கடலோர மணல் மேடுகளைப் பசுமை போர்வையால் காக்கும் அருளகம் – “சிறந்த சமூக சேவை” விருது பெற்றது | March 2026
இராமேஸ்வரம் தீவில் உள்ள மணல் மேடுகளைப் பசுமைப் போர்வையால்பாதுகாக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக (UNDP-GEF-SGP-TERI) அமைப்பின் ஆதரவுடன் ராமேஸ்வரம் பகுதியில் ஊர் மக்களுடன் இணைந்து அருளகம் அமைப்பு முன்னெடுத்து வருகிறது.
இத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இராமேஸ்வரம் தீவில் உள்ள பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும், நெய்தல் நாற்றுப்பண்ணை உருவாக்கி, அதில் வளர்க்கப்பட்ட உள்ளூர் நாட்டு மரங்கள், மரச்செடிகள் மற்றும் கொடிவகை தாவரங்கள், ஐம்பது ஹெக்டேருக்கும் மேற்பட்ட மணல் மேடுகளை பாதுகாக்கும் பொருட்டு நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
அருளகம் அமைப்பின் இம்முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், இராமேஸ்வரம் தீவில் அமைந்துள்ள அன்னை ஸ்கொலஸ்டிகா கலை அறிவியல் (Annai Scholastica Arts and Science College for Women) மகளிர் கல்லூரியின் 28.03.2026 அன்று கல்லூரியின் நான்காம் ஆண்டு விழாவில், அருளகம் அமைப்பிற்கு "சிறந்த சமூக சேவை" விருது வழங்கப்பட்டது.

இந்த விருதை மதர் ஜெனரல் அமுதா தியோஷ் வழங்கினார். இந்நிகழ்ச்சி கல்லூரி செயலாளர் அருட்சகோதரி ரூபி தலைமையில் நடைபெற்றது. மேலும், கல்லூரி முதல்வர் அருட்சகோதரி Dr. Anne Perphet Sophie மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி ஒருங்கிணைப்பாளர் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ் விருதை திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. முஹம்மது ஷாஹித் மற்றும் நெய்தல் நாற்றுப்பண்ணையின் பணியாளர்கள் திருமதி. முருகராணி, திருமதி. ஜெயலட்சுமி, திருமதி. இராஜேசுவரி, திருமதி. சீதா மற்றும் திருமதி. மகேசுவரி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இவ் விருது, அருளகம் அமைப்பு மேற்கொண்டு வரும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளை பாராட்டும் விதமாக வழங்கப்பட்டது.
இந்த முயற்சியை அங்கீகரித்து, விருதை வழங்கிய அன்னை ஸ்கொலஸ்டிகா மகளிர் கல்லூரி நிர்வாகத்திற்கு அருளகம் அமைப்பு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
