான், திருமதி S. ரேவதி மற்றும் திருமதி R. சுந்தரி ஆகியோருக்குத் திரளான நன்றிகள்.