பாறு கழுகுகள் நாள் ஆண்டுதோறும் செப்டம்பர் முதலாம் சனிக்கிழமை பல்வேறு நாடுகளிலும் கடைபிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு அருளகம் இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நீலகிரி, சத்தியமங்களம் பகுதியில் நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக அரசு கலைக்கல்லூரி சூழல் சங்கத்துடன் இணைந்து உதகமண்டலம் ரோஜாப் பூங்காவிலும் மாயாறிலும் கையெழுத்து இயக்கத்தை இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு நடத்த உள்ளது.

இறந்ததைத் தின்று இருக்கும் உயிரினங்களைக் காக்கும் பாறு கழுகுகளின் நன்மை குறித்தும் அவை அழிவபாயத்திலுள்ளது குறித்தும் அவற்றை அழிவிலிருந்து மீட்கப் பொதுமக்களது பங்கேற்பை நாடியும் இக்கையெழுத்து நடத்தப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

 அருளகத்தின் செயலர் சு.பாரதிதாசன் கூறும்போது, பாறு கழுகினங்கள் குறித்துத் தவறான கண்ணோட்டம் மக்களிடையே நிலவுவதை மாற்றுவதற்காக இதுபோன்ற கையெழுத்து இயக்கம் பொதுமக்கள் கூடும் இடங்களில் நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.அத்துடன் இவ்வினம் அழிந்ததற்கு முதன்மைக் காரணமாக அமைந்த வலிபோக்கி மருந்துகளான டைக்குளோபினாக், அசிக்குளோபினாக், கீட்டோபுரோபேன், நிமுசிலாய்ட்சு ஆகிய மருந்துகளை ஒன்றிய அரசு தடைசெய்துள்ளதையும் வரவேற்றார். 

 

தமிழ்நாடு அரசு கழுகினங்கள் பாதுகாப்புக்காக உயர் ஆராய்ச்சி நிறுவனம் அமைத்துள்ளதையும் அதில் முதல்கட்டமாக இறந்த விலங்குகளைப் புதைக்காமல் இறந்த உடலங்களை உண்ணும் விலங்குகளுக்கு விடுவதற்காக வழிகாட்டு நெறிமுறை ஒன்றை உருவாக்கியுள்ளதையும் பாராட்டினார். 

தமிழ்நாடு அரசின் வனத்துறை, கால்நடைத்துறை, மருந்துக்கட்டுப்பாட்டுத்துறையின் ஒத்துழைப்புடன்தற்போது இதன் எண்ணிக்கை மெல்ல மெல்லக் கூடி வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டி இதன் எண்ணிக்கைத் தொடர்ந்து உயர நம் அனைவரது பங்கேற்பும் தேவை என்றார். குறிப்பாகத் தடைசெய்யப்பட்ட மருந்துகளைக் கால்நடை சிகிச்சை மேற்கொள்வோர், மேய்ப்போர், மருந்து விற்பனை செய்வோர் அறவே புறக்கணிக்கவேண்டும் என்றும் சடலத்தில் விசம் தடவும் கொடுஞ்செயலையும் நிறுத்தவேண்டும் என்றும் இறந்த விலங்குகளைப் புதைக்காமல் அப்படியே விடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நீலகிரியின் அடையாளங்களுள் ஒன்றாகவும் பெருமையுள் ஒன்றாகவும் விளங்கும் இப் பறவை இனங்கள் குறித்து மலர்க்கண்காட்சி நடைபெறும்போதும் காட்சிப்படுத்தவேண்டும் என்றும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். 

சிறப்பு அழைப்பாளராக தோட்டக்கலைத்துறை அலுவலர் திருமதி பிரியா, வனவிலங்கு உயிரியல் துறைத் தலைவர் பேரா. ராமகிருக்ஷ்ணன் மற்றும் அருளகத்தின் இணைச்செயலர் ஜோ மெல்கிஸ் ராஜா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் மூன்று வகையான ( (வெண்முதுகுப் பாறு, கருங்கழுத்துப்பாறு, செம்முகப் பாறு) ஆகிய கழுகினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் வெண்முதுகுப்பாறு 288ம், செம்முகப்பாறு 47ம் கருங்கழுத்துப் பாறு 50ம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

கையெழுத்து இயக்கம் இடும் பதாகையில் க்யு ஆர் குறி இணைக்கப்பட்டு தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் பாறு கழுகுகள் குறித்து  மேலதிக விளக்கம் தெரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. கையெழுத்து இடும் ஒவ்வொருவருக்கும் புத்தகத்தில் வைத்துக்கொள்ளக்கூடிய விழிப்புணர்வு வாசகங்களும் வழங்கப்படுகின்றன.

ஊட்டிக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகள் வருகை தந்து சிறப்பிக்குமாறும் பாறு கழுகுகள் குறித்துத் தெரிந்துகொள்ளுமாறும் ஏற்பாட்டாளர்கள் சார்பாக வேண்டுகோள் விடப்பட்டது. 

 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆராய்ச்சியாளர்கள் திரிஸ்யா, வர்சா,மற்றும் அருளகத்தின் சார்பாக சிவரஞ்சனி, விபிசு, கவிதா, நிலிதா, சுந்தரி, ரேவதி, ஜான்  ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

 

அன்புடன்,

 

Bharathidasan S,

Secretary,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *