Landscape Management Practices in India என்ற தலைப்பில் பயிலரங்கை ஒழுங்கு செய்திருந்தது. புதுதில்லியில் உள்ள ஹெபிடாட் மையத்தில் மே8 முதல் 10 வரை மூன்று நாள் நடைபெற்ற இப்பயிலரங்கில் மத்தியப்பிரதேச மாநிலம் பன்னா தேசியப்பூங்கா வாழ்விடத்தையும் அழிவபாயத்திலுள்ள உயிரினங்களையும் குறிப்பாக, புலி, பாறு கழுகுகள், முதலை உள்ளிட்ட விலங்குகளுக்குச் சிறப்புக் கவனம் செழுத்தி அவற்றை வாழ்வாங்கு வாழச்செய்ய கைக்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடி செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்தியளவில் பல்வேறு மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் குறிப்பிடத்தகுந்த முன்முயற்சிகள் குறித்து அறிஞர்களும் வனத்துறை அலுவலர்களும் உரையாடினர்.

இதில் பாறு கழுகுகள் பாதுகாப்பு குறித்துக் கருத்துப் பகிர அருளகம் சார்பாக அழைத்திருந்தனர். நானும் கலந்துகொள்ளும் நல்வாயப்புக்கிடைத்தது.
பாறு கழுகுகளை அணுக்கமாக இருந்து பார்க்கும் வாய்ப்பு முதன்முதலில் பன்னா தேசியப்பூங்காவில் தான் வாய்க்கப்பெற்றேன். கரடி தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டிருந்த திரு.க.யோகானந்த் அவர்களது அழைப்பின்பேரில் நானும் காட்டுயிர் இதழாளர் திரு ச. முகமதலி அவர்களும் திரு அம்சா அவர்களும் அங்கு சென்றிருந்தோம். என்னுடன் வந்திருந்தவர்கள் அறையில் தங்கி இருந்தனர். நான் காலாற நடந்து தங்குமிடத்திற்கு அருகிலிருந்த பழங்குடிகள் குடியிருப்புக்குச் சென்றேன். வாசலில் இலுப்பை மரப்பூவை உலர்த்தி காயவைத்திருந்தனர். பெண்கள் அருகிலிருந்த ஊருணியில் தண்ணீர் சேகரித்து எடுத்துவந்து கொண்டிருந்தனர். நான் எதிரில் வந்ததும் தங்களது முந்தாணையால் முகத்தை மூடிக்கொண்டனர். நான் நடந்து சென்று சிறு மேடு போல இருந்த குன்றில் சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். இறந்த மாட்டை ஊரிலிருந்து இழுத்துக் கொண்டுவந்து கிடத்தினர்.
அப்போது பாறு கழுகு கூட்டம் வந்து இறங்கியதைப் பார்த்தேன். இறந்த மாட்டின் உடலைப் போட்டி போட்டுக்கொண்டு உண்டுகொண்டிருந்ததைப் பார்த்து வியந்தேன். இந்தக் காட்சியை நண்பர்களுக்கும் காட்டவேண்டும் என்று விரும்பி அவர்களை அழைத்துவரச் சென்றேன். திரும்பிவருவதற்கு இரண்டு மணி நேரம் ஆகியிருக்கும் அதற்குள் அவை எல்லாவற்றையும் தின்று விட்டிருந்தன. இங்கொன்றும் அங்கொன்றும் அருகிலிருந்த மரக்கிளையில் அமர்ந்திருந்தன. அதே கூட்டத்தை நண்பர்களுடன் சென்று அன்று மாலையில் கென் நதி தீரத்தில் கண்டுகளித்தோம்.
பாறு கழுகுகள் அழிவை நோக்கிச்சென்று கொண்டிருக்கின்றன என்ற செய்தியை முதன்முதலில் படிக்க நேர்ந்தபோது அந்த ஊரில் பார்த்த காட்சிதான் என் மனக்கண்முன் வந்துபோனது. அது குறித்து அப்போதே புதியகல்வி எனும் மாத இதழில் பதிவு செய்திருந்தேன்
தற்பொழுது இந்தியக் காட்டுயிர் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய நிகழ்வில் கலந்துகொண்டு அவற்றை மேம்படுத்த எனது கருத்துக்களையும் வழங்கியது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்தது.