Vulture Conservation

Vulture Survey

Vulture Survey

இதுகாறும் கருங்கழுத்துப் பாறுக் கழுகுகளின் கூடுகள் முதுமலைப் புலிகள் சரணாலயத்தில் மட்டுமே இருப்பது பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது அது சத்தியமங்களம் புலிகள் சரணாலயத்தில் முதல் முறையாக அருளகம் குழு பதிவு செய்துள்ளது என்பதை மகிழ்வுடன்  தெரிவித்துக்கொள்கிறேன். இது பத்தாண்டு தேடலுக்குப் பின்னர் கிடைக்கப்பெற்ற நல்வாயப்பு.

சத்தியமங்களம் பவானிசாகரிலிருந்து தெங்குமரகடாவை நோக்கிய அதிகாலைக் களப்பயணத்தின் போது  காலை 8.30 மணிக்கெல்லாம்  பாறுக் கழுகு கூட்டம் வானில் வட்டமடித்ததைப் பார்த்திருக்கிறேன். அந்தக் கூட்டத்தை எண்ணிப் பார்த்தபோது சுமார் 11 கழுகுகள் இருந்தன. முதலில் இவை முதுமலைப் பகுதியிலிருந்து கிளம்பி இந்த வேளையில் இரைதேட  வந்துவிட்டன என்று தான் எண்ணினேன். ஆனால் முதுமலைப் பகுதியிலும் காலை இதே நேரத்தில் வட்டமடித்ததைப் பார்த்தபோது, இந்தக்கூட்டம் அதுவல்ல என்றும் இவை வேறு ஒரு கூட்டமாக இருக்கும் என்றும் இவை இங்குதான் ஏதோ ஓர் இடத்தில் தங்கி இருக்கக்கூடும் என்றும் யூகித்தேன். அதற்கேற்றார்ப்போல பின்னர் ஒரு முறை மாலை நேரத்தில் சுமார் 5.30 மணிவாக்கில் தெங்குமரகடாவிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தபோதும், அதேபோல 11 எண்ணிக்கையிலான பாறுக் கழுகுகள் கூட்டம் வானில் வட்டமடித்ததைப் பார்த்தேன். அத்துடன் எனது எண்ணத்திற்கு வலுச் சேர்க்கும் விதமாக வனத்துறைப் பணியாளர்களும் கழுகுக்கூட்டை மலைமுகட்டில் பார்த்திருப்பதாகத் தெரிவித்தனர். 
அதனை உறுதிப்படுத்துவதற்காகப் பத்தாண்டுக்கு முன்னர் அதிகாலையில் கூழித்துறைப்பட்டிப் பகுதியிலிருந்து கிளம்பி கடுநடைப் பயணமாக மலை உச்சியை நோக்கி மெல்ல மெல்ல ஊர்ந்து நகர்ந்தோம். அங்குச் சென்று பார்த்தபோது, வேறு ஒரு வகைக் கழுகான, ராஜாளிக் கழுகுகளின் கூடு தான் தென்பட்டது. அது ஒருபுறம் மகிழ்ச்சியைத் தந்தாலும் நாம் தேடியது கிட்டவில்லையே என்ற ஏக்கமும் இருந்தது. வேறு சில நண்பர்களும் சென்று பார்த்துவிட்டு இராஜாளிக் கழுகுகளின் கூடு தான் இருக்கின்றன என்று கூறினர். சிலமுறை முயற்சித்தபோதும், பல்வேறு காரணங்களால் அப்பகுதியில் புதிய கூடுகள் ஏதும் பார்ப்பதற்கான வாய்ப்புக் கைகூடவில்லை. ஆனால் அது குறித்துத் தீவிரமாகத் தேடவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.Vulture Survey

ஆயினும் ஒவ்வொரு முறை தெங்குமரகடாவை நோக்கிச் சென்றபோதும் இந்த எண்ணம் எனக்குள் வட்டமடித்துக்கொண்டிருக்கும். அவற்றைப் பார்ப்பதற்கான வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்தேன். இந்தமுறை கணக்கெடுப்பிற்குச் செல்லும்போது, பார்க்காமல் விட்ட முகடுகளைத்  தேர்வு செய்தேன். என்னுடன் பறவை ஆர்வலரும் ஆராய்ச்சியாளருமான முனைவர் கிறிஸ்டோபர் அவர்களும் கலந்துகொண்டார்.

காலை எட்டுமணிக்கெல்லாம் மலையுச்சியில் இருந்தால் தான் அவை எங்கிருந்து கிளம்புகின்றன என்பதைப் பார்க்கமுடியும் என்று முடிவுசெய்து கிளம்பினோம். ஆயினும் மலை உச்சிக்குச் சென்று சேர்ந்தபோது மதியம் 11 மணியாகிவிட்டது.  எனது எண்ணம் ஈடேறவில்லையே என வருத்தப்பட்டேன். ஆயினும் ஒரு மலையுச்சியை நோக்கி எனது கண்களைத் திருப்பியபோது, வெண்ணிறப்படிவுகள் அள்ளித்தெளித்தாற்போலக் கண்ணில் பட்டன. ஆகா இது ஏதோ ஒரு கழுகின் கூடாக இருக்கவேண்டுமே என்று எண்ணித் தொலைநோக்கியைத் திருகி உற்றுப் பார்த்தபடி இருந்தேன். அப்போது ஒரு பறவை இறங்கி அங்குபோய் உட்கார்ந்தது. உச்சிவேளையில் அடித்த எதிர் வெயிலும் பாறையிலிருந்து கிளம்பும் தகிப்பும் கண்களைக் கூசச் செய்ததால் என்னால் சரிவரப் பார்க்கமுடியவில்லை. இன்னும் சிறிது ஏறிச்சென்று பார்க்கலாம் என்று நினைத்தபோது,  மலை மிகவும் சரிவாக இருந்ததால் ஏறிச் செல்ல முடியவில்லை. ஆயினும் ஒருவாறாக குச்சியின் உதவியுடன் ஒரு இடத்தை அடைந்து  சென்று பார்த்தபோது, பறவை அமர்ந்திருந்தது தெரிந்தது.அரசல்புரசலாக அது கருங்கழுத்துப் பாறுக்கழுகாக இருக்கலாம் என்று யூகித்தேன். ஆயினும் சரிவரத்தெரியவில்லை. ஏறிச்சென்ற களைப்பில் பசி எடுத்தது. அங்கேயே அமர்ந்து கொண்டுசென்ற எலுமிச்சைச் சோற்றை உண்டுகொண்டே அந்த முகட்டைப் பார்த்துக்கொண்டிருந்தேன். உணவுண்டுவிட்டு அருகே இருந்த புல்லில் கையைத் துடைத்துவிட்டு இருந்த தண்ணீரைக் கொஞ்சூண்டு குடித்துவிட்டு விராலிப்புதரின் நிழலில் தலைசாய்த்து அந்த முகட்டையே பார்த்துக்கொண்டிருந்தேன். இன்னொரு கழுகும் அதே இடத்தில் இறங்கியது. சந்தேகமில்லை. கருங்கழுத்துப் பாறு தான். அதன் தாடைப்பையில் இரையைச் சேமித்து எடுத்து வந்திருக்கக்கூடும். பார்த்தவுடன் மகிழ்ச்சிப் பிரவாகம் என்னுள் எடுத்தது. பத்தாண்டு எதிர்பார்ப்பு நிறைவேறியது. உண்மையில் ஒருபுறம் மகிழ்ச்சியைத் தந்தாலும் மறுபுறம் இந்த இனம் பெருகிவருவதற்கேற்ப அவற்றின் இரைக்குத் தட்டுப்பாடு இல்லாமலும் கிடைக்கும் இரை அவற்றுக்கு ஆபத்தை ஏற்படுத்தாமலும் இருக்கவேண்டும் என்றும் மனதார விரும்பினேன்.
சத்தியமங்களம் பகுதியில் கூடு பார்க்கப்பட்டது குறித்து வனத்துறை உயரதிகாரிகளுக்கும் தெரிவித்தேன். அவர்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அத்துடன் இந்தக் கூட்டை யாரும் தொந்தரவு செய்யாவண்ணம் பாதுகாக்கவேண்டும் என்ற அக்கறையையும் வெளிப்படுத்தினர்.

இதுகாறும்  பாறுக் கழுகுப் பாதுகாப்பு மண்டலம் முதுமலையை மையமாக வைத்தே வரையப்பெற்றது. இனி சத்தியமங்களம் பவானிசாகரை மையமாக வைத்து வேலைத்திட்டத்தை முடுக்கவேண்டும் என்றும் உறுதியெடுத்துள்ளோம். பயணம் தொடர்கிறது...

logo

'Arulagam' was founded in 2002 as a non-profit organisation in honour and memory of Mr. Arulmozhi, who inspired many of his friends, including ourselves – the members of Arulagam – through his commitment to environmental conservation. We believe that regardless of its value to humanity, every form of life and its ecosystem is unique.

Newsletter

Subscribe to our newsletters to receive latest news and updates.
I agree with the Privacy policy