மக்கள் பங்கேற்பு- இயற்கைப் பாதுகாப்புத் தலைமைத்துவ விருது | Community Conservation Leadership Award

மக்கள் பங்கேற்பு- இயற்கைப் பாதுகாப்புத் தலைமைத்துவ விருது 

இயற்கை & காட்டுயிர்கள் பாதுகாப்பு, மாற்று எரிசக்தி, குப்பை மேலாண்மை மற்றும் மாசு தடுப்பு உள்ளிட் பணிகளில் சிறந்து விளங்கும் நூறு நபர்களைத் தேர்வு செய்து, தமிழ்நாடு அரசு இயற்கைப் பாதுகாப்புத் தலைமைத்துவ விருது’ வழங்கிச் சிறப்பித்தது. இதற்கான விழா, கடந்த 28-02-2026 அன்று பொள்ளாச்சி, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சேத்துமடையில் நடைபெற்றது.

மாண்புமிகு திரு. ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், அவர்கள், வனம் மற்றும் கதர்த் துறை அமைச்சர், விழாவுக்குத் தலைமையேற்று விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார். 

'அருளகம்' அமைப்புப் பாறு கழுகுகள் பாதுகாப்புப் பணியில் ஆற்றிவரும் சேவையைப் பாராட்டி இவ்விருது எனக்கு வழங்கப்பட்டதாக  திரு. ராகேஷ் குமார் டோக்ராIFS, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை காட்டுயிர்ப் பாதுகாவலர் தெரிவித்தார்.

 எமது குழுவைச் சேர்ந்த செல்வி சுந்தரி, செல்வி ரேவதி, திரு. பரமன் மற்றும் திரு. சந்தோசு கிருட்டிணன் ஆகியோரின் உழைப்பிற்கும், பங்களிப்பிற்கும் கிடைத்த கூட்டு அங்கீகாரமாகவே இதை நான் கருதுகிறேன். எங்களைத் தொடர்ந்து ஊக்குவிக்க இவ்விருது பெரும் உந்துதலாக அமையும்.

இந்நிகழ்வில் திருமதி சுப்ரியா சாஹு  IAS, அவர்கள் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் முன்னிலை வகித்தார். திரு. ஸ்ரீனிவாஸ் ஆர். ரெட்டிIFS, முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வனப்படைத் தலைவர்  திரு. ராகேஷ் குமார் டோக்ராIFS, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை காட்டுயிர்ப் பாதுகாவலர், திரு. அனுராக் மிஸ்ராIFS, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றச் சிறப்புச் செயலாளர்,திரு. து. வெங்கடேஷ்IFS, ஆனைமலை புலிகள் காப்பகக் கள இயக்குநர், திரு. தேவேந்திர குமார் மீனா, துணை இயக்குநர், ஆனைமலை புலிகள் காப்பகம், திரு ஜெயராஜ் IFS, வனஅலுவலர், ஓசூர் மாவட்டம், திரு வெங்கடேஷ் பிரபு IFS, வனஅலுவலர், கோவை மாவட்டம்,  திரு. விஸ்மிஜு விஸ்வநாதன்IFS, தமிழ்நாடு கானுலா அனுபவக் கழக நிர்வாக இயக்குநர், மற்றும் பிறஅலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

எனது ஒவ்வொரு செயலையும் ஊக்குவித்த என் தந்தை உயிருடன் இருந்திருந்தால் இவ்விருது கிடைத்ததை நானே கூச்சப்படும் அளவுக்குப் பலருடனும் பகிர்ந்திருப்பார். இவ்விருதை என்தந்தைக்குக் காணிக்கையாக்குகிறேன். 

 என் சகத் தோழமைகள் - மரம் திரு. யோகநாதன்,கோவையைச் சார்ந்த ஓசை திரு காளிதாசன், கிரீன் கேர் திரு. சையத், WNCT திரு. சிராஜ்தீன்,  பறவையியல் மற்றும் பட்டாம் பூச்சி ஆராய்ச்சியாளர் திரு. பாவேந்தன், இயற்கைப் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த திரு. கே. சீனிவாசன், முனைவர் ஆ.. சாம்சன், பாறு கழுகு ஆராய்ச்சியாளர் CUBE அமைப்பின் ஜோசப் ரெஜினால்ட், சத்தியமங்கலம் சுற்றுச்சூழல், காட்டுயிர்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த திரு. கே. சக்திவேல், முள்ளெலிகள் பாதுகாப்பில் ஈடுபட்டுவரும் திரு. பிராவின், சேலம் பறவையியல் கழகத்தைச் சேர்ந்த செல்வி ஏஞ்சலின், மற்றும் கணேசுவர், பறவைகள் பாதுகாப்பில் ஈடுபட்டுவரும் குயிலி ஆகியோருக்கும் அவர்கள் ஆற்றிவரும் சேவைக்காக விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர். 

இப்பூவுலகை வருங்காலத் தலைமுறைக்குப் பாதுகாப்பாக விட்டுச்செல்ல இதுபோன்ற விருதுகள் உந்துசக்தியாக அமையும். ஆண்டுதோறும் இன்னும் பல நபர்களுக்கு இவ்விருது சென்று சேரவேண்டும். இதனை முன்னெடுத்த தமிழ்நாடு அரசின் வனத்துறையை மனதாரப் பாராட்டுகிறோம். 

இயற்கைப் பாதுகாப்பிலும் வெல்வோம் ஓன்றாக.

 

 

logo

'Arulagam' was founded in 2002 as a non-profit organisation in honour and memory of Mr. Arulmozhi, who inspired many of his friends, including ourselves – the members of Arulagam – through his commitment to environmental conservation. We believe that regardless of its value to humanity, every form of life and its ecosystem is unique.

Reach Us