பாறு கழுகுள் நாள் விழா இராமதேவர்பெட்டா சரணாலயம், கர்நாடகா | Sept 2025 #vultureday25
கர்நாடகா மாநில வனத்துறையும் மக்கள் அமைப்புகளும் இணைந்து பாறு கழுகுள் நாள் விழாவை இராமதேவர்பெட்டா சரணாலயத்தில் நடத்தியது. மாநில முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (காட்டுயிர்) திரு. பிரபாசு சந்திர ராய் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக முனைவர் விபுபிரகாசு, (ஓய்வு பெற்ற துணை இயக்குநர், பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகம ), திரு. கிறிஸ்போடன் (திட்ட மேலாளர், ஆசியளவிலான பாறு கழுகுகளைப் பாதுகாக்கும் திட்டம்) , கால்நடை மருதுவர் தேவஜித்தாசு, உயிரியலாளர் திரு. சத்யபிரசாத் ஆகியோரை அழைத்திருந்தனர். தமிழ்நாட்டில் சிறப்பாகக் களப்பணி ஆற்றிவருவதற்காக அருளகம் சார்பாக என்னையும் அழைத்திருந்தனர்.

எனது உரையில் பாறு கழுகுகளுக்கென இந்திய அளவில் முதல் சரணாலயத்தினை அமைத்ததற்காக கர்நாடகாஅரசைப் பாராட்டினேன். அத்துடன் கர்நாடகாவில் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து பாடுபட்டு வருவதையும் அருளகம் அமைப்பு அவர்களுடன் இணைந்து வேலை செய்துவருவதையும் குறிப்பிட்டேன். பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் பாஸ்போர்ட், விசா தேவையில்லை மற்றும் மாநில எல்லைப் பிரச்சினை இல்லை என்பதையும் நாம் தேநீர் அருந்தும் நேரத்தில் அவை எல்லை தாண்டிச் செல்லும் எனவே நாம் அனைவரும் இணைந்து வேலைசெய்யவேண்டும் என்பதனையும் எடுத்துரைத்தேன். அத்துடன் பாறு கழுகினங்களைப் பாதுகாக்கத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளையும் பாராட்டிப் பேசினேன். எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வரும் வேளையில் பல்வேறு தரப்பு மக்களையும் எப்படி அனுக என்ன உத்தியைக் கையாண்டோம் என்ற வகையில் எனது உரை அமைந்திருந்தது அவர்களை வெகுவாகக் கவர்ந்தது. கால்நடை வளர்ப்போருடன் இணைந்து வேலைசெய்தால் தான் பாறு கழுகுகளைப் பாதுகாக்கமுடியும் என்று குறிப்பிட்டு எனது உரையை நிறைவு செய்தேன்.
கர்நாடகா பாறு கழுகுகள்பாதுகாப்பு அறக்கட்டளை, ரோட்டரி கிளப் Environmental Management & Policy Research Institute, Wildlife Awareness and Reptile Conservation, உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
இராம்தேவர்பெட்டா (இராம் நகராவைப்) பற்றிய சிறு குறிப்பு;
ஆசியாவிலேயே பட்டுக்கூடு விற்பனைக்கான பெரிய சந்தை இங்கு தான் உள்ளது. பெங்களூரிலிருந்து 40 மைல் தொலைவில் குன்றுகளும் முகடுகளும் வெளிகளும் எழில் சூழ அமைந்துள்ள இங்குதான் அமிதாப்பச்சன் நடித்த சோலே படமாக்கப்பட்டது. அதனால் இவ்விடம் வார இறுதிச் சுற்றுலா செல்ல விருப்பமான இடமாக இருந்து வருகிறது. இவ்விடத்தை சினிமா நகரம் அமைக்கத் திட்டமிட்டனர். சரணாலயம் அமைத்ததன் மூலம் அந்த இடம் தப்பியது. தொடர்ந்து பல்வேறு வகையிலும் மேம்பாடு வளர்ச்சி என்ற பெயரில் குறிவைக்கப்படுகிறது.
இயற்கை தான் இறுதியில் வெல்லும். ஆயினும் அதன் தாக்கம் எளிய மனிதர்களையும் காட்டுயிர்களையும் தான் உடனடியாகப் பாதிக்கும் என்பது உண்மை. இயற்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் மூலம் இது போன்ற இடங்கள் காப்பாறப்படும் என்று நம்புவோம்.

