Our Blog

நாற்றுப் பண்ணை அமைப்பு

ஏப்ரல் 7. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ஒன்றியம்  நல்லூர்  ஊராட்சியில்  வாழ்ந்து காட்டுவோம்  திட்டத்தில்  செயல்படும்  உற்பத்தியாளர் குழுவைச்  சேர்ந்த 20 மகளிர்களுக்கு அருளகம்  சார்பில்  நாற்றுப் பண்ணை அமைப்பது மற்றும்  நாற்று  உற்பத்தி செய்வது எப்படி என்பது குறித்துத்  தொழில் நுட்பப் பயிற்சி  அளிக்கப்பட்டது.  வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்  சமுதாய. தொழில்சார் வல்லுனர்  திருமதி  சந்திரா அவர்கள் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தார்.    நாற்றுகள்  உற்பத்தி செய்தலில்  விதை  சேகரிப்பு, விதை நேர்த்தி,  தாய்ப் பாத்தி அமைப்பு, மண் கலவை  முறை  மற்றும்  விதை நடுதல்,  தண்ணீர் தெளிக்கும் முறை குறித்து   அருளகத்தின் சார்பில்  திருமதி கவிதா  அவர்கள் விளக்கமளித்தார்.   அருளகம் செயலர் சு.பாரதிதாசன் நாற்றுப்பண்ணைக் கருவிகள் பராமரிப்பு பண்ணை நிர்வாகம் குறித்து விளக்கினார்.  அருளகத்தின் பொருளாளர் அமிர்தலிங்கம்  அவர்கள் நாற்று பண்ணை  வாழ்வதாரத்திற்கான தொழில்சார்  முறையாக. மேற்கொள்வது  குறித்து  விளக்கமளித்தார்.

Nursery System

காட்டின் குரல் - புத்தக விமர்சனம்

திரு. பா.சதீஸ் முத்து கோபாலின் "காட்டின் குரல்" புத்தக விமர்சனம்.

விமர்சனத்தை படிக்க இங்கே சொடுக்கவும்

மிகவும் உணர்வுப்பூர்வமாக அருமையாக எல்லோரையுமம் ஈர்க்கும்படி எழுதப்பட்டு இருந்தது. இதுவரை யாரும் இந்த நூலை இப்படி விமர்சித்து நான் வாசித்ததில்லை. உங்கள் எழுத்து என்னைப் பெருமைப்பட வைக்கிறது. மட்டற்ற நன்றி உங்களுக்கு

-சு.பாரதிதாசன்

Trident Pneumatic's Donation

கோயமுத்தூரிலிருந்து இயங்கி வரும் ‘ட்ரைடென்ட் நுமாடிக்’ நிறுவனம் அருளகத்திற்கு 5 இலட்சம் நன்கொடை வழங்கியுள்ளது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.  தமது நிறுவனத்தின் சமூக பொறுப்பின் கீழ் இந்தத் தொகையை வழங்கியமைக்காக  திருமதி சரஸ்வதி நடராஜன் அவர்களுக்கும் திரு கே.எஸ். நடராஜன் அவர்களுக்கும் அருளகம் தமது திரளான நன்றிகளை உரித்தாக்குகிறது. இத்தொகையைச் சரியான முறையில் பாறுக் கழுகுகளின் மேம்பாட்டிற்கு மக்களுடன் இணைந்து களப்பணியாற்றப் பயன்படுத்தப்படும் என உறுதியளிக்கிறோம்.

Vulture Survey

இதுகாறும் கருங்கழுத்துப் பாறுக் கழுகுகளின் கூடுகள் முதுமலைப் புலிகள் சரணாலயத்தில் மட்டுமே இருப்பது பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது அது சத்தியமங்களம் புலிகள் சரணாலயத்தில் முதல் முறையாக அருளகம் குழு பதிவு செய்துள்ளது என்பதை மகிழ்வுடன்  தெரிவித்துக்கொள்கிறேன். இது பத்தாண்டு தேடலுக்குப் பின்னர் கிடைக்கப்பெற்ற நல்வாயப்பு.

சத்தியமங்களம் பவானிசாகரிலிருந்து தெங்குமரகடாவை நோக்கிய அதிகாலைக் களப்பயணத்தின் போது  காலை 8.30 மணிக்கெல்லாம்  பாறுக் கழுகு கூட்டம் வானில் வட்டமடித்ததைப் பார்த்திருக்கிறேன். அந்தக் கூட்டத்தை எண்ணிப் பார்த்தபோது சுமார் 11 கழுகுகள் இருந்தன. முதலில் இவை முதுமலைப் பகுதியிலிருந்து கிளம்பி இந்த வேளையில் இரைதேட  வந்துவிட்டன என்று தான் எண்ணினேன். ஆனால் முதுமலைப் பகுதியிலும் காலை இதே நேரத்தில் வட்டமடித்ததைப் பார்த்தபோது, இந்தக்கூட்டம் அதுவல்ல என்றும் இவை வேறு ஒரு கூட்டமாக இருக்கும் என்றும் இவை இங்குதான் ஏதோ ஓர் இடத்தில் தங்கி இருக்கக்கூடும் என்றும் யூகித்தேன். அதற்கேற்றார்ப்போல பின்னர் ஒரு முறை மாலை நேரத்தில் சுமார் 5.30 மணிவாக்கில் தெங்குமரகடாவிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தபோதும், அதேபோல 11 எண்ணிக்கையிலான பாறுக் கழுகுகள் கூட்டம் வானில் வட்டமடித்ததைப் பார்த்தேன். அத்துடன் எனது எண்ணத்திற்கு வலுச் சேர்க்கும் விதமாக வனத்துறைப் பணியாளர்களும் கழுகுக்கூட்டை மலைமுகட்டில் பார்த்திருப்பதாகத் தெரிவித்தனர். 
அதனை உறுதிப்படுத்துவதற்காகப் பத்தாண்டுக்கு முன்னர் அதிகாலையில் கூழித்துறைப்பட்டிப் பகுதியிலிருந்து கிளம்பி கடுநடைப் பயணமாக மலை உச்சியை நோக்கி மெல்ல மெல்ல ஊர்ந்து நகர்ந்தோம். அங்குச் சென்று பார்த்தபோது, வேறு ஒரு வகைக் கழுகான, ராஜாளிக் கழுகுகளின் கூடு தான் தென்பட்டது. அது ஒருபுறம் மகிழ்ச்சியைத் தந்தாலும் நாம் தேடியது கிட்டவில்லையே என்ற ஏக்கமும் இருந்தது. வேறு சில நண்பர்களும் சென்று பார்த்துவிட்டு இராஜாளிக் கழுகுகளின் கூடு தான் இருக்கின்றன என்று கூறினர். சிலமுறை முயற்சித்தபோதும், பல்வேறு காரணங்களால் அப்பகுதியில் புதிய கூடுகள் ஏதும் பார்ப்பதற்கான வாய்ப்புக் கைகூடவில்லை. ஆனால் அது குறித்துத் தீவிரமாகத் தேடவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.Vulture Survey

ஆயினும் ஒவ்வொரு முறை தெங்குமரகடாவை நோக்கிச் சென்றபோதும் இந்த எண்ணம் எனக்குள் வட்டமடித்துக்கொண்டிருக்கும். அவற்றைப் பார்ப்பதற்கான வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்தேன். இந்தமுறை கணக்கெடுப்பிற்குச் செல்லும்போது, பார்க்காமல் விட்ட முகடுகளைத்  தேர்வு செய்தேன். என்னுடன் பறவை ஆர்வலரும் ஆராய்ச்சியாளருமான முனைவர் கிறிஸ்டோபர் அவர்களும் கலந்துகொண்டார்.

காலை எட்டுமணிக்கெல்லாம் மலையுச்சியில் இருந்தால் தான் அவை எங்கிருந்து கிளம்புகின்றன என்பதைப் பார்க்கமுடியும் என்று முடிவுசெய்து கிளம்பினோம். ஆயினும் மலை உச்சிக்குச் சென்று சேர்ந்தபோது மதியம் 11 மணியாகிவிட்டது.  எனது எண்ணம் ஈடேறவில்லையே என வருத்தப்பட்டேன். ஆயினும் ஒரு மலையுச்சியை நோக்கி எனது கண்களைத் திருப்பியபோது, வெண்ணிறப்படிவுகள் அள்ளித்தெளித்தாற்போலக் கண்ணில் பட்டன. ஆகா இது ஏதோ ஒரு கழுகின் கூடாக இருக்கவேண்டுமே என்று எண்ணித் தொலைநோக்கியைத் திருகி உற்றுப் பார்த்தபடி இருந்தேன். அப்போது ஒரு பறவை இறங்கி அங்குபோய் உட்கார்ந்தது. உச்சிவேளையில் அடித்த எதிர் வெயிலும் பாறையிலிருந்து கிளம்பும் தகிப்பும் கண்களைக் கூசச் செய்ததால் என்னால் சரிவரப் பார்க்கமுடியவில்லை. இன்னும் சிறிது ஏறிச்சென்று பார்க்கலாம் என்று நினைத்தபோது,  மலை மிகவும் சரிவாக இருந்ததால் ஏறிச் செல்ல முடியவில்லை. ஆயினும் ஒருவாறாக குச்சியின் உதவியுடன் ஒரு இடத்தை அடைந்து  சென்று பார்த்தபோது, பறவை அமர்ந்திருந்தது தெரிந்தது.அரசல்புரசலாக அது கருங்கழுத்துப் பாறுக்கழுகாக இருக்கலாம் என்று யூகித்தேன். ஆயினும் சரிவரத்தெரியவில்லை. ஏறிச்சென்ற களைப்பில் பசி எடுத்தது. அங்கேயே அமர்ந்து கொண்டுசென்ற எலுமிச்சைச் சோற்றை உண்டுகொண்டே அந்த முகட்டைப் பார்த்துக்கொண்டிருந்தேன். உணவுண்டுவிட்டு அருகே இருந்த புல்லில் கையைத் துடைத்துவிட்டு இருந்த தண்ணீரைக் கொஞ்சூண்டு குடித்துவிட்டு விராலிப்புதரின் நிழலில் தலைசாய்த்து அந்த முகட்டையே பார்த்துக்கொண்டிருந்தேன். இன்னொரு கழுகும் அதே இடத்தில் இறங்கியது. சந்தேகமில்லை. கருங்கழுத்துப் பாறு தான். அதன் தாடைப்பையில் இரையைச் சேமித்து எடுத்து வந்திருக்கக்கூடும். பார்த்தவுடன் மகிழ்ச்சிப் பிரவாகம் என்னுள் எடுத்தது. பத்தாண்டு எதிர்பார்ப்பு நிறைவேறியது. உண்மையில் ஒருபுறம் மகிழ்ச்சியைத் தந்தாலும் மறுபுறம் இந்த இனம் பெருகிவருவதற்கேற்ப அவற்றின் இரைக்குத் தட்டுப்பாடு இல்லாமலும் கிடைக்கும் இரை அவற்றுக்கு ஆபத்தை ஏற்படுத்தாமலும் இருக்கவேண்டும் என்றும் மனதார விரும்பினேன்.
சத்தியமங்களம் பகுதியில் கூடு பார்க்கப்பட்டது குறித்து வனத்துறை உயரதிகாரிகளுக்கும் தெரிவித்தேன். அவர்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அத்துடன் இந்தக் கூட்டை யாரும் தொந்தரவு செய்யாவண்ணம் பாதுகாக்கவேண்டும் என்ற அக்கறையையும் வெளிப்படுத்தினர்.

இதுகாறும்  பாறுக் கழுகுப் பாதுகாப்பு மண்டலம் முதுமலையை மையமாக வைத்தே வரையப்பெற்றது. இனி சத்தியமங்களம் பவானிசாகரை மையமாக வைத்து வேலைத்திட்டத்தை முடுக்கவேண்டும் என்றும் உறுதியெடுத்துள்ளோம். பயணம் தொடர்கிறது...

Cascade training

Day 1 (15-03-2023) 
Namakkal District

Cascade training on BMW for the doctors of the Namakkal District Health Service Centre was conducted on 15-03-2023. 

Mr. Amithalingam, Arulagam, explained the BMW Rules and laws. Further, he organised an activity-based training on the segregation of BMW. 

Mr. Mani, the trainer, highlighted the need for the safe disposal of Biomedical wastes, using a Powerpoint.  

Mr. John emphasised the do's and don’ts of handling the BMW and he also sensitised to avoid pilferage during intra-mural and extra-mural transportation.

Suggestions and feedback were collected from the participants. We witnessed enthusiastic participation among the participants.

Training for other target audiences viz., staff nurses, health workers and lab technicians will continue till 18 March 2023 Saturday.  

Report by Arulagam. 
15 March 2023

Cascade Training  Cascade Training

12th Annual SAVE Meeting

பாறுக் கழுகுகள் பாதுகாப்பிற்கென ஒருங்கிணைக்கப்படும் 12வது ஆண்டுக் கூட்டம் நேபாள நாட்டில் 
நாவல்பூர் மாவட்டத்திலுள்ள சித்துவான் தேசியப்பூங்காவில் கடந்த மூன்று நாட்களாக  (9 லிருந்து 11 -3- 2023) வரை நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேசு, மியான்மர், கம்போடியா, அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து பாறுக் கழுகுகள் தொடார்பாக ஆராய்ச்சியிலும் பாதுகாப்பிலும் ஈடுபட்டுவரும் 45க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வை நேபாள பறவைகள் பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைத்தது. 
இதில் அருளகம் சார்பாக நானும் பேச அழைக்கப்பட்டேன். எனது உரையில் வெவ்வேறு தரப்பு மக்களிடம் எவ்வாறு அருளகம் களப்பணியாற்றி வருகிறது என்பதை எடுத்துரைத்தேன். அத்துடன் இந்தியாவுக்கே முன்மாதிரியாக தமிழ்நாட்டு அரசால் எடுக்கப்பட்டக் கொள்கை முடிவுகளையும் குறிப்பிட்டேன். அருளகத்தின் முன்னெடுப்புகளையும் தமிழ்நாட்டு அரசின் முன்முயற்சியையும் வெகுவாகப் பாராட்டினர். நிகழ்ச்சியில் முத்தாயப்பாக உலகிலேயே பாறுக்கழுகுகளுக்கான முதல் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக சித்வான் பகுதி அறிவிக்கப்பட்டது. இப்பகுதியை மக்கள் பங்கேற்புடன் பாதுகாக்கப்ட்ட பகுதியாக உருவாக்கத் தன்பகதூர் சவுத்ரி மற்றும் கிறிஸ்னா பூசல் ஆகியோர் முயற்சி மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் வெளிப்பாடாக கூண்டில் அடைக்கப்பட்டிருந்த பாறுக் கழுகுகள் பறக்கவிடப்பட்டன. நிகழ்வில் ‘பாறுக் கழுகுகளைத் தேடி’ என்ற எனது நூலையும் வழங்கினேன்.எனது புத்தகத்தின் முகப்புரையில் தன்பகதூர் சவுத்ரி மற்றும் கிறிஸ்னா பூசல்  ஆகிய இருவர் பெயரையும் குறிப்பிட்டு அவர்களுக்கும் புத்தகத்தைக் காணிக்கையாக்கி இருப்பதைத் தெரிவித்தபோது நெகிழ்ந்துபோயினர். நிகழ்ச்சியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும் கலந்துகொண்டார். சேவ் அமைப்பின் பொறுப்பாளர் ரைஸ்கீரீன் மற்றும் மேற்பார்வையாளர் கிறிஸ்பௌடன் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். தமிழ்நாட்டிலும் பாறுக் கழுகுகளுக்கென பாதுகாக்கப்பட்ட மண்டலம் ஒன்று உருவாக வேண்டும். அதை நோக்கி அருளகம் உங்கள் அனைவரது ஆதரவோடும் முன்னெடுக்கும்.

Save meeting   Save annual meeting

SAVE Partners Meeting Agenda

Jharkhand Visit

ஜார்கண்டு மாநிலத்தின் மல்லுயிர் வகைமை வாரியத்தின் தலைவர் திருமிகு ரவி சிங்கால் அவர்கள் என்னைத் தொலைபேசியில் அழைத்து வரும் பிப்ரவரி 10 அன்று ஜார்கண்ட்டு மாவட்ட வன அலுவலர்களிடம் பாறுக் கழுகுகள் பாதுகாப்பு குறித்து  உரையாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவர் அழைத்த பொழுது நான் முதுமலையில் களப்பயணத்தில் இருந்தேன். அவர்தம் அழைப்புக்கு நன்றியும் மகிழ்ச்சி தெரிவித்தேன். மேலும் ஜார்க்கண்ட்டு மாநிலத்தில் பாறுக் கழுகுகள் பாதுகாப்புக்காக வேலை செய்துவரும் நியோஹூமன் பவுண்டேசன் நிறுவனரான முனைவர் சத்யபிரகாசு அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டு அவர் என்னை விடப் பொருத்தமானவராயிருப்பார் எனவும் கூறினேன். 

உங்கள் செயல்பாடு குறித்து வாசித்தறிந்தேன்.நீங்கள் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தகுந்த பணி ஆற்றிவருவதப் பற்றிக் கேள்விப்பட்டேன்.  அதை இங்குள்ள வனத்துறை அலுவலர்களிடம் பகிர்ந்து கொண்டால் உந்துதலாய் இருக்கும் என மறுமொழி கூறினார். ஒருபுறம் அவர் அழைப்பு எனக்கு மகிழ்ச்சியாயிருந்தாலும் மறுபுறம் உள்ளூரில் ஒருவர் இருக்க என்னை மட்டும் அழைத்தது என்னைத் தர்ம சங்கடத்துக்கு ஆட்படுத்தியது.

‘ஜார்க்கண்டு’ என்ற சொல்லுக்குக் காட்டு நிலம் எனப் பொருள். ஜார்க்கண்டு மாநிலத்திற்குச் செல்வது எனக்கு இது முதல்முறைப் பயணம். ஜார்க்கண்டு மாநிலப் பழங்குடியினர் குறித்தும் பழங்குடியினத் தலைவரான பிர்சா முண்டா அவர்கள் குறித்தும் இருபது ஆண்டுகட்கு முன்னர் வாசித்திருக்கிறேன். ஆங்கிலேயர்களின் துப்பாக்கிக் குண்டுக்கு எதிராக வில் அம்பைக் கொண்டு போராடியது குறித்துப் படித்து நெகிழ்ந்திருக்கிறேன். அதேபோல ஜார்க்கண்டு மாநிலத் தலைநகரான ராஞ்சி என்ற பெயர் எனக்குப் பள்ளிக் காலங்களில் ராஞ்சிக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் என்ற பெயரில் அறிமுகமாகியிருந்தது. இப்போது தான் அந்த மண்ணைத் தொடும் வாய்ப்புக் கிடைத்தது.

இந்தக் கருத்தரங்கமானது பல்லுயிர் வகைமைச் சட்டத்தைத் மாநிலத்தில் திறம்படப் பயன்படுத்துவது குறித்தும் அதன் பயனை உள்ளூர் மக்களும் பெறுவது எப்படி என்பது குறித்தும் வனத்துறை அலுவலர்களுக்குத் தெரிவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மாநிலமெங்கிலிருந்தும் 40க்கும் அதிகமான வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருமிகு L.Khiangte கூடுதல் தலைமைச் செயலர், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை நிகழ்ச்சியில் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் பேசும்போது, இளைஞர்களிடம் சூழல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும் ஒவ்வொரு நாளும் காட்டுப் பகுதியைப் பிற பயன்பாடுகளுக்கு மாற்றக்கோரி கடிதம் மூலமும் தொலைபேசி வாயிலாகவும் வனத்துறைக்கு அழுத்தம் தரப்படுவது குறித்தும் வருத்தமுடன் குறிப்பிட்டார்.  அவர் உரையைத் தொடங்கும்போது தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த எனது பெயரையும் மறக்காமல் குறிப்பிட்டார். பல்லுயிர் வகைமை வாரியத் தலைவர் திருமிகு ரவி சிங்கால் நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றினார். மாநிலத் தலைமை வனப்பாதுகாவலர் திருமிகு சஞ்சய் சீரிவத்சா அவர்கள் தொடக்க உரையாற்றினார். கூட்டத்தில் ஓய்வு பெற்றத் தலைமை வனப்பாதுகாவலர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். பல்லுயிர் வகைமைச் சட்டத்திலுள்ள வரவேற்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் இன்னும் கூடுதலாகக் கவனிக்கப்பட வேண்டியது குறித்தும் திருமிகு சீனிவாச மூர்த்தி அவர்கள் கவனப்படுத்தி உரையாற்றினார்.

எனது உரையினை  உள்ளூர்ப் பழங்குடி மொழியில் ’ஜோகார்’ என வணக்கம் கூறித் தொடங்கினேன். அவர்களுடன் தமிழ் நாட்டில் வனத்துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை ஆகியவற்றின் ஒத்துழைப்போடு அருளகம் மேற்கொண்டு வரும் பணிகளைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அத்துடன் உள்ளூரில் பாறுக் கழுகுப் பாதுகாப்பிற்காக வேலை செய்துவரும் நியோஹூமன் பவுண்டேசன் நிறுவனர் சத்யப்பிரகாசு அவர்களைப் பற்றியும் மறக்காமல் குறிப்பிட்டேன்.

பாறுக் கழுகுகள் குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக வாலிபால் போட்டி நடத்தி வருவதைக் குறிப்பிட்டு நீங்கள் உங்கள் பகுதிக்குப் பொருத்தமாகக் கிரிக்கெட் போட்டி நடத்தலாம் எனவும் மண்ணின் மைந்தரான கிரிக்கெட் புகழ் திரு தோனி அவர்களை அதற்குத் தூதுவர்களாகப் பயன்படுத்தலாம் எனவும் எனது உரையில் குறிப்பிட்டேன். மேலும் அண்மையில் ஜார்க்கண்டு மாநில முதல்வர் அவர்கள் மாண்புமிகு இந்திய அரசின் தலைமை அமைச்சருக்கு எழுதியக் கடிதத்தை எடுத்துக் காட்டி அதில் பழங்குடியினர் நலம் பாதிக்கப்படுவது குறித்துச் சுட்டிக் காட்டி எழுதியமைக்காக எனது தனிப்பட்ட வாழ்த்தையும் தெரிவித்தேன். என்னை உரையாற்ற அழைத்தமைக்காக நன்றியும் தெரிவித்தேன்.

அடுத்தநாள் களப்பயணமாக ஹசாரிபாக் எனும் மாவட்டத்திற்குச் சென்றிருந்தேன். வழியெங்கும் முருக (இலைப்பொரசு) மரங்களும் மஞ்சள் இலவு மரங்களும் பூத்துக் குலுங்கின. கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது. என்னுடன் காட்டுயிர் நிறுவனத்தில் ஆய்வாளராக இருக்கும் இளைஞர்கள் தீபக்கும் விக்னேசும் கலந்து கொண்டனர். அவர்களிடம் உரையாடியது எனக்கு உற்சாகமாய் இருந்தது. சத்யபிரகாசு அவர்கள் அதிகாலையில் என்னை அழைத்துச் சென்று பாறுக் கழுகுகள் முன்னர் கூடமைத்திருந்த தைல மரத்தைக் காட்டினார். அம்மரங்களை வெட்ட முயற்சித்தது குறித்தும் அதைத் தடுக்கத் தான் மேற்கொண்ட முயற்சி குறித்தும் என்னிடம் பகிர்ந்துகொண்டார். அடுத்ததாக பாறுக் கழுகுகள் பனை மரத்தில் கூடமைத்திருந்ததைக் கேள்விப்பட்டு அங்கு சென்றோம். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. மேலும் அலைந்தும் பாறுக் கழுகுகள் ஏதும் தென்படவில்லை. ஆயினும் வேறு வகைப் பறவையினங்கள் புதிதாகப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.

ஹசாரிபாக் மேற்கு மண்டலத்தின் வன அலுவலர் திருமிகு ஆலம் அன்சாரி அவர்களைச் சந்தித்து எனது பயணத்திற்கு உதவியமைக்கு நன்றி தெரிவித்து விட்டு வந்தேன். 

ராஞ்சி செல்லும் வழியில் குப்பைக் கிடங்கின் அருகில் வண்டியை நிறுத்தச் சொன்னேன். அங்கு காலாவதியான மாத்திரைகள் மருந்துகள் எல்லாம் கொட்டப்பட்டுக் கிடந்தன. குப்பைக் கிடங்கில் மைனா, வாலாட்டி, கொக்கு, சிட்டுக்குருவி, கரும்பருந்து ஆகியன இரை தேடியபடி இருந்தன. இந்த மருந்துகள் எல்லாம் மழை பெய்யும்போது தண்ணீரில் அடித்துச் சென்றால் அதைப் பறவைகளும் விலங்குகளும் குடித்தால் என்னாகுமோ என்ற அச்சம் மேலிட்டது.  கடந்தவாரம் இதேபோல மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் காலாவதியான மருந்துகள் கொட்டப்பட்ட செய்தி நாளிதழில் வந்ததையும் இணைத்துப் பார்த்தேன். 

ஜார்க்கண்டு மாநிலம் இயற்கை வளங்கள் நிறைந்த பகுதி. ஆயினும் மக்கள் வறுமையில் உழல்கின்றனர். நிலக்கரி, மைக்கா, இரும்புத்தாது எடுக்கும் பொருட்டுக் காட்டுப் பகுதிகள் தொடர்ந்து அழுத்தத்திற்கு ஆட்பட்டு வருகின்றன.  வனவிலங்கு நடமாட்டமற்றக் காட்டுப்பகுதியாக மாறி வருகின்றன. இங்குள்ள மக்களும் தங்கள் வாழ்வாதாரங்களுக்கு வனத்தையே நம்பியுள்ளனர். மக்கள் பங்களிப்பு இல்லாமல் அவர்களது வறுமையைப் போக்காமல் காட்டையும் காட்டுயிர்களையும் காப்பாற்ற முடியாது. இது இந்தியா முழுமைக்கும் பொருந்தும்.

இன்னும் நாம் களப்பணியாற்ற வேண்டியதும் பயணிக்க வேண்டியதும்  அதிக தொலைவு என்பதை உணர்ந்து திரும்பினேன்.

பாறுக் கழுகுகள் செழித்தால் பாரும் செழிக்கும்

’பாறு’ எனச் சங்கத் தமிழிலும் இருளர் பழங்குடியினராலும் ’பத்’ எனத் தோடர் மக்களாலும் ‘ரணபத்து’ எனப் படுகு மக்களாலும் ’பிணந்தின்னிக் கழுகு’ எனச் சமவெளி மக்களாலும் அழைக்கப்படும் பறவை இனம் இறந்த விலங்குகளை உண்டு காட்டைத் தூய்மைப் படுத்துவதோடு நமக்கும் நோய்நொடி பரவாமல் காக்கும் அருமையான பணியினைச் செய்து வருகிறது. 
பாறுக் கழுகுகள் தற்போது மிகவும் அரிதாகி விட்டன. அவற்றை அழிவிலிருந்து மீட்க மண்ணின் மைந்தர்களோடும் பல்வேறு தரப்பினருடனும் இணைந்து வனத் துறை, கால்நடைத் துறை, மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை, மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் வழிகாட்டுதலோடு அருளகம் அமைப்பு முனைப்புடன் செயலாற்றிவருகிறது. 

 

கால்நடைகளுக்குப் பயன்படுத்திய வலி மருந்துகளின் வீரியமானது இறந்த மாட்டை உண்டபோது இவற்றை அடைந்து இப் பறவைகளின் அழிவிற்குப் பெரிதும் காரணமாய் அமைந்தது.

Vulture conservation

எனவே இப் பறவைகளுக்குத் தீங்கு செய்யும் கால்நடை மருந்துகளான டைக்குளோபினாக், அசிக்குளோபினாக், நிமுசிலாய்ட்ஸ், புளூநிக்சின், கீட்டோபுரோபேன் ஆகிய மருந்துகளைப் புறக்கணிக்கக் கோரியும் பாதுகாப்பான மாற்று மருந்துகளான மெலாக்சிகம்,  டோல்பினமிக் ஆசிட் மருந்துகளையும் சித்தா ஆயுர்வேதா, ஹோமியோ ஆகிய மருந்துகளைப்  பயன்படுத்தக் கோரியும் பல்வேறு வகையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அத்துடன் இப் பறவைகளின் அழிவிற்குக் காரணமான விசம் தடவப்பட்ட சடலங்களை உண்ண நேர்வதால் அவை அழிவுக்கு ஆட்பட்டு வருவதைப் பற்றியும் இயற்கையாக இறந்த விலங்குகளைப் புதைக்காமலும் எரிக்காமலும் பாறுக் கழுகுகளுக்கு உணவாக்க வேண்டுகோள் விடுத்தும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

Vulture conservation

அதன் தொடர்ச்சியாக இன்றும் நாளையும் (08 & 09 -02-2023) பொம்மலாட்டம் மூலம் எப்பநாடு, கூக்கல் துறை, சின்னக் குன்னூர், உல்லத்தி ஆகிய ஊர்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். நாம் வாழும் பகுதியைப் பாறுக் கழுகுகள் செழித்து வாழும் பகுதியாக மாற்ற ஆதரவு நல்குவீர். இறந்ததைத் தின்று இருக்கும் உயிரினங்களைக் காக்கும் பாறுக் கழுகுகள் செழிக்கட்டும்.

8th Annual day of Vanam India Foundation

Vanam India Foundation     Vanam India Foundation

    Vanam India Foundation     Vanam India Foundation

Subcategories

Page 13 of 24

logo

'Arulagam' was founded in 2002 as a non-profit organisation in honour and memory of Mr. Arulmozhi, who inspired many of his friends, including ourselves – the members of Arulagam – through his commitment to environmental conservation. We believe that regardless of its value to humanity, every form of life and its ecosystem is unique.

Reach Us