Articles

டோடோ பறவை நமக்கு விட்டுச் சென்ற செய்தி என்ன?

டோடோ பறவை நமக்கு விட்டுச் சென்ற செய்தி என்ன?

"டோடோ” என்ற சொல்லுக்கு ஆங்கில அகராதி அறிவற்றவன் என்று பொருள் தருகிறது. ’டோடோ’ என்பது வெறும் சொல் மட்டும் அல்ல. அது ஒரு பறவையையும் குறிக்கும் ஒரு பெயர். ‘டோடோ போல் சாகாதே” (as dead as dodo) என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. இதற்குப்பின்னே ஒரு வருத்தமான நிகழ்வு இருக்கிறது. அந்த நிகழ்வை உங்களுக்கும் சொல்ல வேண்டும். நம் சந்ததிக்கும் தெரியப்படுத்த வேண்டும். அந்த நிகழ்வு என்ன? அதைத் தெரிந்து கொள்வோமா!. அதற்கு நாம் ஐநூறு ஆண்டுகள் பின்நோக்கிச் செல்லவேண்டும்…..

(அப்போது உண்மையில் என்ன நடந்தது என்பது நமக்கு முழுமையாகத் தெரியாது. என்னதான் நடந்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தபோது எழுந்த ஒரு கற்பனைக்காட்சி…..) 

Dodo Painting

அன்று ஒரு நாள்… ஐநூறு வருடங்களுக்கு முன்.. எழில் கொஞ்சும் மொரிசீயஸ் தீவை நோக்கி ஆடி அசைந்தபடி ஒரு போர்த்துக்கீசிய கப்பல் ஒன்று வந்தது. பழரசம் குடித்துத் தடித்துப்போன தமது நாக்கையும் வறண்டு கிடந்த தொண்டைக்குழியையும் நனைக்க குடிதண்ணீரைத் தேடி அத்தீவில் போர்த்துக்கீசியர்கள் முதலில் கால் பதித்தனர். அவர்களைப் புறா வகையைச் சேர்ந்த பறவைகள் நண்பர்களாக நினைத்து வரவேற்றன. கூழைக்கடா போன்று இருந்த அப்பறவைகளுக்கு மனிதனின் கயமைத்தனத்தைப் பற்றித் தெரியாது. ஏனெனில் அவை அதற்கு முன்பு மனிதர்களைப் பார்த்ததில்லை. அந்த மனிதர்களும் இந்தப் பறவைகளை முன்பின் பார்த்ததில்லை. புறாவின் ஒன்று விட்ட உறவினரான இப்பறவையால் விரைந்து ஓடவோ பறக்கவோ இயலாது. தத்தித் தத்தி நடக்கும். தண்ணீர் தேடி தீவில் இறங்கிய மாலுமிகள், பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்த அப்பறவையைக் கண்டு புருவத்தை உயர்த்தினர்; வசமாக வந்து மாட்டிய அந்தப் பறவையைக் கண்டு “நோகாமல் நொங்கு திங்கலாம்’ என மனக் கணக்குப் போட்டனர்.

இதை அறியாத அந்த அப்பாவிப் பறவைகள் புதிய விருந்தினர் நம் தீவுக்கு வந்துள்ளனர் என்று அவர்கள் அருகில் சென்று உரசி நின்று அவர்களைக் குளிர்ந்த கடல் காற்றிலிருந்து காத்துக் கதகதப்பை வழங்கின. அருகில் வந்து கதகதப்பை வழங்கிய பறவையின் உச்சந் தலையை அவன் கோதியபோது அவற்றின் கண்கள் சொக்கின. ஆனால் அதே நேரத்தில் மனிதனின் நாக்கிலோ எச்சில் ஊறியது.

அவன் உச்சந்தலையிலிருந்து கையை மெல்ல கீழே இறக்கி அதன் கழுத்தை இறுகப் பிடித்து நெறித்து அதனை நெருப்பில் வாட்டி உண்டு தன் உடலில் கதகதப்பை ஏற்றிக் கொண்டான். போர்த்துக்கீசியரைத் தொடர்ந்து பிரெஞ்சுக்காரர்கள் வந்தார்கள். அப்புறம் ஆங்கிலேயர்கள் அந்தத் தீவுக்கு வந்தனர். குடியேற்றமும் தொடங்கியது. அதனால் முன்னை விட அதிகமாகக் கணப்பு அடுப்பில் ’டோடோ’ வெந்து கொண்டே இருந்தது. மனிதனுக்கு மட்டுமல்ல. அவர்கள் வளர்க்கும் பூனைகளுக்கும் நாய்களுக்கும் கூடக் கொண்டாட்டம் தான். அவையும் இப்பறவையை உண்டு கனத்தன.

ஆனாலும் அந்த அப்பாவிப் பறவைகள் தன் தீவுக்கு வந்த விருந்தினர்களுக்குக் கதகதப்பை வழங்கவும் அவர்களின் வருடலில் சில விநாடிகள் சொக்கிப்போகவும் மீண்டும் மீண்டும் அவர்கள் அருகில் வந்தபடியே இருந்தன. இந்த பறவைக்கு அறிவு அறவே இல்லையோ!, என்ன செய்தாலும் தாங்கிக்கொண்டு மீண்டும் மீண்டும் தானாகவே அண்டி வந்து நம்மிடம் மாட்டிக்கொள்கிறதே “ரொம்ப நல்ல பறவையாயிருக்கே”, என்று தன்னை நம்பி வந்த அந்த பறவைகளைக் கழுத்தறுத்த அறிவாளி மனிதர்கள் பேசிக்கொண்டனர்.

மனிதர்கள் அந்தப் பறவைகளைத் கொன்றார்கள். கொன்று தின்று கொண்டே இருந்தார்கள். பசி அடங்கவே இல்லை. காயசண்டிகையைப் போல அகோரப் பசி. ஒரு அட்சய பாத்திரமும் கிடைக்கவில்லை. அந்த மணிபல்லவத் தீவிற்கு மணிமேகலையும் வரவில்லை.

இருந்த கடைசி பறவையும் மனிதன் மீது நம்பிக்கை வைத்து அவனுக்குக் கதகதப்பை வழங்க வந்தது. அதையும் அவன் விட்டுவைக்கவில்லை. அதன் கதையையும் முடித்தான். இப்படியாக அந்தப் பறவைக்கு 1662- ஆம் ஆண்டோடு இறுதி அஞ்சலி செலுத்தி முடிவுரையும் எழுதப்பட்டது. மனிதன் கால் பதித்த சுமார் நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்குள் அந்தத் திவீலிருந்து அந்தப் பறவை இனமே பூண்டோடு அற்றுப் போகச் (Extinct) செய்யப்பட்டது.

எல்லாவற்றிற்கும் பெயர் சூட்டும் மனிதன் தான் கொன்றொழித்த பறவையின் பெயர் தெரியாமல் திக்குமுக்காடிப்போனான். இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கூடிப் பேசினர். பெயர் சூட்டும் விழா வெகு விமரிசையாக நடந்தேறியது. அந்த நிகழ்வில் மதுக்கிண்ணத்தை ஏந்தியபடியே ஒருவன் சொன்னான், இந்தப் பறவைக்கு அறிவு அறவே இல்லை போலும். அதனால் தானே என்ன அடித்தாலும் கொன்றாலும் மீண்டும் மீண்டும் நம்மையே சுற்றிச் சுற்றி வந்தன. எனவே போர்த்துக்கீசிய மொழியில் அறிவற்றவனை, வெகுளியைக் குறிக்கும் சொல்லான ‘டோடோ’ என்ற சொல்லையே இதற்கும் சூட்டி விடலாம் என்றான். மற்ற அறிவாளிகளும் ஆகா! கககபோ! இது மிகச் சரியான பெயரென்று மதுக்கிண்ணங்களை ஓன்றோடொன்று உரசி ஆமோதித்தனர்.

பெயர் வைத்தாயிற்று. பெயர் வைத்தால் மட்டும் போதுமா. வருங்காலத் தலைமுறைக்கு இந்தப் பறவை எப்படி இருந்தது என்று காட்ட வேண்டாமா? என்ன செய்வது என்று சிந்தித்தனர். நல்லவேளையாக 1624-ல் இதை ஓவியர் ஒருவர் படமாக வரைந்து வைத்திருந்தார். அப்பாடா அப்போதுதான் அவர்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.

டோடோவின் அழிவைக் கண்டு மனம் நொந்த ரிச்சர்டு ஓவன் (Richard Owen) என்ற உயிரியலாளர் அந்த ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டு அதற்கு ஒரு உருவம் கொடுக்க 1865-ல் முன்வந்தார். இப்பறவையின் எலும்புகளையெல்லாம் சேகரித்து இப்படித்தான் இப்பறவை இருந்திருக்க வேண்டும் என்று அதற்கு ஒரு உருவமும் கொடுத்தார். இந்த ஓவியமும் உருவமும் தான் இப்போது இப்பறவை குறித்து நம்மிடம் இருக்கும் ஆவணங்கள்.

அண்மையில் இப்பறவை குறித்து மீள் ஆய்வு ஒன்று யூஜினா கோல்டு (Euginea Gold) என்ற ஆய்வாளர், தலைமையில் நடைபெற்றது. இப்பறவையின் ஒன்று விட்ட உறவினரான புறாவை ஒப்பிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் இந்தப் பறவை எல்லோரும் பொதுவாகக் குறிப்பிடுவது போல ’அறிவில்லாத பறவை அல்ல’, “அறிவுள்ளவையே” என்று தெரிய வந்தது. அதை வெளி உலகிற்கும் அவர் உரக்கத் தெரிவித்தார். என்ன சொல்லி என்ன ஆகப்போகிறது. அந்தப் பறவை திரும்பி வரவா போகிறது? எனவே இந்தப் பறவை அறிவுடையதா அல்லது அறிவற்றதா என்ற ஆராய்ச்சியை ஒதுக்கிவைத்துவிட்டு இப்பறவை இல்லாததால் என்ன சிக்கல் நேர்ந்துள்ளது என்று பார்ப்போம்.

“தன்னால் தான் மரமும் மரத்தால் தான் தானும் வாழ்கிறோம் என்பதை அறியாமல் வாழ்ந்த டோடோ 
பறவையும் கல்வாரியா மரத்தைப் போலவும் தான் ஐல்லிக்கட்டுப் போராட்டத்தை இளைஞர்கள் நடத்திச் சென்றனர்
- எழுத்தாளர் பரணி” (தளம் கலை இலக்கிய இதழ்)

“டோடோ’ பறவை இல்லாது போனதால் என்ன நேர்ந்தது?

மொரீசியஸ் தீவில் “கல்வாரியா” (Calvaria major) எனப்படும் மரங்கள் அத்தீவின் அழகுக்கு அழகு சேர்த்து வந்தன. ’கல்வாரியா’ மரத்தின் பழங்கள் ’டோடோ’ பறவைக்கு ஒரு முக்கியமான தீனி. கல்வாரியா மரத்திற்கும் டோடோவுக்கும் எழுதப்படாத ஒரு ஒப்பந்தம் இருந்தது. “என் பழத்தைத் தின்று என் இனத்தைப் பரப்பு” என்பதுதான் அது. டோடோ அம் மரத்தின் பழத்தை அப்படியே முழுங்கிப் பசி தீர்த்துக்கொண்டது. வயிற்றுக்குள் நுழைந்த அம் பழத்தின் விதைகள் அங்கு வேதியியல் மாற்றமடைந்து முளைப்புத் திறன் பெற்றன. எச்சத்தில் விழுந்த விதைகளே பின்னர் முளைத்து மரமாகின.

இப்போதெல்லாம் ஏன் புதிதாக ஒரு கல்வாரியா மரம் கூட முளைக்கவில்லை என்று உற்று ஆராய்ந்தபோதுதான் இந்த ஒத்திசைவும் உடன்படிக்கையும் தெரியவந்தது. இதைக் காலங்கடந்து மனிதன் உணர்ந்தான். நாம் அறிந்தது இந்த ஒரு செய்தி தான். நம் அறிவுக்குப் புலப்படாத தெரியாத நுட்பமான செய்திகள் இதுபோல ஏராளம். ஏராளம். ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பதைப்போல இயற்கையின் ஒத்திசைவை நினைவில் கொள்வோம்.

இந்த இடத்தில் நாஜிகளின் சித்ரவதைக்கு ஆளான ஜெர்மனியைச் சேர்ந்த பாதிரியார் “மார்டின் நீய் முல்லர்” (Martin Nei Muller) 1946- களில் எழுதிய கவிதை வரிகள் இந்தச் சூழலுக்குப் பொருத்தமாய் இருக்கும் என்று தோன்றுகிறது,

‘’முதலில் அவர்கள் யூதர்களைப் பிடிக்க வந்தார்கள்
நான் பேசாமல் இருந்தேன். ஏனெனில் நான் யூதனில்லை!
அடுத்து அவர்கள் கிறித்துவர்களைப் பிடிக்க வந்தார்கள். அப்பொழுதும் பேசாமல் இருந்தேன்!.
ஏனெனில் நான் கிறித்துவனில்லை.
பிறகு அவர்கள் மார்க்சியர்களைப் பிடிக்க வந்தார்கள் அப்பொழுதும் நான் வாளாதிருந்தேன்!
ஏனெனில் நான் மார்க்சியனில்லை.
இறுதியாக
அவர்கள் என்னைப் பிடிக்க வந்தார்கள்.!
இப்போது எனக்காகக் குரல் கொடுக்க எவருமே இல்லை’’

இந்தக் கவிதையில் “யூதன்”, “கிறிஸ்தவன்”, “மார்க்சியன்” என்பதை எடுத்து விட்டு “கழுகு”, “காட்டு வாத்து”, “கானாங் கோழி”, “பூஞ்சிட்டு” “டோடோ” என மாற்றிப் போட்டுப் படித்துப் பாருங்கள். நிலைமை தெள்ளத் தெளிவாக விளங்கும்.

டோடோவின் அழிவு மனிதர்களின் அழிச்சாட்டியத்திற்குக் கடந்த தலைமுறையினர் விட்டுச்சென்ற ஒரு மாறாத வடு. அப்பொழுது வேண்டுமானால் உயிரினங்கள், இயற்கை, சுற்றுச்சூழல் இவை குறித்த புரிதல் இல்லாமல் இருந்திருக்கலாம். இப்பொழுது நாமும் அப்படி இருக்கக்கூடாது அல்லவா? ஆறறிவு படைத்த விலங்கு என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் நாம் தானே இவற்றுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். அறம் சார்ந்து தனது ஆறாவது அறிவைக் கொண்டு மனிதன் எல்லா உயிரினங்களையும் பேணுவான், பல்லுயிர் ஓம்புவான் என்று இயற்கை எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் நிலைமை இப்படித் தலைகீழாகிப் போகும் என்று அது எதிர்பார்த்திருக்காது. நம்மைப்போன்ற இயற்கையாளர்கள் இப்பூவுலகில் அதிகமானால் நிலைமை சரியாகிவிடும் என்று நம்பலாம்.

மனிதர்களால் அழித்தொழிக்கப்பட்ட அழிவுக்கே இலக்கணமாகிப்போன “டோடோ” பறவைக்கு நேர்ந்த கதி பிற உயிரினங்களுக்கும் இனி ஏற்படாமல் காப்பதற்கு முன்வருவோம். இல்லையென்றால் மனிதனுக்கும் அதே கதிதான் நேரும்.

முன்பே சொன்னது போல ஒரு உயிரினம் அற்றுப் போகும் நேரத்தில் கடுமையான முயற்சி எடுப்பதை விட அந்த நிலை ஏற்படாமல் தடுத்து பல்லுயிரினங்களும் செழித்துவாழும் பூவுலகை நாம் நம் வருங்காலத் தலைமுறைக்கு விட்டுச் செல்வோம்.

செத்தாலும் காசு பார்க்கும் கொடுமணம் படைத்தவர்கள் டோடோவையும் விட்டுவைக்கவில்லை.
‘டோடோ’ என்ற பெயரில் ஒரு மதுபானத்தை அறிமுகப்படுத்தி “’உங்களுக்குள் தொலைந்து போங்கள்’’
(Drink yourself into Extinction) என்று விளம்பரம் செய்கின்றனர்.
logo

'Arulagam' was founded in 2002 as a non-profit organisation in honour and memory of Mr. Arulmozhi, who inspired many of his friends, including ourselves – the members of Arulagam – through his commitment to environmental conservation. We believe that regardless of its value to humanity, every form of life and its ecosystem is unique.

Newsletter

Subscribe to our newsletters to receive latest news and updates.
I agree with the Privacy policy