Community Conservation Fellow வாக உலகமெங்கும் 32 பேர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டப் போது நான் உளமாற மகிழ்ந்தேன். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கட்குப் பல்வேறு வகையானக் களப்பயிற்சியுடன் International Society for Ethanobiology சார்பாக மொராக்கோ நாட்டில் மராக்கேசு எனும் பண்டைய நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட Biodiversity and Cultural landscape குறித்தானப் பன்னாட்டு மாநாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பையும் வழங்கியது கூடுதல் சிறப்பு.
மொராக்கோ நாட்டிற்குச் செல்வது இதுதான் முதன்முறை. இந்நாட்டின் பெயரைக் கால்பந்தாட்டப்போட்டிகள் நடைபெறும்போது கவனித்திருக்கிறேன். ஒரு முறை நண்பருடன் நடந்த உரையாடலின்போது நமது பெருவாரியான ஊடகங்கள் அமெரிக்காவில் நடைபெறும் விசயங்களுக்கே ஏன் முதன்மையளிக்கிறது. மொரோக்கா போன்ற நாடுகளில் நடப்பனவற்றை ஏன் நமக்குக் காட்ட முன்வருவதில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். எனக்கும் மொரோக்காவிற்குமான உறவு இந்த அளவில்தான் இருந்தது.
நிகழ்வுக்காக மொரோக்காவுக்குப் பயணிக்கத் திட்டமிட்டபோது நான் போக நினைத்த ஒரே இடம் ஜெபல் முசா. ‘ஜெபல்’ என்றால் அரபி மொழியில் மலை என்று பொருள். இந்த இடம் அட்லாண்டிக் பெருங்கடலும் மத்தியதரைக் கடலும் சந்திக்கும் இடமான ஜிப்ரால்டர் நீரிணைப்பை ஒட்டி அமைந்துள்ள குறிஞ்சியும் நெய்தலும் சந்திக்கும் இடம் ஆகும்.
ஆப்ரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடைப்பட்டக் கடல்பகுதியான ஜீப்ரால்டர் நீரிணைப்புக் குறித்து மாணவப் பருவத்தில் புவியியல் பாடத்தில் படித்த நினைவு. உலக வரைபடத்தில் இந்த இடத்தைக் குறிக்கச் சொல்லிக் கேள்வி வரும். அப்போது அந்தக் கேள்விக்கான பதிலை நான் சரியாகக் குறித்தேனா என்பது என் நினைவில் இல்லை. ஆப்ரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கும் ஐரோப்பாவிலிருந்து ஆப்ரிக்காவுக்கும் இடைப்பட்ட 14 கிலோமீட்டர் தொலைவைக் கள்ளத்தனமாகக் கடக்க ஊடுறுவல்காரர்கள் இந்த இடத்தைப் பயன்படுத்திக்கொள்வது வழக்கம். அதனால் இந்த இடம் எப்போதும் ஒரு கண்காணிப்பில் இருப்பது உண்டு. இப்பகுதியைக் கடக்க முற்பட்டுப் பலர் மாண்டுபோவதுண்டு. அதனால் இப்பகுதியைக் ‘குடியேறிகளின் மரணப்பாதை’ எனவும் அழைக்கப்படுவதுண்டு.

பண்டைய உரோமானியத் தொண்மக் கதையில், ஹெர்குலஸ் என்பவர் பலவீனமானவர்களின் பாதுகாவலர் என அறியப்படுகிறார். ஒரு காலத்தில் எரிதியா தீவில் உள்ள ஹெஸ்பெரைட்சு தோட்டத்திற்குச் செல்ல , அட்லஸ் மலையைக் கடக்க வேண்டியிருந்தது . அதனைத் தவிர்க்க, ஹெர்குலஸ் தனது பலத்தையும் வலிமையையும் பயன்படுத்தி அட்லாண்டிக் பெருங்கடலை மத்தியதரைக் கடலுடன் இணைக்க ஜீப்ரால்டர் நீரிணைப்பை உருவாக்கினார் . பிளவுபட்ட மலையின் ஒரு பகுதி ஜிப்ரால்டர் எனவும் மற்றொரு பகுதி ஜெபல் மூசா எனவும் அழைக்கப்பட்டது . இந்த இரண்டு மலைகளும் சேர்த்து ஹெர்குலஸின் தூண்கள் என்று அழைக்கப்படுகின்றன.
வரலாற்றையும் புவியியலையும் அரசியலையும் தொண்மக் கதைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு உயிரியல் கண்ணோட்டத்தில் நான் அங்கு போக நினைத்ததற்கானக் காரணத்தைச் சொல்கிறேன். அங்கு GREPOM/Birdlife Maroc (https://www.grepom.org/ )என்ற அமைப்பு பாறுக்கழுகுகளைக் காக்கச் சிரத்தையுடன் அங்குப் பணிபுரிந்து வருவதை சிஇபிஎப் அமைப்பின் சோசியல் மீடியாப் பக்கத்தில் ஜாக்டுர்டாப் அவர்கள் எழுதியிருந்ததை வாசிக்கும் வாய்ப்புக்கிட்டியது. அந்தஅமைப்பு மேய்ப்பர்களுடன் இணைந்து பணிபுரிந்து வருவது குறித்தும் அவர்கள் வளர்க்கும் கால்நடைகளிலிருந்து பெறப்படும் பாலை மதிப்புக்கூட்டுவது, இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவர்களோடு இணைந்து உயிரினங்கள் பாதுகாப்புத் தொடர்பானப் பணிகளை முன்னெடுப்பது ஆகிய செயல்களை மேற்கொண்டு வருவதை அறிந்தேன். நான் சார்ந்திருக்கும் அருளகம் அமைப்பும் அதேபோன்ற வேலைத்திட்டத்தைத் தமிழ்நாட்டில் முன்னெடுத்துள்ளதால் அவர்கள் செய்யும் வேலையைப் பார்த்துக் கூடுதலாகத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற விருப்பம் மேலிட்டது. அங்கு போக விரும்பியது குறித்து சிஇபிஎப் அமைப்பின் மேலாளர் ஜாக்டுர்டாப் அவர்கட்கும் சேவ் அமைப்பின் மேலாளர் கிறிஸ்போடனும் அவர்கட்கும் தகவல் தந்தேன். அவர்கள் எமது பணி குறித்தும் நான் அங்கு வர விரும்புவது குறித்தும் அம்மையத்தின் மேலாளர் ரசீத் அவர்கட்குத் தகவல் தெரிவித்தனர். அதனால் எனது பயணம் எளிமையானது.
Biodiversity and Cultural landscape மாநாடு முடிவெய்தவுடன் ஜெபல் மூசா எப்படிச் செல்லலாம் எனக் கூகுளில் தேடியபோது அந்த இடம் நான் தங்கியிருந்த மராக்கேசிலிருந்து 650 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. அங்கு செல்ல இரண்டு வழிகளைக் காண்பித்தது. ஒன்று மொரோக்கோத் தலைநகர் இரபாத் வழியாகச் செல்வது மற்றொன்று ஊர்சுற்றி சகாரப் பாலைவனத்தைப் பார்த்துவிட்டுப் பழங்கால ஊர்களான ஃபெஸ், செப்சாவன் வழியாகச் செல்வது. நான் இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு ஊரிலும் ஒரு நாள் தங்கிவிட்டு செப்சாவனிலிருந்து Chefchaouen டெட்டுவான் என்ற ஊருக்குச் சென்றேன். அங்கு பெரும்பாலோனோர் அரபி, பிரெஞ்சு மற்றும் ஸ்பானிக்ஷ் மொழிகள் மட்டும் பேசுகின்றனர். அதனால் அங்கிருந்து ஜெபல் மூசா செல்ல வழிகேட்டபோது அங்குள்ளவர்கள் கூறியது புரியாமல்போகவே ரசீத் அவர்கள் உதவியை நாடினேன். அவர் டாக்சி டிரைவரிடம் தொலைபேசியைத் தரச்சொன்னார். அவரது அறிவுறுத்தல்படி நான் பயணித்த டாக்சி Fnideq நகரின் மையப்பகுதியில் இறக்கிவிட்டுவிட்டுச் சென்றது. இடங்காட்டியைப் பார்த்தபோது நான் போக வேண்டிய இடம் இன்னும் 17 கிலோமீட்டர் தொலைவில் தள்ளி உள்ளது என்பதைக் காட்டியது. அங்கு எப்படிப் போகலாம் என யோசித்துக்கொண்டேத் தலைக்கு மேலே பறந்தபடி இருந்த கடற்காகங்களைப் பார்த்துக்கொண்டு நின்றேன். எனது அருகாமையிலிருந்த மத்தியத்தரைக் கடல் ஆரவாரமின்றி இருந்தது. நான் அங்கு இறங்கிய நாள் ஞாயிறு விடுமுறையாய் இருந்ததால் ஆங்காங்கே இளைஞர்களும் மாணவர்களும் கால்பந்துத் திடலில் உற்சாகமாக விளையாடிக்கொண்டு இருந்தனர். நிலைய மேலாளர் திரு ரசித் அவர்களுக்கு நான் வந்தடைந்த விசயத்தையும் நின்று கொண்டு இருக்கும் இடங்காட்டியையும் அவரது எண்ணுக்கு அனுப்பி வைத்தேன். நீங்கள் அங்கேயே இருங்கள் 10 நிமிடத்தில் வந்துவிடுகிறேன் எனக்கூறி அவரே தனது மிட்சுபிசி காரை எடுத்துக்கொண்டு வந்து என்னை அழைத்துச்சென்றார். இதை நான் எதிர்பார்க்கவில்லை.
என்னை அழைத்துக்கொண்டுபோகும் வழியில் பாறுக் கழுகுகளுக்கு உணவிடுவதற்காகக் கசாப்புக் கடைக்குச் சென்று இறைச்சியை வாங்கி வண்டியில் ஏற்றினார். டான்சியர் எனும் துறைமுக நகர் போகும் வழியில் எங்களது வண்டு போய்க்கொண்டிருந்தபோது வழியில் இரண்டு மாணவர்கள் நின்று கொண்டிருந்ததைப் பார்த்து வண்டியை நிறுத்தினார். அரபி மொழியில் அவர்களிடம் ஏதோ பேசிவிட்டு அவர்கட்கு பழக்கூழையும் சாக்லேட்டையும் தந்துவிட்டுக் கிளம்பினார். இந்த மாணவர்கள் என்ன செய்கிறார்கள் எனக்கேட்டபோது அவர்கள் இரைகொல்லிப் பறவை ஒன்றின் கூடைப் புதிதாகப் பார்த்ததாகவும் வேறு யாரும் அந்தக்கூட்டைத் தொந்தரவு செய்யாவண்ணம் தன்னார்வப் பாதுகாவலராக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக இதைச் செய்தேன் என்றும் குறிப்பிட்டார். அவரோடு போய்க்கொண்டிருந்தபோதே வானத்தில் பாறுக்கழுகுகள் வட்டமிடுவதைப் பார்த்துவிட்டு அதைப் படம் எடுக்கலாமா வண்டியை நிறுத்தலாமா எனக்கேட்டேன். நமது மையத்திற்குச் சென்று எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னார். வண்டி வலதுபுறமாக ஒற்றையடிப்பாதையில் சென்று பாறுக் கழுகு மீட்பு மையத்தின் முன் வண்டி நின்றது.
வண்டியை விட்டு இறங்கியபோது, என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. அந்த மையத்தில் பாறுக்கழுகுகளை இயல்பாக வெகுஅருகாமையில் பார்க்க முடிந்தது. இது கண்கொள்ளாக் காட்சியாக என்னைப் பரவசப்படுத்தியது. தமிழ்நாட்டில் பாறுக் கழுகுகளைப் பார்க்க வேண்டும் என்றால் கூடுதல் மெனக்கெடல் வேண்டும். அதுவும் அருகிலிருந்து பார்ப்பதுச் சற்றே சிரமம். நம்மைப் பார்த்தவுடன் அவை உணவுண்டுகொண்டிருந்தாலும் அந்த இடத்திலிருந்து கிளம்பிவிடும். அவை மனித நடமாட்டத்தை விரும்புவதில்லை. ஆனால் இங்கு நேர்மாறாக இருந்தது. அங்குத் திரும்பிய இடமெல்லாம் சுமார் 300க்கும் மேற்பட்டப் பாறுக்கழுகுகள் வானிலும் மரத்திலும் நிலத்திலும் பாறைகளிலும் காணமுடிந்தது. அங்கு என் வாழ்வில் முதன்முறையாக யுரேசியப் பாறுக் கழுகு, ருப்பெல்ஸ் பாறுக் கழுகு, ஆப்ரிக்க வெண்முதுகுப் பாறுக் கழுகு, ஆகியனவற்றைக் காணும் வாய்ப்புக் கிடைக்கப்பெற்றேன். இதில் யுரேசியப் பாறுக் கழுகுகள் எண்ணிக்கையில் அதிகம் இருந்தன. தற்போது பாறுக் கழுகுகள் வலசை வரும் காலம் என்பதால் எண்ணிக்கை அதிகம் என நிலைய மேலாளர் ரிசாத் அவர்கள் குறிப்பிட்டார். நீலமுகப் பாறுக் கழுகும் அங்கு அடைக்கலமாகியிருந்தது.
நாங்கள் சென்று சேர்ந்த வேளையில் பன்றியின் சடலம் ஒன்றும் வனத்துறையால் அந்த முகாமிற்கு அனுப்பப்பட்டிருந்தது. ஒரு வேளை அந்தப் பன்றி ஏதோ ஒரு தோட்டத்தில் தனது பசியை ஆற்றுவதற்காகச் சென்றிருக்கலாம். அப்போது அது சுடப்பட்டிருக்கலாம். முகமதியர்கள் பன்றிக் கறி சாப்பிடாததால் அது முகாமிற்குக் கொண்டுவரப்பட்டுப் பாறுக் கழுகுகளுக்கு இரையாக்கப்பட்டது என்பதைத் தெரிந்து கொண்டேன். அதேபோல கசாப்புக்கடைக்கு மாடுகளை ஏற்றிச்செல்லும் போது இறக்க நேரிட்டாலும் அதுவும் இந்த மையத்திற்கு அனுப்பப்படுகிறது. அது பாறுக் கழுகுகளுக்கு நல்ல வாய்ப்பாகி விடுகிறது. ஆயினும் இது யானைப்பசிக்குச் சோளப்பொறிப் போலத்தான். இரைத் தட்டுப்பாடும் பெருமளவு இருப்பதைக் குறிப்பிட்டார்.
பேசிக்கொண்டே அவரது நிலையத்தைச் சுற்றிக் காண்பித்தார். அவர் என்னைப் பார்வையாளர் மாடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்தபடி இன்னும் எளிதாகப் பாறுக்கழுகுகளைப் பார்க்க முடிந்தது. நிழற்படமும் எடுக்க முடிந்தது. உணவுக்காக ஒன்றுக்கொன்று ‘க்கக க்கக’ எனக் கத்திக்கொண்டே போட்டிப் போட்டுக்கொண்டு உணவை உண்டதைப் பார்க்கப் பார்க்க வியப்பாய் இருந்தது. மையத்தில் ஒரு கூண்டில் யுரேசியப் பாறுக் கழுகும் இருந்தது. பார்க்க நோஞ்சானாக இருந்தது. அதற்கு புரோட்டின் கலவையுடன் கூடிய ஈரல் உணவு வழங்கப்பட்டது. சில பறவைகள் கிறுக்குப் பிடித்ததைப்போன்று கிறுகிறுவென்று சுத்திக்கொண்டே இருக்கும். அதுபோன்ற வற்றுக்கு இதுபோன்ற ஊட்டச்சத்து வழங்கப்படுகிறது என்றுக் குறிப்பிட்டார். அவரது ஆய்வகம் மிக எளிமையாக இருந்தது.அவரது மேசையில் உள்ளங்கைக்குள் அடங்கும் அளவுக்கு இருந்த மூன்று சிறு பொறிகளைக் காண்பித்து நாளை மூன்று கழுகுகளுக்கு ஜிபிஎஸ் பொருத்தலாம் என்று இருக்கிறோம் சொன்னதும் எனது மனம் மகிழ்ச்சியில் திளைத்தது.
தமிழ்நாட்டில் இருக்கும் பாறுக் கழுகுகளுக்கும் ஜிபிஎஸ் பட்டை பொருத்தி ஆய்வு செய்யவேண்டும் என்பது எமது பல வருடக் கனவு. ஆனால் அதற்கானப் பயிற்சி எனக்கு வாய்க்கப்பெறவில்லை. இதற்குத்தானே நான் ஏங்கியிருந்தேன் என்று கூறி அவரிடம் எனது ஆர்வத்தைத் தெரிவித்தேன். நாளை இருக்குமா இருக்காதா என உறுதிப்படுத்தமுடியாது என்று கூறி எனது ஆர்வத்தை மட்டுப்படுத்தினார்.ஆயினும் தொழில்நுட்ப உதவியாளரை நாடிச் செய்ய முயற்சிக்கிறேன் என்றார். முயற்சி திருவினையாக வேண்டும் என விரும்பினேன்.
அன்று மாலை ஜிப்ரால்டர் நீரிணைப்பை ஒட்டி அமைந்திருந்த ஹெர்குலசின் தூண்கள் என அழைக்கப்படும் ஜெபல் மூசா மலைமுகட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு யுரேசியன் கிரிப்பான் கழுகு கூடு கட்டி அடைக்காத்து வருவதைத் தொலை நோக்கி வழியாகக் காண்பித்தார்.அதைப் பார்த்துப் பார்த்து வியந்தேன். அப்போது அவர் சொன்னது இன்னும் சந்தோசப்படுத்தியது. இங்கு கூடு கட்டியிருப்பதை நானும் எனது உதவியாளரும் மட்டுமே பார்த்து மொரோக்காவில் பதிவுசெய்திருப்பதாகவும் இதனைப் பார்த்த 3வது நபர் நீங்கள் தான் எனக்குறிப்பிட்டபோது பெருமிதம் கொண்டேன். அந்த வாய்ப்பை வழங்கியமைக்கு அவர்கள் மொழியில் சுக்ரான் என நன்றியையும் தெரிவித்தேன். இரவில் அவருடன் உரையாடியபடி அவர்கள் மேற்கொண்டுவரும் பணி குறித்தும் மொரோக்கோ நாடு குறித்தும் ஆவணப்படம் பார்த்தோம்.
கடந்த சில நாட்களாக அலுவல் தொடர்பான அழுத்தத்தில் இருந்ததால் இரவு தூங்க நெடுநேரம் ஆனது. மொராக்கோப் பயணத்தை இடைநிறுத்தி விடலாமா என்று கூட யோசித்தேன். மறுநாள் காலையில் எழுந்து அவரைப் பார்த்தபோது அவர் சொன்ன சொல் என்னை உற்சாகப்படுத்தி எனது இடைவிடாத அழுத்தத்திலிருந்து மீட்டெடுத்தது. இன்று மூன்று கழுகுகளுக்குப் பட்டைப் பொறுத்தப்போகிறோம். அதற்கான ஆயத்த வேலைகள் முடிந்து விட்டன. உங்களது ஆர்வம் நிறைவேறப் போகிறது என்றார். இந்த வாய்ப்பை எப்படிச் சொல்வது, ‘பழம் நழுவிப் பாலில் விழுந்தது’ என்றா ‘காகம் உட்காரப் பனம் பழம் விழுந்தது’ என்றா, எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். எனது பயணத்தின் எதிர்பாராத திருப்பமாக இது அமைந்தது.
இந்த மையத்தில் இதுவரையிலும் 14 பாறுக் கழுகுகளுக்கு இது போன்றக் கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவை எங்கெங்கு செல்கின்றன என்பது போன்ற தரவகளைக் கண்காணித்து வருவதாகவும் சொல்லிவிட்டு இதற்கு முன்னர் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டப் பறவை தற்போது செனிகல் நாட்டில் சுற்றிக்கொண்டிருப்பதைக் காண்பித்தார்.
ஜிபிஎஸ் பொறியை பொருத்துவதற்கு முன்னர் கணிணியில் பல்வேறு ஆயத்தப் பணிகளைச் செய்துகொண்டிருந்தார். ஜிபிஎஸ் பொறியை எளிதில் அறுபடாத நாடாவில் நாலாபுறமும் கோர்த்து இறுகக்கட்டி அதை மேசையில் வைத்தார். நிலைய உதவியாளர் ஆப்ரிக்க வெண்முதுகுக் கழுகை இலாவகமாகப் பிடித்து எடுத்து வந்தார். பாறுக் கழுகின் முதுகில் பட்டையைப் பொருத்தி கச்சையைக் கால்பகுதி வழியாக நுழைத்துப் பறக்கும்போது அவற்றுக்குத் தொந்தரவு நேராவண்ணம் இறக்கையோடு இறக்கையாக ஒன்று சேர்த்துப் பிணைத்தார். அந்த முடிச்சு அவிழாவண்ணம் பெவிகுயிக்கை அதில் தடவினார். அதன் இறக்கையில் பெவிகுவிக் பட்டுவிடக்கூடாது என்பதால் சிறு அட்டையைக் கீழ்ப்புறம் வைத்து கவனமாக அதனைச் செய்தார். கட்டிக்கொண்டிருக்கும்போதே தனது அலகால் அவரது முழங்கையைக் கொத்தியது. அதிலிருந்து இரத்தம் பொங்கியது. ஆனாலும் அதைப் பற்றிப் பொருட்படுத்தாமல் இதெல்லாம் சகஜமப்பா என்றுத் தனது வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தார். இன்று இரண்டு ஆப்ரிக்கா வெண்முதுகுப் பாறுக் கழுகுகளுக்குப் பட்டை பொருத்தினோம். சினேரியஸ் பாறுக் கழுகுக்கும் பட்டை பொருத்த ஆயத்தமானோம். ஆனால் அதன் எடை 3.45 கிலோ மட்டும் இருந்ததால் பொருத்துவது எதிர்பார்த்தப் பலனைத் தராது என நினைத்து காலில் வளையம் மட்டும் மாட்டிவிட்டுப் பறக்கவிட்டோம்.
நாங்கள் இங்கு இதைச் செய்து கொண்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக உணவுக்கான போட்டியில் ஓன்றை ஒன்று சண்டையிட்டுக்கொண்டதில் யுரேசியன் பாறுக் கழுகு ஒன்றின் ஒரு கண்போய்விட்டது. வலியால் துடித்தது. கண்ணை மூடியபடி இருந்தது. அதனை உடனே எடுத்து வந்து நிலையக் காப்பாளர் ரஜித் அவர்கள் மருந்து தடவி ஊசி செலுத்தி கட்டுப்போட்டார். அவருக்கு உதவி செய்யும் வாய்ப்பும் இன்று கிடைக்கப்பெற்றேன். ஆயினும் மருத்துவ உதவிப் பலனளிக்கவில்லை. சாவைத் தழுவியது.
பாறுக் கழுகுகளுக்கு வேறு என்ன அச்சுறுத்தல்கள் இங்கு நிலவுகின்றன எனக்கேட்டேன். காற்றாலையில் மோதி இறக்க நேரிடுவது, மின் கம்பியில் மோதி மாண்டு போவது, உணவுக்காக வேட்டையாடப்படுவது, இரைத் தட்டுப்பாடு என அடுக்கினார். ஒரு முறை ஊடுறுவல்காரர்கள் உணவுக்காக 6 பாறுக் கழுகுகளை வேட்டையாடியதை மேய்ப்பர்கள் பார்த்துவிட்டுச் சொன்னதாகவும் தெரிவித்தார்.
ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா என அனைத்துக் கண்டங்களிலும் பாறுக் கழுகுகள் பல்வேறு அச்சுறுத்தல்களுடன் போராடி வருகின்றன. இவர்போன்ற நல் உள்ளங்கள் உலகமுழுக்கப் பணியாற்றுவது நம்பிக்கை தருகிறது.
——