கோயம்புத்தூர், ஜூன் 25: கோயம்புத்தூர் மாவட்டத்தில் பழங்குடியின மக்களின் வாழ்வாதார மேம்பாட்டில் ஒரு முக்கிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. ‘வன் தன் விகாஸ் கேந்திரா’ (VDVK) திட்டத்தின் கீழ் பழங்குடியின சமூகங்களால் பதப்படுத்தப்பட்டு, மதிப்புக்கூட்டப்பட்ட புளி, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் ஜி. கிரியப்பனவர், I.A.S. அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

நடுவன் பழங்குடியினர் நல அமைச்சகத்தின் முதன்மைத் திட்டமான ‘பிரதான் மந்திரி வன் தன் யோஜனா’ (PMVDY)-வின் கீழ் வன வள மேம்பாட்டு மையம் (VDVK) இயங்கி வரும் இத்திட்டம், தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நல இயக்குநரகம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்தியப் பழங்குடியின கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டுக் கூட்டமைப்பு (TRIFED) இதற்குத் தேசிய அளவிலான முதன்மை முகமையாகச் செயல்படுகிறது.
கோயம்புத்தூர் VDVK மையத்தில் பதிவுபெற்ற 584 பழங்குடியின உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயல்படுகிறார்கள். இவர்கள் காடுகளில் இருந்து தேன், நெல்லிக்காய், புளி, அரப்பு மற்றும் சிகைக்காய் போன்ற சிறு வன விளைபொருட்களை (MFP) சேகரித்துச் சந்தைப்படுத்துகின்றனர். இந்த விளைபொருட்களில், ஒவ்வொரு அறுவடைப் பருவத்திலும் சுமார் 2,000 டன் வரை கிடைக்கக்கூடிய புளி, அதன் மிகுதி காரணமாக இவர்களின் முதன்மையான வாழ்வாதார வாய்ப்பாக உருவெடுத்துள்ளது.
இதன் சந்தை வாய்ப்பினை உணர்ந்து, பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட தூவையப்பதி கிராமத்தில் ஒரு மதிப்புக்கூட்டுதல் பிரிவை நிறுவ VDVK உறுப்பினர்கள் முடிவு செய்தனர். இங்கு, காடுகளில் இருந்து சேகரிக்கப்படும் புளி, சந்தைக்குத் தயாரான தயாரிப்பாகப் பதப்படுத்தப்படுகிறது. இந்தச் செயல்முறையானது வெயிலில் காயவைத்தல், இயந்திரம் மூலம் ஓடுகளை நீக்குதல், மீண்டும் காயவைத்தல், கொட்டைகளை அகற்றுதல் மற்றும் சிப்பமிடுதல் (Packaging) ஆகிய நிலைகளைக் கொண்டுள்ளது. இந்த வேலைகளுக்கு இயந்திரங்கள் உதவினாலும், இது அதிக உழைப்பைக் கோரும் பணியாக இருப்பதால், தற்சமயம் ஆறு பழங்குடியின பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி, உள்ளூரிலேயே ஒரு முக்கிய வாழ்வாதாரத்தை உருவாக்கியுள்ளது.
சமூக அடிப்படையிலான பாதுகாப்பு மற்றும் நிலையான வாழ்வாதார மேம்பாட்டில் விரிவான அனுபவமிக்க ‘அருளகம்’ சுற்றுச்சூழல் அமைப்பு இம்முயற்சிக்கு ஆதரவளித்து வருகிறது. பழங்குடியினச் சேகரிப்பாளர்களிடமிருந்து புளியைக் கொள்முதல் செய்வதற்கும், அதனைப் பதப்படுத்தும் பிரிவுக்கு எடுத்துச் செல்வதற்கும் மற்றும் மதிப்புக்கூட்டும் பணியில் ஈடுபட்டுள்ள பழங்குடியின தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கும் தேவையான நடைமுறை மூலதனத்தை (Working Capital) அருளகம் வழங்கியுள்ளது. மேலும், வாழ்வாதாரத்தையும் பல்லுயிர் பெருக்கத்தையும் சமநிலையில் பேணும் வகையில், நிலையான அறுவடை முறைகள் குறித்து பழங்குடியின சமூகங்களுக்கு இந்நிறுவனம் வழிகாட்டி வருகிறது.
கடந்த ஜூன் 25 அன்று, அருளகம் அமைப்பின் செயலர் திரு. பாரதிதாசன், பொருளாளர் திரு. அமிர்தலிங்கம் மற்றும் VDVK குழு உறுப்பினர்களான ஜான் மற்றும் சக்தி ஆகியோர், மதிப்புக்கூட்டப்பட்ட முதலாவது புளி தயாரிப்பினை கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பவன்குமார் ஜி. கிரியப்பனவர், IAS அவர்களிடம் வழங்கினர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் இம்முயற்சியைப் பாராட்டியதோடு, பழங்குடியினரிடையே தொழில்முனைவையும், காடு சார்ந்த நிலையான வாழ்வாதாரத்தையும் ஊக்குவித்ததற்காகக் குழுவினருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். எதிர்காலத் தயாரிப்புச் சிப்பங்களில் (Packaging) புளியின் ஊட்டச்சத்து விபரங்களை உள்ளடக்க வேண்டும் என்று பரிந்துரைத்த அவர், நுகர்வோர் நம்பிக்கையை வலுப்படுத்தவும், சந்தை ஏற்பை மேம்படுத்தவும் தேவையான தரச் சான்றிதழ்களைப் பெறுமாறு அறிவுறுத்தினார். சூழல் நட்புப் பேக்கிங் பொருட்களைப் பயன்படுத்தியதைப் பாராட்டிய அதே வேளையில், நுகர்வோரைக் கவரும் வகையிலும், கையாளுவதற்கு எளிதாகவும் இருக்கும் கூடுதல் பேக்கிங் வடிவங்களை ஆராயுமாறு குழுவினரை ஊக்குவித்தார்.
அதே வேளையில், இக்குழுவினர் கோயம்புத்தூர் மாவட்ட வன அலுவலர் (DFO) திரு. வெங்கடேஷ் பிரபு, IFS அவர்களை நேரில் சந்தித்தனர். அருளகத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு-வாழ்வாதார இணைப்பு முயற்சிகளை வரவேற்ற அவர், தயாரிப்பின் தரத்தைப் பாராட்டினார். இத்தகைய அடிமட்ட அளவிலான முன்முயற்சிகள் பழங்குடியினர் நலனையும் வனப் பாதுகாப்பையும் மிக அழகாக இணைக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார். வன விளைபொருட்களை பிரீமியம் தரத்திலான, சூழல் நட்புப் பேக்கிங் செய்யப்பட்ட வணிகப் பொருளாக மாற்றுவதன் மூலம், இத்திட்டம் பழங்குடியின சமூகங்களிடையே சுயசார்பை தீவிரமாக வளர்க்கிறது என்றார். வனக்கோட்டத்திலுள்ள பிற வன விளிம்பு கிராமங்களுக்கும் இந்த மாதிரியை விரிவுபடுத்த வனத்துறை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

அருளகத்தின் செயலர் சு.பாரதிதாசன் குறிப்பிடும்போது, மரங்களை முழுமையாக மொட்டையடிக்கும் அறுவடை முறைகளுக்கு மாற்றாக, நிலையான அறுவடை நுட்பங்களை அருளகம் ஊக்குவிக்கிறது என்றார். புளிய மரங்களில் குறிப்பிட்ட அளவு பழங்களை அப்படியே விட்டுவிடுவதன் மூலமும், கிளைகளுக்குச் சேதம் விளைவிக்காமல் அறுவடை செய்வதன் மூலமும், யானை உள்ளிட்டத் தாவர உண்ணிகள், பறவைகள் மற்றும் பூச்சிகள் போன்ற வனவிலங்குகளுக்கு இந்த முக்கிய உணவு ஆதாரம் தொடர்ந்து கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது எனவும் குறிப்பிட்டார். அதே வேளையில், புளிய மரங்களின் எண்ணிக்கையைப் பாதுகாப்பது, புதிதாக புளிய மரங்களை நடவு செய்வது பழங்குடியின சமூகங்களுக்குத் தலைமுறை கடந்து நிலையான வருமானத்தை உறுதி செய்கிறது எனவும் தெரிவித்தார்.
WWF அமைப்பின் நிலப்பரப்பு ஒருங்கிணைப்பாளர் (Landscape Coordinator) பூமிநாதன் அவர்கள் இம்முயற்சிக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். மரங்களின் பாதுகாவலர் (Tree Whisperer) திரு. கே. சையத் அவர்கள், வன விளிம்பு கிராமங்களில் பல்லுயிர்ச் சூழலையும், பசுமைப் போர்வையையும் மேம்படுத்தும் நோக்கில், 1,000 புளிய மரக் கன்றுகளை நடும் மரக்கன்றுகள் நடும் முயற்சியில் (Reforestation Drive) இணைந்து செயல்பட உறுதியளித்தார்.
கோயம்புத்தூர் VDVK முன்முயற்சியானது, மதிப்புக்கூட்டுதல், நிலையான அறுவடை மற்றும் சமூகப் பங்களிப்பு ஆகியன எவ்வாறு ஒன்றிணைந்து வனச் சூழலமைப்பைப் பாதுகாப்பதோடு பழங்குடியினரின் வருமானத்தையும் உயர்த்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளது. இத்திட்டம் விரிவடையும் போது, வன விளைபொருட்களுக்கு வலுவான சந்தை இணைப்புகளை உருவாக்கவும், இப்பகுதி முழுவதும் உள்ள பழங்குடியின சமூகங்களுக்கு ஒரு நிலையான வாழ்வாதார மாதிரியை உருவாக்கவும் இது வழிவகுக்கும்.