பாறு நலன் காக்கும் கால்நடை முதலுதவி பெட்டி திறப்பு விழா 24-Nov-2025
இடம் : தெங்குமரஹடா, கோத்தகிரி தாலுகா, நீலகிரி மாவட்டம்
ஏற்பாடு : அருளகம் – இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு
பங்கேற்றவர்கள்:
மண்டல இணை இயக்குநர் – திரு வி. பாலகிருஷ்ணன்
துணை இயக்குநர் – திரு கே. பரிமல்ராஜ்
அல்லிமாயாறு கால்நடை மருத்துவர் – டாக்டர் அர்ஷத்
தெங்குமரஹடா உயர் நிலைப் பள்ளி ஆசிரியர் – திரு காசிராஜன்
அருளகம் பழங்குடிகள் நலத்திட்ட மேலாளர் – திரு ஜேபஸ் ஜான்
கால்நடை நலன் காக்கும் ஒருங்கிணைப்பாளர் – திரு பரமன்
அருளகம் உயிரியலாளர் – திருமதி சுந்தரி அருளகம் சமூகவியலாளர் – திருமதி ரேவதி
ஓவியக் கலைஞர் – திரு சந்தோஷ்
கிராம மக்கள் – 31 பேர் (11 பெண்கள், 22 ஆண்கள்)
நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி தாலுக்கில் உள்ள தெங்குமரஹடா கிராமத்தில், அருளகம் இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு சார்பாக பாறு நலன் காக்கும் கால்நடை மருத்துவ முதலுதவி பெட்டி திறப்பு விழா மற்றும் பாறுக் கழுகு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நீலகிரி மண்டல கால்நடை இனை இயக்குநர் திரு வி. பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கால்நடை வளர்ப்பவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
அருளகம் அமைப்பின் கால்நடை நலன் ஒருங்கிணைப்பாளர் திரு பரமன் அவர்கள், அருளகத்தின் பாறுக் கழுகு பாதுகாப்பு பணிகள் மற்றும் அதன் சமூக முக்கியத்துவத்தை விளக்கி அனைவரையும் வரவேற்றார். துணை இயக்குநர் திரு பரிமல்ராஜ் அவர்கள், பாறுக் கழுகுகள் பார்சி இன மக்களுடன் தொடர்புடைய பாரம்பரிய நடைமுறைகளையும், அவை எப்படி கழுகுகளின் உணவுச் சங்கிலிக்கு பயன்படுகின்றன என்பதையும் எடுத்துரைத்தார்.
பாறுக் கழுகு பாதுகாப்பு மற்றும் மருந்து விழிப்புணர்வு
அருளகம் உயிரியாளர் திருமதி சுந்தரி அவர்கள், பாறுக் கழுகுகள் இயற்கையின் துப்புரவுப் பணியாளர்கள் என்பதையும், இறந்த விலங்குகளை உண்பதன் மூலம் நோய் பரவலை தடுக்கின்றன என்பதையும் எடுத்துரைத்தார். கழுகுகளின் உணவுச்சங்கிலியில் தீங்கு விளைவிக்கக் கூடிய அசிக்ளோஃபினாக், கீட்டோபுரோபின், நிமெசுலைடு போன்ற மருந்துகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அதற்கு மாற்றாக அரசால் பரிந்துரைக்கப்பட மெலாக்ஸிகம் மற்றும் டோல்பினாமிக் ஆசிட் ஆகிய மருந்துகளைப் பயன்படுத்துமாறும் மற்றும் சித்த மருந்துகளைப் பயன்படுத்துமாறும் பரிந்துரைத்தார். மேலும், இயற்கையாக இறந்த கால்நடைகளை புதைக்காமல், காட்டுப் பகுதியில் வைக்கும்போது பாறுக் கழுகுகளுக்கான உணவு கிடைக்கும் எனவும் எடுத்துரைத்தார்.
அருளகத்தின் சமூகவியலாளர் திருமதி ரேவதி அவர்கள், தெருக்கூத்து, சுவர் ஓவியங்கள், கல்வி காணொளிகள், பள்ளி மாணவர்களுக்கு ஓவியம் போன்ற சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளை அருளகம் முயற்சி செய்து வருகிறது என்று விளக்கினார்.
டாக்டர் புன்னியமூர்த்தி அவர்களின் பரிந்துரையின் கீழ், வீட்டு அடுக்களையில் பயன்படுத்தும் சமையல் பொருட்களையும் மூலிகைகளையும் பயன்படுத்திக் கால்நடை முதலுதவி செய்வது மற்றும் YourFarm என்ற பாதுகாப்பான கால்நடை மருந்துகளைப் பயன்படுத்துவது குறித்து விளக்கங்கள் வழங்கப்பட்டன.
நீலகிரி மண்டல கால்நடைத்துறை இணை இயக்குநர் திரு வி. பாலகிருஷ்ணன் அவர்கள், தெங்குமரஹடா ஊர் ஒரு செழிப்பான இயற்கை கிராமம் என்பதையும், பாறுக் கழுகுகள் பாதுகாப்பில் தடை செய்யப்பட்ட மருந்துகள் மிக முக்கிய அச்சுறுத்தல் என்பதையும் விழிப்புணர்வு தொடர்ச்சியாக மக்கள் மூலம் நடைபெற வேண்டும் என்பதையும் இப்பணியைத் தொடர்ந்து அருளகம் மேற்கொண்டுவரவேண்டும் என்றும் தெரிவித்தார்.
தெங்குமரஹடா உயர்நிலை பள்ளி ஆசிரியர் திரு காசிராஜன் அவர்கள் பறவைகள் பற்றி எடுத்துரைத்து பாறுக் கழுகுகளின் உணவுச் சங்கிலி முறையைக் கூறி அதன் சிறப்பு அம்சங்களை எடுத்துரைத்தார்.
அருளக்தின் பழங்குடிகள் நல ஒருங்கிணைப்பாளர், திரு ஜான் அவர்கள் பேசும்போது, இவ்வகைக் கழுகுகளைப் பிணந்திண்ணிக் கழுகுகள் எனப் பொதுவாக அழைக்கபடுவதாகவு அப்படிக் கூறும் போது பிணம் என்ற பெயர் அவச்சொல்லாக இருப்பதால், இப் பறவை இழிவாகப் பார்க்கப்படுவதாகச் சுட்டிக்காட்டினார். எனவே சங்க இலக்கியத்தில் குறிப்பிட்டுள்ள ‘'பாறு என்ற சொல்லைப் பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். அருளகம் வழங்கிய கால்நடை முதலுதவி பெட்டியை கிராமத்தில் வைத்து பயன்படுத்த கிராம மக்கள் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். இறுதியாக சுந்தரி, ரேவதி மற்றும் சந்தோஷ் ஆகியோர் பாறு கழுகு குறித்த விழிப்புணர்வுத் துண்டறிக்கைகளை மக்களுக்கு வழங்கினர்.
மண்டல இணை இயக்குநர் – திரு வி. பாலகிருஷ்ணன், துணை இயக்குநர் – திரு கே. பரிமல்ராஜ், கால்நடை மருத்துவர் – டாக்டர் அர்ஷத் ஆகியோருக்குத் தேங்காய் ஓடுகளால் வரையப்பட்ட பாறு கழுகு ஓவியம் நினைவுப் பரிசாக அதனை வரைந்த ஓவியர் சந்தோசு அவர்களால் வழங்கப்பட்டது.
கால்நடைகளுக்குத் தடை செய்யப்பட்ட வலி மருந்துகள் தரப்படுவதைத் தடுக்கத் துல்லியத்தாக்குதலாக இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது எனத்தெரிவித்தார். இங்கு வைக்கப்பட்டுள்ள முதலுதவிப் பெட்டியில் யுவர்பார்ம் தயாரித்த பாரம்பரிய மருந்துகளும் மெலாக்சிகம், டோல்பினாமிக் ஆசிட் போன்ற மருந்துகளும் உன்னிக்கடி மருந்துகளும் இடம்பெற்றுள்ளன எனத்தெரிவித்தார்.
