Publications   >>   Articles   >>   சாக்லேட் திங்க ஆசையா?

சாக்லேட் திங்க ஆசையா?

 

குழந்தைகளே! அம்மாவிடம் அடம் பிடித்து காசு வாங்கியவுடன் என்ன செய்வீர்கள்? கடைக்கு ஓடி கண்ணாடிக் குடுவைக்குள் இருக்கும் கண்ணைப் பறிக்கும் வண்ணக் கலரில் உள்ள சாக்லேட்டைத் தானே வாங்குவீர்கள். அந்த வண்ணக் கலர் பிளாஸ்டிக் காகிதத்தையா உண்கிறீர்கள்? இல்லை, உள்ளே உள்ள சாக்லேட்டைத் தானே சாப்பிடுகிறீர்கள்.

Sea Turtle caught in the plastic bagஏன் வெறும் 3 கிராம் எடை கொண்ட சின்ன சாக்லேட் துண்டுக்கு கலர்கலராய் 3 வகை உறைகள் தெரியுமா? எல்லாமே நம்மளை ஏமாற்றத்தான். நாம் அந்த சாக்லேட் உறைக்கும் சேர்த்துத்தான் காசு கொடுக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது. சாக்லேட்டை வாங்கிய உடனேயே எங்கே அதைப் பிரிக்கிறோமோ அங்கேயே விட்டெறிந்து விடுகிறோம் இல்லையா? நீங்கள் விட்டெறிந்த அந்த உறையை, குப்பையை உங்கள் வயதை ஒத்த ஏழைச் சிறுவர், சிறுமிகள் பொறுக்கி எடுத்துச் செல்வதைப் பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் அதை என்ன செய்கிறார்கள்? உடைந்த கண்ணாடி, காகிதம், பிய்ந்த செருப்பு, பிளாஸ்டிக் பை இவற்றை பழைய பொருட்கள் வாங்கும் கடையில் விற்றுவிடுவார்கள். அதன் மூலம் அவர்களுக்கு கொஞ்சம் பணம் கிடைக்கிறது.

சரி, அந்த சாக்லேட் உறையை யாரும் பொறுக்காமல் விட்டால் என்ன ஆகும்? காற்றடிக்கும் திசையில் எல்லாம் பறந்து நாம் நடக்கும் பாதையெல்லாம் இறைந்து கிடப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணோடு மண்ணாக மக்காமல், அப்படியே கிடந்து நிலத்தை பாழ்படுத்திக் கொண்டிருக்கும். அப்படியில்லாத நிலையில், சாக்கடையில் விழுந்து அடைத்துக் கொள்ளும். பிறகு சுத்தம் செய்யும்போது ஆற்றில் சேர்ந்து பின்னர் கடலுக்குச் சென்றுவிடும். இதனால் எந்தப் பிரச்னையும் இல்லை என்று தானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. அந்த சாக்லேட் தாளை மீன்கள் சாப்பிட்டுவிட்டு வயிற்றில் சிக்கி இறந்து போகவும் நேரலாம்.

உங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எல்லாம் ஒரு நாளைக்கு ஒரு சாக்லேட் தின்றுவிட்டுத் தூக்கி எறியும்போது எத்தனை பிரச்னைகள் ஏற்படும்? உங்கள் ஊரில், ஏன் இந்தியாவிலுள்ள அனைத்து சிறுவர், சிறுமியரும் சாக்லேட் தின்றுவிட்டு உறையை தூக்கி எறிந்தால் ஏற்படும் பிரச்னை எவ்வளவு பெரியது. எவ்வளவு குப்பைகள் சேரும். அதெல்லாம் சாக்கடையில் விழுந்தால் சாக்கடை முழுமையாக அடைத்துக் கொள்ளும், இல்லையா. பிறகு வீட்டைச் சுற்றி சாக்கடை தண்ணீர் தேங்கி நிற்கும். துர்நாற்றத்தையும், கொசுத் தொல்லையையும் பொறுத்துக் கொள்ள முடியாது. நிம்மதியாக படிக்க முடியாது, சாப்பிட முடியாது, நிம்மதியாக தூங்கவும் முடியாது. சரி, அத்தனை குப்பையும் கடலில் கலந்தால், எத்தனை மீன்கள், உயிரினங்கள் சாகும்? மற்றொரு உயிர் அழிவதை நாம் விரும்புவதில்லை, இல்லையா.

சரி, அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்?

குப்பைகளை கண்ட இடத்தில் போடாமல், குப்பைத் தொட்டியில் போடப் பழக வேண்டும். நீங்களே அட்டைப் பெட்டியில் குப்பைத் தொட்டி செய்து, அதில் பழைய காகிதம், பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில் போன்ற வீட்டில் தேவைப்படாத பொருட்களைச் சேகரித்து விற்கலாம். அதில் கிடைக்கும் பணத்தை நோட்டு வாங்கவோ, புத்தகம் வாங்கவோ பயன்படுத்திக் கொள்ளலாம். அப்பா, அம்மாவும் பாராட்டுவார்கள்.

இனிமேல் காசு கிடைக்கும்போது, சாக்லேட் வாங்குவதற்கு பதிலாக பழங்களைச் சாப்பிட்டால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அவற்றின் தோலும் எளிதில் மக்கிப் போகும்.

 

“A human being is a part of the whole called by us universe, a part limited in time and space. He experiences himself, his thoughts and feeling as something separated from the rest, a kind of optical delusion of his consciousness. This delusion is a kind of prison for us, restricting us to our personal desires and to affection for a few persons nearest to us. Our task must be to free ourselves from this prison by widening our circle of compassion to embrace all living creatures and the whole of nature in its beauty.” 

Albert Einstein