கழுகுகளைக்காக்க கால்நடை வளர்ப்போருடனும் கால்நடைகளுக்குச் செயற்கை கருவூட்டல் செய்யும் முகவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் | Sept 2025 | #vultureday25
கால்நடை வளர்ப்போருடனும் கால்நடைகளுக்குச் செயற்கை கருவூட்டல் செய்யும் முகவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் இன்று சோளகர் தொட்டியில் நடைபெற்றது.
அருளகம் இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் மருத்துவர் புண்ணியமூர்த்தி அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். கால்நடைப் பல்கலைக்கழகப் பேராசிரியராய்த் தான் பணிபுரிந்து பெற்ற அறிவையும் மரபு வழி மருத்துவமுறைகளையும் பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்துகொண்டார். அவர்கள் எழுப்பியக் கேள்விகளுக்கும் விடையளித்தார்.
சாதாரணமாய் வரும் நோய்களுக்கு எப்படி வீட்டிலுள்ள மிளகு, மஞ்சள், சுண்ணாம்பு, வெற்றிலை முள்ளங்கி இவற்றைக்கொண்டு எப்படி சரிசெய்வது என்று செயல்விளக்கம் செய்து காட்டினார். மடிவீக்கம் வந்தால் சோற்றுக்கற்றாழை, மஞ்சள், சுண்ணாம்பு இவற்றைக்கொண்டு எப்படிச் சரிசெய்யலாம் என்று விளக்கினார்.


பாறு கழுகுகள் நாள் கொண்டாடப்படும் இவ்வேளையில் அவற்றின் அழிவிற்கு முதன்மைக் காரணமாய் அமைந்த டைக்குளோபினாக், அசிக்குளோபினாக், நிமுசிலாய்டு, கீட்டோபுரோபேன், புளூநிக்சின் ஆகிய மருந்துகளை அறவே புறக்கணிக்க அருளகத்தின் செயலர் சு.பாரதிதாசன் வேண்டுகோள் விடுத்தார். கால்நடைகளின் மீது நஞ்சு தடவுவதாலும் பாறு கழுகுகள் உள்ளிட்டப் பல்வேறு உயிரினங்களும் அழிய நேரிடுகின்றன என்றும் இதுபோன்ற அவலச்செயல் நடைபெறாமல் கண்காணிக்கவேண்டும் என்றும் மாடுகள் இறந்தால் தெரியப்படுத்தவும் வேண்டுகோள் விடுத்தார்.

காப்பீடு செய்யப்பட்ட மாடுகள் இறக்க நேரிட்டால் அவற்றைப் புதைத்ததற்கான ஆதாரத்தைக் காட்டினால் தான் நட்ட ஈடு தரப்படுகிறது எனவும் இதனை மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கால்நடை வளர்ப்போர் சார்பாகவும் செயற்கைக் கருவூட்டல் செய்வோர் சார்பாகவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
பாறு கழுகுகள் குறித்தும் அவற்றைப்பாதுகாக்கச் செய்யவேண்டியது என்ன என்பது குறித்தும் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.

பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் அடங்கிய பெட்டி செயற்கைக் கருவூட்டல் செய்யும் முகவர்களுக்கு வழங்கப்பட்டது.
காப்பீடு செய்யப்பட்டக் கால்நடை இறந்தால் அதனைப் புதைத்ததற்கான சான்றிதழ் காட்டினால் தான் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. புதைப்பதற்குச் செலவு ஆகிறது எனவும் இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கால்நடை வளர்ப்போர் காப்பீட்டு நிறுவனத்திற்குக் கோரிக்கை விடுத்தனர். இயற்கையாக இறந்த உடலங்களை இறந்தவற்றை உண்ணும் விலங்குகளுக்கு உணவாக விடவேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பாகவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
பாறு நலன் காக்கும் முதலுதவிப் பெட்டியை மருத்துவர் புண்ணியமூர்த்தி அவர்கள் வழங்க ஊர் மக்கள் சார்பாக ஓ. மாதன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
பாறு கழுகுகளின் முக்கியத்துவம் குறித்து அருளகத்தின் உயிரியலாளர் சுந்தரி விளக்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருளகம் சார்பாக ரேவதி, ஜான், ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
