இடம் : தெங்குமரஹடா, தேதி : 03-07-2025

நிகழ்ச்சிக் குறிப்பு:

தெங்குமரஹடா கிராமம், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு இயற்கை வளம் மிகுந்த, பழங்குடியினர்கள்  மற்றும் இதர மக்கள் வாழும் சிறப்பு மிக்க சிற்றூராகும். இது சத்தியமங்கலம் மற்றும் முதுமலை வனப்பகுதிகளை இணைக்கும் பகுதியில் மோயார் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

 

 இங்கு யானை, கழுதைப்புலி, வெளிமான் , புலி, முதலை, நீர்நாய் மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள பாறுக் கழுகுகள் உள்ளிட்டப் பல்வேறு வகையான விலங்குகள், பறவை இனங்கள் வாழ்ந்து வருகின்றன.

பாறுக் கழுகுகளின் தற்போதைய நிலை:

பொதுவாகவே பாறுக் கழுகுகளின் எண்ணிக்கை தெற்காசியா முழுவதும் பெரிதும் குறைந்துள்ளதுநோயுற்ற கால்நடைகளுக்குச் செலுத்தப்பட்ட வலிப்போக்கி மருந்துகளின் (Diclofenac, Aceclofenac, Ketoprofen,  Nimesulide) தாக்கம் இறந்த கால்நடைகளில் மூலம் அதனை உண்ண நேர்ந்த கழுகுகளின் உடலைச் சென்றடைந்து சிறுநீரகத்தைச் செயலிழக்கச் செய்து உயிரிழந்துள்ளன என்பது தெரிய வந்தது

விழிப்புணர்வு  நடவடிக்கைகள்:  

இந்த நிலையை மாற்ற, அருளகம் இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பாறுக் கழுகுகளை பாதுகாக்க, தடை செய்யப்பட்ட வலிப்போக்கி மருந்துகளை தவிர்த்து, பாதுகாப்பான மாற்று மருந்துகளை கொண்டு கால்நடைகளுக்கு முதலுதவி பெட்டி ஒன்றை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

 

நிகழ்ச்சியின் சிறப்பு:

03-07-2025 அன்று, தெங்குமரஹடா கிராமத்தில் கால்நடை உரிமையாளர்களிடம் அருளகம் அமைப்பினர் மக்களிடையே  கலந்துரையாடல் நடத்தினர். இந்நிகழ்வில், தடை செய்யப்பட்ட மருந்துகளின் தீமைகள் குறித்தும், பாதுகாப்பான மாற்று மருந்துகளின் பயன்பாடு மற்றும் கால்நடை முதலுதவி பெட்டியின் அவசியம் குறித்தும்  விரிவாக திரு.பரமன்  அவர்கள் எடுத்துரைத்தார். பாறுக் கழுகுகளின் முக்கியத்துவம் குறித்து அருளகம் அமைப்பின் களப் பணியாளர்கள் சுந்தரி மற்றும் ரேவதி ஆகியோர்  எடுத்துரைத்தனர். தடை செய்யப்பட்ட மருந்துகள் குறித்தும் பாறுக் கழுகுகள்  முக்கியத்துவத்தையும்  மக்கள் புரிந்துகொண்டனர். 

 இந்நிகழ்ச்சியில்,  கிராம குழு உறுப்பினர்கள், கால்நடை உரிமையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று, இம்முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். 

கால்நடை முதலுதவிப் பெட்டியை ஊரில் பொது இடத்தில் வைப்பதற்கு  ஒத்துக் கொண்டார்கள்.  அதற்கேற்றார்போல தெங்குமரகடா, அல்லி மாயாறு, கல்லாம்பாளையம் ஆகிய ஊர்களில் பாறு நலன் காக்கும்  கால்நடை முதல் உதவிப் பெட்டி வைக்க முடிவு எடுக்கப்பட்டது…  அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.. விரைவில் இது செயல்பாட்டுக்கு வரும்.

அனைத்துக் கால்நடை உரிமையாளர்களையும் அழைத்து இந்நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 

                                         

இந்த நிகழ்ச்சி பாறுக் கழுகுகள் பாதுகாப்பிற்கான சிறந்த முயற்சியாக அமைந்தது. இதன் மூலம் மருந்துகளினால் நேரும் ஆபத்தைக் குறைக்க முடியும். இதன்மூலம் பாறுக் கழுகுகளின் எண்ணிக்கையை மீண்டும் உயரும் என்ற நம்பிக்கை உள்ளது.  தொடர்ந்து இதுபோன்ற விழிப்புணர்வு மற்றும் கால்நடை மருத்துவ உதவி நடவடிக்கைகள் மேற்கொள்ள அருளகம் திட்டமிட்டுள்ளது. 

 

 மேலும் இந்நிகழ்வின் முடிவில் துண்டு பிரசுரங்களையும் வழங்கினோம்இந்நிகழ்வுக்கு ஆதரவு நல்கிய திருமதி சரஸ்வதி நடராசன் மற்றும்  திரு நடராஜன் குடும்பத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *