Our Blog

Workshop

பாறுக் கழுகுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி (16-3-2024)

 
 
 
பாறுக் கழுகுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காகவும் கால்நடைகளுக்குத் தடை செய்யப்பட்ட மருந்துகள் குறித்துத் தெரிவிப்பதற்காகவும்  மருந்துக்கடை நிர்வாகிகள் மற்றும் மருந்து மொத்த வணிகர்களுக்குக் களப்பயணத்துடன் கூடிய விழிப்புணர்வு நிகழ்ச்சி  முதுமலைப் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பைக் காட்டில்  (16-3-2024) அன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதுமலை சுற்று வட்டாரப் பகுதியில் பணிபுரியும் கால்நடை மருத்துவர்களும் மருந்து விற்பனையாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்விற்குத் தலைமையேற்று துணை இயக்குநர் அருண்குமார் அவர்கள் பேசும் போது, தமிழ்நாடு அரசு அழிவின் விளம்பிலுள்ள ‘பாறு’க் கழுகுளை மீட்டெடுக்க முனைப்புடன் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும் ‘பாறு’க் கழுகுகள் பேரழிவு அழிவுற்றமைக்குக் காரணம், வலிபோக்கி மருந்தான டைக்குளோபினாக் தான் என்பதைக் கருத்தில்கொண்டு அம்மருந்தை மருந்துக் கட்டுப்பாட்டு ஆளுநர் கடந்த 2006 ஆம் ஆண்டே தடை செய்தார். ஆயினும் மனிதர்களுக்கு அனுமதிக்கப்பட்ட டைக்குளோபினாக் 30 மிலி மருந்துக் குப்பிகள் தவறுதலாகக் கால்நடைகள் பயன்பாட்டுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டதைக் கருத்தில் கொண்டு  2016 ஆம் ஆண்டு 3 மிலிக்கு மேல் டைக்குளோபினாக் உற்பத்தி செய்யவும் தடைவிதிக்கப்பட்டது என்று குறிப்பிட்டார். அதேபோல 2023 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் பாறுக் கழுகுகளுக்குத் தீங்கு பயக்கும் பிற மருந்துகளான அசிக்குளோபினாக் மற்றும் கீட்டோபுரோபேன் ஆகிய மருந்துகளையும் அரசு தடை செய்துள்ளது எனவும் இந்தச் செய்தியை மருந்து விற்பனையாளர்களிடமும் மருந்து மொத்த விற்பனையாளர்களிடமும் எடுத்துச் சொல்லும் நோக்கோடு இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் தடை செய்யப்பட்ட அசிக்குளோபினாக் (aceclofenac), கீட்டோபுரோபேன் (Ketoprofen) மருந்துகள் கைவசம் இருந்தால் அதை அழித்துவிடவும் அறிவுறுத்தினார்.

கால்நடைத்துறை உதவி இயக்குநர்  மருத்துவர் பார்த்தசாரதி அவர்கள் பேசும்போது, பாறுக் கழுகுகளுக்குப் பாதுகாப்பான மருந்தான மெலாக்சிகம் மற்றும் டோல்பினமிக் ஆசிட் ஆகியவை மட்டுமே கால்நடை மருந்தகங்களுக்கு வாங்கப்படுவதாகவும் கால்நடை மருத்துவர்கள் தடைசெய்யப்பட்ட மருந்துகள் குறித்து அறிந்துள்ளதாகவும் தொடர்ந்து அவர்களுக்கு அறிவுறுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். ஆயினும் கால்நடை மருத்துவர்கள் தவிர்த்துப் பிறரும் இதனைப் பயன்படுத்தாமல் கண்காணிப்பது அவசியம் எனவும் கால்நடை மருத்துவர்களின் மருந்துச் சீட்டு இல்லாமல் கடைகளில் எந்த மருந்தையும் விற்கக் கூடாது எனவும் தெரிவித்தார்.

மருந்துக் கட்டுப்பாட்டு ஆய்வாளர் திரு பாலாஜி அவர்கள் பேசும்போது,  தற்போது அரசு டைக்குளோபினாக்குடன் சேர்த்து அசிக்குளோபினாக் மற்றும் கீட்டோபுரோபேன் ஆகிய மருந்துகளையும் தடைசெய்துள்ளதாகவும் தடைசெய்யப்பட்ட மருந்துகளை விற்றால் சிறைத்தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தார். சட்டத்திற்குப் புறம்பாக டைக்குளோபினாக் மருந்தை விற்றதற்காக  நீலகிரி மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட மருந்துக்கடைகள் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். அழகான நீலகிரி மலைக்கு ஆதாரமாய் விளங்கும் பல்லுயிரினங்களையும் அழிவின் விளிம்பிலுள்ள பாறுக் கழுகுளையும் பாதுகாக்கும் நோக்குடன் அறம் சார்ந்து செயல்பட வேண்டும் என மருந்து வணிகர்கள்களைக் கேட்டுக்கொண்டார். எந்த நேரத்திலும் துறையின் உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் மருந்துக் கடைகளில் சோதனை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை தெரிவித்தார்.

நீலகிரி மாவட்ட மருந்து விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் திரு கோபால் பேசும்போது, மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் அறிவுறுத்தல் படி தங்கள் சங்க உறுப்பினர்கள் செயல்பட்டு வருவதாகவும்  மனித உயிர்களை மட்டுமின்றி பாறுக் கழுகுகள் உள்ளிட்ட பிற விலங்குகளையும் பாதுகாக்க நாங்கள் உறுதுணையாக இருப்போம் எனவும் கூறினார். மேலும் தடைசெய்யப்பட்ட மற்றும் ஆபத்தான மருந்துகளை நீலகிரி மாவட்ட மருந்துக்கடை நிர்வாகிகள் விற்க மாட்டார்கள் என உறுதி கூறுவதாகவும் அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு நல்குவதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு வனத்துறை உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்தார்.

கூடலூரைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்  சுகுமார் அவர்கள் பேசும்போது, பாறுக் கழுகுகள் அழிவிற்குப் பல்வேறு காரணிகள் உள்ளதைப் பட்டியலிட்டார். அத்துடன் பட்டி மாடுகள் குறைந்து போனதையும் இறந்த மாடுகள் புதைக்கப்படுவதையும் விசம் தடவப்பட்டு இறக்க நேரிடுவதையும் சுட்டிக்காட்டினார். டைக்குளோபினாக் தான் முதன்மைக் காரணம் என்பதைத் தெரிந்தவுடன் அம் மருந்தை அறவே தாம் புறக்கணித்ததாகவும் ஏனைய கால்நடை மருத்துவர்களுக்கும் இது குறித்து அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

பாறுக் கழுகுகளின் வகை குறித்தும் அவை சூழலியல் மற்றும் உணவுச்சங்கிலியில் ஆற்றும் பங்கு குறித்தும் ஆராய்ச்சியாளர் டாக்டர் மணிகண்டன் எடுத்துரைத்தார். அத்துடன் மருந்துக் கடைகளில் கீட்டோபுரோபேன், புளுநீக்சின் (்Flunixin) மருந்துகள் கிடைத்து வருவது குறித்தும் கவலை தெரிவித்தார். தடை உத்தரவு குறித்து மருந்துக் கடை முதலாளிகள் தெரிந்து வைத்திருப்பதாகவும் பணிபுரியும் ஊழியர்கள் எவ்வித மருந்துச் சீட்டும் இல்லாமல் மருந்தை விற்று வருவதாகவும் கவனப்படுத்தினார்.

கால்நடை மருத்துவர் பிருந்தா இராகவன் (CWS) பேசும்போது, டைக்குளோபினாக் மருந்து புழக்கத்திற்கு வந்த காலகட்டத்திற்கும் பாறுக் கழுகுகள் இறப்புக்கும் உள்ள நேரடித் தொடர்பை எடுத்துரைத்தார். டைக்குளோபினாக் மருந்து உடனடியாக வலியைப் போக்குவதால் அதனை மேஜிக் மருந்து எனத் தான் உள்ளிட்ட கால்நடை மருத்துவர்கள் அனைவரும் கொண்டாடியதாகவும் தெரிவித்தார். வேறு மருந்துகள் போடப்பட்டபோது, மாடு குணமாக நேரம் ஆனதால்  கால்நடை வளர்ப்பவர்களும் சென்றமுறை போட்ட மருந்தைப் போடச்சொல்லி வற்புறுத்தியதாகவும் அதனால் கால்நடை மருத்துவர்கள் டைக்குளோபினாக் மருந்தைப் பயன்படுத்த உந்தித் தள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். தற்போது அசிக்குளோபினாக் மருந்தும் கீட்டோபுரோபேன் மருந்தும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் ஆயினும் இன்னமும் அவை கிடைத்து வருவதாகவும் தெரிவித்தார். உடனே இது குறித்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக முதல்கட்டமாக விழிப்புணர்வு ஏற்படுத்த இந்நிகழ்ச்சி உதவும் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வு குறித்து அருளகத்தின் செயலர் சு. பாரதிதாசன் அவர்கள் பேசும்போது, பாறுக் கழுகுகளைக் காக்க தனிநபரோ, நிறுவனமோ, ஆராய்ச்சியாளர்களோ, வனத்துறையோ நினைத்தால் மட்டும் முடியாது எனவும் ஊர்கூடித்தேர் இழுத்தல்போன்று அனைவரும் சேர்ந்து முயறிசித்தால் தான் அழிவின் விளிம்பில் இருக்கின்ற பாறுக் கழுகுகளைக் காப்பாற்ற முடியும் என்றும் தெரிவித்தார். அந்த அடிப்படையில் தான் இந்த விழிப்புணர்வுக் கூட்டம் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

பாறுக் கழுகுகள் மிக எளிதாக 100 கி.மீ தூரம் பறக்கக் கூடியது எனவும் அவை ஆண்டுக்கு ஓரேஒரு முட்டை மட்டுமே இடும் என்பதாலும் இவற்றின் எண்ணிக்கையைப் பெருக்கத் தொடர்ந்து வேலை செய்யப்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அத்துடன் டைக்குளோபினாக் மருந்துதான் பாறுக் கழுகுகளின் அழிவிற்கு முதன்மைக் காரணி என்பதைக் கண்டறிய உலகிலுள்ள பல்வேறு நாடுகளும் எப்படிக் கைகோர்த்து வேலை செய்தன என்பது குறித்தும் எடுத்துரைத்தார். குறிப்பாக டாக்டர் விபு பிரகாசு (Dr. Vibhu Prakash, லிண்ட்சே ஓக்சு (Lindse Oaks), ரைஸ்கீரீன் (Rhys Green) ஆகியோரது பங்கு குறித்தும் இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிலையம், (Indian Veterinary Research Institute) பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகம் (Bombay Natural History Society), பெரிக்கிரின் பண்டு (Peregrine Fund), ராயல் சொசைட்டி பார் த புரொடக்சன் ஆப் பேர்ட்சு (Royal Society for the Protection of Birds), முல்தான் கால்நடைப் பல்கலைக் கழகம் (Multan district Veterinary Institute) சேவ் (Saving Asia's Vultures from Extinctions) உள்ளிட்ட அமைப்புகளின் பங்கு குறித்தும் நேபாளம், பங்களாதேசு, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் எடுக்கப்பட்டு வரும் முன்முயற்சி குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

இந்தியாவிற்கே முன்னோடியாகத்  தமிழ்நாடு அரசு, கீட்டோபுரோபேன் மருந்தைக் கால்நடை மருந்துகங்களுக்கு வாங்காமல் 2014 ஆம் ஆண்டே விலக்கியதையும் புளுநிக்சின் மருந்தை 2019 ஆம் ஆண்டே கால்நடைத்துறை விலக்கியதையும் நன்றியுடன் குறிப்பிட்டார்.

மேலும் அவர் தனது உரையில் பீகார் மற்றும் மத்தியப்பிரதேசத்திலுள்ள கடைகளில் 2020 ஆம் ஆண்டு லேபிள் ஓட்டப்பட்ட டைக்குளோபினாக் 30 மிலி குப்பி அண்மையில் கிடைத்தது குறித்தும் குண்டல்பேட்டையில் 10 மிலி குப்பிக் கிடைத்தது குறித்தும் எச்சரிக்கையுடன் கவனப்படுத்தினார்.

தடைசெய்யப்பட்ட மருந்துகளைக் கிடைக்காமல் செய்ய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கோத்தகிரியைச் சேர்ந்த மருந்துக் கடைக்காரர் சுரேஸ்பாபு அவர்கள் கேட்டார். அதுகுறித்துப் பதிலளிக்கும்போது, இதில் அரசு எவ்வளவு கண்ணும் கருத்துமாய் இருந்தாலும் தடை செய்யப்பட்ட மருந்து ஊடுறுவி விடும் எனவும் மருந்துக் கடைக்காரர்களும் கூட தாங்கள் விற்க நினைத்தால் யாருக்கும் தெரியாமல் தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்க முடியும் எனவும் அறம் சார்ந்து செயல்பட்டால் மட்டுமே அதற்குத் தீர்வு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

அரங்கில் கூடியுள்ள நபர்களை விடக் குறைவான எண்ணிக்கையில் தான் செம்முகப் பாறுக் கழுகும் கருங்கழுத்துப் பாறுக் கழுகும் இருப்பதாகவும் மஞ்சள் முகப்பாறுக் கழுகு எண்ணிக்கை சொல்லிக்கொள்ளும்படி ஒரு சோடி கூட இல்லை எனவே அவற்றை மீட்டெடுக்கப் போர்க்கால அடிப்படையில் வேலை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

ஒரு உயிரினத்தைக் காக்க வேண்டுமானால் அவ்வுயிரினத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் அத்துடன் அதன்மீது உள்ளார்ந்த அன்பு செலுத்தவேண்டும் நேசம் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவ்வுயிரினத்தைக காக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் என்ற புகழ்மிக்க ஜேன்குடால் அவர்களின் வரிகளையும் தனது உரையில் மேற்கோளாக எடுத்துரைத்து உரையை நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக,
‘பாறு'க் கழுகுகளுக்குக் கேடு பயக்கும் டைக்குளோபினாக், அசிக்குளோபினாக், கீட்டோபுரோபேன், புளூநிக்சின், நிமுசுலாய்டுசு, அனால்ஜின் ஆகிய மருந்துகளைக் கால்நடைப் பயன்பாட்டிற்காக விற்க மாட்டோம் எனவும் இறந்த விலங்குகளை உண்டு நம்மையும் காட்டு விலங்குகளையும் காக்கும் பாறுக் கழுகுகளின் வாழ்வு எங்களோடும் எங்களது வருங்காலத் தலைமுறையுடனும் தொடர்புடையது எனவும் அவை வாழ்வாங்கு வாழ வனத்துறையுடன் இணைந்து செயல்படுவோம் என உறுதியேற்கிறோம் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பங்கேற்பாளர்கள் பாறுக் கழுகுகளின் வாழ்விடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் இயற்கை அழகையும் பாறுக் கழுகுகளின் வாழ்விடத்தையும் கண்டு இரசித்தனர்.

அருளகம் சார்பாக தடைசெய்யப்பட்ட மருந்துகள் குறித்த வெளியான அரசிதழ் நகல் வழங்கப்பட்டது . அத்துடன் பாறுக் கழுகுகள் குறித்த அறிவியல் பூர்வமான தகவல்கள் அடங்கிய விளக்கப் படமும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதில் இந்தியாவிலும் தமிழகத்திலும் காணப்படும் பாறுக் கழுகுகளின் வகை, அவற்றுக்குள்ள கலாச்சாரத் தொடர்பு, இலக்கியத் தொடர்பு, பாறுக் கழுகுகள் சூழலியல் பயன்பாட்டுக்கு ஆற்றும் சேவை, அவை அழிவிற்கான காரணங்கள், அதனால் உணவுச் சங்கிலியில் ஏற்படும் அதிர்வு, அழிவிலிருந்து மீட்க நாம் செய்யவேண்டியது, தமிழ்நாடு மற்றும் ஓன்றிய அரசு மேற்கொண்ட முன்முயற்சிகள் ஆகியன குறித்த விளக்கப் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இது பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.

முன்னதாக சீகூர் வனச்சரகர் திரு. தயாளன் அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வரவேற்றார்.  நிகழ்ச்சியை சிங்காரா வனச்சரகர் திரு. ஜான் பீட்டர் ராஜ் மற்றும் மசினகுடி வனச்சரகர் திரு. பாலாஜி ஆகியோர் இணைந்து நெறிப்படுத்தினர். நிகழ்ச்சிக்குத் தேவையான ஏற்பாடுகளை முதுமலைப் புலிகள் காப்பகம் மசினகுடிக் கோட்டம் ஏற்பாடு செய்திருந்தது.
 
logo

'Arulagam' was founded in 2002 as a non-profit organisation in honour and memory of Mr. Arulmozhi, who inspired many of his friends, including ourselves – the members of Arulagam – through his commitment to environmental conservation. We believe that regardless of its value to humanity, every form of life and its ecosystem is unique.

Newsletter

Subscribe to our newsletters to receive latest news and updates.
I agree with the Privacy policy