மேற்குத்தொடர்ச்சி மலைக்கு ஆபத்து நேரும்போதெல்லாம் இவர் பெயர் எதிரொலிக்கும்.

இவர் அப்போதே சொன்னாரே நாம் கேட்காமல் விட்டு விட்டோமே என்ற புலம்பல் இருந்து கொண்டே இருக்கும்.

மேற்குத் தொடர்ச்சி மலையைக் காலங்காலமாகப் பாதுகாக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் எதைத் தவிர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் மாதவ் காட்கில் தயாரித்து அளித்த அறிக்கை பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டம் அது. வரவேற்கத்தக்க அவ்வறிக்கைக்கு பல்வேறு எதிர்வினைகள் ஆற்றப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் 2014-இல் கீஸ்டோன் அமைப்பிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. திருவாளர் பிரதிம்ராயும் திருமதி சரளாவும் பேசினர். மாதவ் காட்கில் அவர்கள் நேரு நினைவுச் சொற்பொழிவிற்காக ஆற்றிய உரை ஒன்றைத் தமிழில் மொழிபெயர்த்துத் தர இயலுமா என்று கேட்டனர். ஆர்வம் மிகுதியால் ஒத்துக்கொண்டேன்.

மொழிபெயர்க்க ஆரம்பித்தேன். மொழிபெயர்க்கும் பணி மிக மெதுவாகச் சென்றது. இரண்டு வாரத்திற்குள் தரவேண்டும் என்ற இலக்கு இருந்ததால் வேறு சில நண்பர்களைத் தொடர்புகொண்டேன். அவர்களும் இயலாமையைத் தெரிவித்தனர்.

 அவ்வமயம் பாறு கழுகுகள் குறித்து உரையாற்றுவதற்காக ஈரோடு சென்றிருந்தபோது தமிழ்நாடு பசுமை இயக்கத் தலைவர் மருத்துவர் காலஞ்சென்ற ஜீவானந்தம் அவர்களைத் சந்தித்து இம் மொழிபெயர்ப்பு குறித்துத் தெரிவித்தேன். உடனே கட்டுரையை அனுப்புமாரு கோரினார். 

அனுப்பி வைத்த மூன்று நாட்களிலேயே முழுவதையும் மொழிபெயர்த்துவிட்டு எந்த முகவரிக்கு அனுப்பவேண்டும் என்று கூறி அனுப்பியும் வைத்தார். அதை நான் சற்றே மெருகேற்றி, ‘ஒரு மலையும் சில அரசியல்களும்’ என்ற தலைப்பில் நூலாக்கினேன். 

இந்நூல் வெளியீட்டு விழாவை பியுசிஎல் அமைப்பைச் சேர்ந்த திரு குமார் என்பவர்  நடத்தினார். அவ்விழாவில் பேராசிரியர் மாதவ் காட்கில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். மேற்குத்தொடர்ச்சி மலை அறிக்கை தயாரிக்க மாதவ் காட்கிலுக்கு உதவிய அறிஞர்கள் இரஞ்சித் டேனியல்ஸ் அவர்களும் திருமதி ஜெயஸ்ரீ அவர்களும் கலந்துகொண்டு விளக்கமளித்தனர். 

மாதவ் காட்கில் அவர்களது குரல் எப்பொழுதும் அடிமட்டத்திலுள்ள மக்களுக்காகவும் குரலற்ற பழங்குடி மக்களுக்காகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. சில வேளைகளில் அவரது நேர்காணலைப் படிக்கும்போது நெருடலாக இருக்கும். ஆனாலும் புதிய பார்வையினையும் அனுகுமுறையையும் அறிவியலாளர்கள் மட்டத்தில் உருவாக்கியதில் அவரது பங்கு அளப்பரியது.

மக்கள் பங்கேற்பு இல்லாத இயற்கைப் பாதுகாப்பு என்ற சிந்தனையைப் புரட்டிப்போட்ட தில் அவர் பெரியார் பாணியினைக் கடைபிடித்தார். அவரை நினைவு கூர்கிறோம். அவருக்குப் புகழஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறோம்.

அவராற்றிய உரையை அனைவரும் படிக்கும் வண்ணம் இணைப்பில் தந்துள்ளோம் – https://drive.google.com/file/d/1DEnAh5RfBsB8gdEHSDjc2129c1Nn65FE/view?usp=sharing 

Photo Credits- Harish Vasudevan, CC BY-SA 3.0 

Photo- Madhav Gadgil in Kasargod, Kerala, 2013

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *