தடை செய்யப்பட்ட கால்நடை மருந்துகள் குறித்து மருந்து வணிகர்களுக்கு விழிப்புணர்வு, May 2025
தடை செய்யபட்ட கால்நடை மருந்துகள் குறித்து மருந்து வணிகர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி உதகமண்டலம் வனத்துறை சூழல் மையத்தில் அருளகம் சார்பில் இன்று (மே 24 ) நடைபெற்றது.
மருந்துக்கட்டுப்பாட்டுத்துறை, வனத்துறை, கால்நடைத் துறை ஆகியவற்றின் வழிகாட்டுதலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் குன்னூர், உதகமண்டலம், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர், மஞ்சூர் ஆகிய வட்டங்களிலிருந்து சுமார் 40க்கும் மேற்பட்ட மருந்துக்கடை அதிபர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்விற்கு தமிழ்நாடு அரசின் மருத்து கட்டுப்பாட்டு துறையின் கோயமுத்தூர் வடக்கு மண்டல உதவி இயக்குநர் எஸ். மாரிமுத்து அவர்கள் தலைமையேற்று உரையாற்றும்போது, நிமிசுலிடு தடை உத்தரவுக்குப்பின்னர் ஒவ்வொரு மருந்து கிடைக்கும் சுற்றறிக்கை அனுப்பியும், தீடீர் பரிசோதனை மேற்கொண்டும் இருப்பில் உள்ள தடை செய்யப்பட்ட மருந்துகளைத் திருப்பி அனுப்பியும், தடையை மீறிய மருந்தகங்களின் உரிமத்தை இரத்து செய்தும் நடவடிக்கை எடுத்து உள்ளோம் என்றார். அத்துடன் எங்கிருந்து மருந்துகளை மொத்தமாக வாங்குகிறார்களோ அதையும் கண்காணித்து வருகிறோம் . அரசுத் துறைச் செயலர், மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை இயக்குனர் ஆகியோரின் முயற்சி காரணமாகth தடைசெய்யப்பட்ட மருந்துகள் 99 விழுக்காடு கிடைக்காமல் இருப்பதை உறுதி செய்துள்ளோம் என்று தெரிவித்தார். அரசுத்துறைச் செயலர் அவர்கள் தடையை மீறிய நிறுவனங்களின் மேல் உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதையும் குறிப்பிட்டுப்பேசினார்.
எம். தயானந்தன் சிகூர் வனச்சரகர் உரையாற்றும்போது, பாறு கழுகுகளுக்கு என மூன்று மாநிலங்களை இணைத்து மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு குறித்தும் தற்போது அவற்றின் எண்ணிக்கை, கூடுகளின் எண்ணிக்கை குறித்தும் எடுத்துரைத்தார். அத்துடன் வனத்துறை மேற்கொண்டு வரும் உன்னிச்செடி களை அகற்றுதல், தொடர் கண்காணிப்பு, புலி தாக்கி இறந்த மாடுகளுக்கு வழங்கப்பட்டுவரும் இழப்பீடு, மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவது குறித்தும் கவனப்படுத்தி உரையாற்றினார்.
பாறு கழுகுகள் நேற்று இன்று நாளை என்ற தலைப்பில் அருளகத்தின் செயலர் சு. பாரதிதாசன் பேசும்போது, பாறு கழுகினம் குறுகிய காலத்தில் எண்ணிக்கை குறைந்தது குறித்தும் இருக்கின்ற எண்ணிக்கையை தக்கவைத்து மீட்க மத்திய மாநில அரசுத்துறைகள் எடுத்துவரும் நடவடிக்கை குறித்தும் எடுத்துரைத்தார். நம் வீட்டில் எலி செத்துக்கிடந்தால் அதனை வெளியே எடுத்து வீசாமல் நம்மால் வீட்டுக்குள் இருக்க முடியாது. காட்டில் யானையோ காட்டெருமையோ செத்துக்கிடந்தால் அவற்றை பாறு கழுகுகள் தான் பெரும்பாலும் சுத்தம் செய்து அகற்றுகிறது என்றார். அவை இல்லாது போனால் நீலகிரி உயிர்க்கோள மண்டலம் பெரிதும் பாதிக்கப்படும் என்றார். பாறு கழுகினத்தை வாழ்வாங்கு வாழ நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் எடுத்துரைத்தார்.

இந்தியக் கால்நடை ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் கரிகாலன் அவர்கள் உரையாற்றும்போது, ஒரு மருந்தைத் தடை செய்வதற்கு முன்னர் என்னவெல்லாம் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது என்று பட்டியலிட்டார். தீமை விளைவிப்பவை எவை பாதுகாப்பான மருந்துகள் எவை என்பது குறித்து பல்வேறு வகையான தொடர் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்தும் எடுத்துரைத்தார்.
கால்நடைத் துறை இனை இயக்குநர் மருத்துவர் திருமூலன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு புளூநிக்சின் மருந்தின் தாக்கம் குறித்துக் கேள்வி எழுப்பினார்.
கால்நடை அறிவியல் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸ்ரீகுமார் அவர்கள் பாறு கழுகுகளின் முக்கியத்துவம் குறித்தும் அவற்றின் பறக்கும் திறன், கூரிய பார்வை உள்ளிட்ட சிறப்பை எடுத்துரைத்தார். அத்துடன் நோய் தாக்கிய கால்நடைகளையோ ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்த உடலைத் தின்றாலும் அதனால் அவற்றுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதையும் எடுத்துரைத்தார். அத்துடன் மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் பாறு கழுகுப் பாதுகாப்புச் செயல்திட்டம் குறித்தும் கவனப்படுத்தினார்.
நீலகிரி மாவட்ட மருந்து விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் கோபால் அவர்கள் மருந்துக் கட்டுப்பாட்டுத்துறைக்கு நாங்கள் நல்ல ஒத்துழைப்பு நல்கி வருகிறோம் என்றும் எங்கள் உறுப்பினர்களுக்கு தொடர் அறிவுறுத்தலும் செய்து வருகிறோம் என்றும் எடுத்துரைத்தார். பாறு கழுகுகளைப் பாதுகாக்க தொடர்ந்து ஆதரவு நல்குவோம் என்றும் உறுதி கூறினார்.
வன உயிரின மருத்துவர் சிறீதர் அவர்கள் உரையாற்றும்போது, வன விலங்குகளின் உடலில் செலுத்தப்படும் மருந்துகள் எவ்வாறு உருப்பெருக்கம் அடைந்து அவற்றைப் பாதிக்கின்றன என்று எடுத்துரைத்தார். அத்துடன் காலாவதியான மருந்துகளை எப்படி அகற்றுவது என்பது குறித்தும் கவனப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் முத்தாயப்பாக அனைவரும் எழுந்து நின்று தடைசெய்யப்பட்ட மருந்துகளை விற்கமாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஓவியர் சந்தோசு அவர்கள் வரைந்த பாறு கழுகின் ஓவியம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.
வந்திருந்தவர்களை அருளகம் சார்பாக செல்வி நிலித்தா பிரியதர்சினி வரவேற்புரை ஆற்றினார்.
பாறு கழுகுகளுக்குப் பாதுகாப்பான மருந்து குறித்தும் தடை செய்யப்பட்ட மருந்து குறித்தும் தவிர்க்கப்பட வேண்டிய மருந்து குறித்த அரசாணை மருந்து கட்டுப்பாட்டுத் துறை உதவி இயக்குனர் கையால் மருந்து கடை அதிபர்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை அருளகத்தின் பொருளாளர் அமிர்தலிங்கம் தன்னார்வலர்கள் திரிஸ்யா, பரமன், சந்தோஷ், ரேவதி, சுந்தரி ,முகமது ஆகியோர் ஒழுங்குபடுத்தினர்.

Bharathidasan S,
Secretary,
Arulagam.
News reports about the awareness event -


