இராமேஸ்வரத்தில் பனை விதை மற்றும் மரக்கன்றுகள் நடவு நிகழ்ச்சி | இராமேஸ்வரம், அக்டோபர் 28
கோயமுத்தூர் சார்ந்த அருளகம் (இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு), ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) மற்றும் டெரி (TERI) நிறுவனங்களின் ஆதரவுடன், ஒன்றிய மற்றும் மாநில அரசின் மேற்பார்வையில் இராமேஸ்வரம் தீவில் மணல் மேடுகளைப் பாதுகாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மணல் மேடுகளுக்கே உரிய தாவரங்கள், செடிகள், கொடிகள் மற்றும் மரங்களை நட்டு அவற்றைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, இராமேஸ்வரம் நகராட்சி, நம்புநாயகி அம்மன் நீரேற்று நிலையப் பகுதியில், நகராட்சி ஆணையாளர் மற்றும் பொறியாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இன்று (அக். 28) அருளகம் (இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு) மற்றும் அன்னை ஸ்கொலாஸ்டிக்கா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடவு மேற்கொண்டது.


நிகழ்ச்சியில் அருளகத்தின் பொருளாளர் திரு. அமிர்தலிங்கம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து தாவரவியல் நிபுணர் திரு. யசோக் குமார் சிவசுப்பிரமணியம் அவர்கள் மணல் மேடுகளில் காணப்படும் தாவரங்களின் முக்கியத்துவம் மற்றும் அவை சார்ந்த பல்லுயிர் சூழலின் அவசியத்தைப் பற்றி விளக்கமளித்தார். பின்னர் திட்ட அலுவலர் திரு. நடராஜன் அவர்கள் மாணவிகளுக்கு நடவு முறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தார். பின்னர் மணல்மேடுகள் பாதுகாப்பு உறுதி மொழியும் ஏற்றுக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, மணல் மேடு பாதுகாப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. முஹம்மது ஷாஹித் அவர்களின் தலைமையில், அருளகத்தின் நெய்தல் நாற்றுப்பண்ணைப் பணியாளர்கள் மற்றும் மாணவிகள் இணைந்து இரண்டு அணிகளாகப் பிரிந்து பனை விதை மற்றும் மரக்கன்று நடவுப் பணிகளை மேற்கொண்டனர். இந்நிகழ்வில் சுமார் 2000 பனை விதைகள் மற்றும் 400 மரக்கன்றுகள் நம்புநாயகி அம்மன் நீரேற்று நிலையம் அருகிலுள்ள மணல் மேடுகளில் நட்டனர்.

இந்த நிகழ்வில் 130-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு மணல்மேடுகள் பாதுகாப்பு பணிகளில் தங்களது பங்களிப்பை வழங்கினர்.


