அன்புள்ள விக்ரம்,
உங்கள் மடியில் மனிதக்குரங்கு வகையைச் சேர்ந்த ‘லார் கிப்பன்’ (Lar Gibbon) எனும் அரிய வகைக் குரங்கை வைத்து விளையாடும் காணொலிக் காட்சியை அண்மையில் காண நேர்ந்தது. அதன் வெளிப்பாடாகவே இக்கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.
உங்கள் மடியில் ஏந்தியிருக்கும் அந்த உயிரினம், மனிதர்களின் மூதாதைக் குரங்கினம்(Primate); உலகளவில் அழியும் அபாயத்திலுள்ள ஒரு மிக அரிய விலங்கு. இது ஏன் இத்தகைய நிலைக்குத் தள்ளப்பட்டது தெரியுமா?
எண்ணெய்ப்பனை மரம் பயிரிடுவதற்காக அதன் வாழிடங்களை அழித்ததும், வரம்பற்ற வேட்டையும், காடுகளும் அதன் வாழிடங்களும் துண்டாடப்பட்டதும் இதற்கு முதன்மைக் காரணங்கள்.
அதைவிடக் கொடூரமானது, நம்மைப் போன்றவர்களின் வீடுகளில் ‘செல்லப் பிராணியாக’ அழகுபார்ப்பதற்காக, காட்டில் அதன் தாய் இரக்கமின்றிச் சுட்டுக் கொல்லப்பட்டு, தாயை இழந்து தவிக்கும் இளங்குரங்குகள் கள்ளத்தனமாகக் கடத்தப்பட்டு சொல்பேச்சைக் கேட்க வைப்பதற்காக பட்டிணி போட்டும் பல்வேறு சொல்லமுடியாத துயரத்திற்கு ஆட்படுத்தப்பட்டும் நம்மைப் போன்றவர்களின் கைகளுக்கு வந்து சேர்கின்றன. பத்து இளங் குரங்குகளைப் பிடித்தால் அதில் ஒன்றோ இரண்டோ தான் கடைசியில் மிஞ்சும், மற்றவை வழியிலேயே செத்துவிடும்.

உலகளவில் போதைப்பொருள் கடத்தலுக்கு இணையான பெரும் வணிகமாக இந்த வனவிலங்குக் கடத்தல் உருவெடுத்துள்ளது. காட்டுயிர்க் கடத்தல் தான் விலங்கினங்களிலிருந்து பரவும் தொற்றுநோய்க்கும் முதன்மைக் காரணமாக இருக்கிறது.
நாம் செல்லப்பிராணியாக வளர்க்கும் காட்டுயிரினத்திற்கு எவ்வளவுதான் சொகுசு வாழ்க்கையையும் உணவையும் வழங்கினாலும், நம் சொத்தையே எழுதிவைத்தாலும் அதனுடைய இயற்கையான வாழ்வியல் உரிமையைப் பறிக்கிறோம் என்பதே உண்மை. காட்டுப் பழங்கள், கொட்டைகளை உண்டு காடுகளின் விதைகளைப் பரப்புவதுடன் பூச்சிகள் மற்றும் குழவிகள், பூச்சிக் கூடுகளையும் உண்டு, அவற்றைக் கட்டுப்படுத்தும் முக்கியச் சூழலியல் பணியையும் செய்யும் இந்த லார் கிப்பன்கள் இந்தோனேசியா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து, சுமத்ரா போன்ற தென்கிழக்கு ஆசியக் காடுகளைத் தாயகமாகக் கொண்டவை. இந்த குரங்கினங்கள் தரைக்காடுகளிலும் மழைக்காடுகளிலும் வசிப்பவை. மரத்திற்கு மரம் தாவி வாழும் இயல்புடையவை.
வியப்பூட்டும் இன்னொரு செய்தி என்னவென்றால் , இவை பெரும்பாலும் தரைக்கு வருவதே இல்லை; தவிர்க்க முடியாமல் தரைக்கு வர நேர்ந்தால், உடலைச் சமநிலைப்படுத்துவதற்காகத் தன் கைகளை மேலே உயர்த்தியபடி நடப்பதே அதற்குப் பெரும் கடினமாக இருக்கும் . அடர்ந்த காடுகளில் தன் இனக் கூட்டத்தோடு சுதந்திரமாகத் திரிய வேண்டிய ஒரு உயிரினத்தின் இயல்பைப் பறித்து, நம் மடியில் வைத்துக் கொஞ்சுவது அன்பல்ல; அதன் சுதந்திரத்தின் மீதான வன்முறை!
இன்றைக்குப் பலரும் செய்யும் தவறும் இதுதான்—தெருநாய்களுக்கு அளவுக்கு அதிகமாக உணவளிப்போரும், காட்டுயிர்களுக்குத் தவறான முறையில் உணவளிப்போரும் ஏதோ விலங்குகளுக்கு நன்மையே செய்வதாக நினைக்கிறோம். ஆனால், உண்மையில் அவ்வுயிரினங்களின் இயற்கை வளரியல்பையும், வேட்டையாடி உண்ணும் சுபாவத்தையும் சிதைத்து, மனிதர்களைச் சார்ந்திருக்கும்படி மாற்றி விடுகிறோம்.
திரையில் உங்களின் நடிப்பையும் உழைப்பையும் மதிக்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் சூழலில், உங்களின் இத்தகைய செயல்கள் சமூகத்திற்குத் தவறான முன்மாதிரியாகிவிடாதா? காட்டுயிர்கள் கூண்டுகளிலோ, மனிதர்களின் மடிகளிலோ வாழ வேண்டியவை அல்ல; அவை காடுகளிலேயே சுதந்திரமாக வாழ விடப்பட வேண்டும்.
விடுதலை என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, இந்த மண்ணில் வாழும் அனைத்து உயிரினங்களுக்குமானது. இந்தியாவின் 80-வது சுதந்திர நாளில் இந்தச் செய்தி நம்மைக் காட்டுயிர்கள் பார்வையில் சிந்திக்க வைக்கும் என நம்புகிறேன்.
அன்புடன்,
சு.பாரதிதாசன்
அருளகம்
இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு
