Publications   >>   Articles   >>   காட்டைப் பிளக்கும் சாலைகள் நிகழ்த்தும் கொடூர கொலைகள்

காட்டைப் பிளக்கும் சாலைகள் நிகழ்த்தும் கொடூர கொலைகள்

நெடுஞ்சாலையில் அடிபடும் மனிதர்களையே கண்டு கொள்ள முடியாதபடி சமூகச்சூழல் வாட்டும்போது நாயோ, பூனையோ அடிபட்டால் யார் கண்டு கொள்ளுவது?

அதிலும் காட்டைப்பிளந்து செல்லும் சாலையில் அடிபடும் காட்டுயிர்களின் நிலையைக் கேட்கவா வேண்டும்? ஓவ்வொரு நாளும் கணக்கற்ற காட்டுயிர்கள் நம் கவனத்திற்கு வராமலேயே கணப்பொழுதும் செத்து மடிந்து கொண்டே இருக்கின்றன. கள்ள வேட்டைக்கு பலியாகும் காட்டுயிர்களை விட அதிகமாக நம் வாகனங்களில் மோதி பலியாகின்றன. இரண்டாண்டுகளுக்கு முன்னர் பாலக்காடு இரயில் மார்க்கத்தில் யானைக்கூட்டம் ஒன்று அடிபட்டு தலைவேறு, முண்டம்வேறு, கால்வேறு எனக் கிடந்ததையும், கர்ப்பிணியானையின் வயிற்றுக்குள் இருந்த குட்டியும் தூக்கி வீசப்பட்டு ரணமாய்க் கிடந்ததும் நாளிதழ்களில் செய்தியாகப் பார்த்து அதிர்ந்திருப்போம்.

road_kills_black_naped_hare
road_kills_chameleon
road_kills_common_tiger_butterfly
road_kills_common_toad
road_kills_elephant_calf_bandipur
road_kills_green_bee-eater
road_kills_leopard_cat
road_kills_monitor_lizard
road_kills_palm_squirrel
road_kills_rat_snake
road_kills_scorpion
road_kills_snake
road_kills_spotted_dove
road_kills_wood_pecker
01/14 
start stop bwd fwd

இதுபோன்று சிறுத்தைப்புலி ஒன்றும் முதுமலை சாலையில் அடிபட்டு செத்துக்கிடந்ததும் நம் கவனத்திற்கு வந்திருக்கும். இவை எல்லாம் கடலில் ஒருதுளி போலத்தான்.

சாலைகளின் தரம் மேம்பட்டுள்ளதால் வாகனங்கள் சாதாரணமாக 80 மைல் வேகத்தில் செல்லுகின்றன. இதனால் கீழே செல்லும் விலங்குகள் ஒட்டுநர்களின் கண்களுக்கு தெரிவதில்லை அப்படியே தெரிந்தாலும் ஒன்றும் செய்வதற்கில்லை. இதனால் அரிய வகை இரவாடிகளான மரநாய், முள்ளம்பன்றி, காட்டுப்பூனை, தேவாங்கு, மான், கரடி உள்ளிட்டவைகளும் சிறு ஊர்வன வகைகளான அரணை, ஒணான், பாம்பு, தவளை போன்றவையும் சக்கரங்களில் நசுங்கி சாகின்றன. செத்து மடியும் விலங்குகள் மட்டுமின்றி அடிபட்டு ஊனமாகும் விலங்குகள் பற்பல அவற்றின் நிலை இன்னும் மோசம். புண்ணில் சீழ் பிடித்தும், இரை தேடமுடியாமல் பசியால் வாடிவதங்கி குற்றுயிரும் குலையுயிருமாய்க் கிடந்து சாகின்றன. சில வேளைகளில் குட்டியைக் காப்பாற்ற முயன்று தாய் அடிபட்டு விடும். இதனால் பச்சிளம் குட்டிகள் பிற ஊணுண்ணிகளுக்கு சுலபமாய் இரையாகி விடுகின்றன அல்லது சூழலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மாண்டு போகின்றன. சில வேளைகளில் குட்டி அடிபட்டு தாய் தப்பி விடும் தாய் பரிதவிப்புடன் அந்த இடத்தை முகர்ந்து கொண்டு சுத்தி வரும் அவலத்தை என்னவென்று சொல்லுவது யானைகளிடத்தில் இந்த செய்கையை பார்க்கலாம்.

இவைகளை எல்லாம் யார் சாலைக்கு வரச் சொன்னது என்று கூட நாம் கேட்கலாம்? நமக்குத்தானய்யா இது சாலை அவைகளுக்கு சாலைகள் தங்களின் வாழிடத்தை துண்டு துண்டாக்கும் ஒரு இடஞ்சல்.

சாலைகள் சமவெளியைப் போல நேராக இல்லாமல் மலைகளில் சுருள் சுருளாக சுற்றிச் சுற்றி செல்லுவதைப் பார்த்திருப்போம். இது காட்டின் பெரும்பகுதியை ஆக்ரமிப்பதோடு அவற்றின் வாழிடத்தையும் துண்டு துண்டாக்கிவிடுகிறது. சோலை மந்தி, கருமந்தி, அணில் போன்ற விலங்குகள் தரைக்கு வராமலேயே மரத்திற்கு மரம் தாவியே தன் வாழ்க்கை முறையை அமைத்திருக்கும். காட்டின் குறுக்கே போடப்படும் இந்த அகலமான சாலைகளில் மரத்திற்கு மரம் தாவ முடியாமல் கீழே வர நேரிடுகிறது. அப்போது சுலபமாக பிற ஊனுண்ணிகளுக்கு இரையாகின்றன (அ) வேட்டைக்காரனிடமோ, வாகனங்களில் அடிபட்டோ சாவைத் தழுவுகின்றன.

அதன் வாழிடம் துண்டாடப்படுவதால் கருமந்தி போன்றவை ஒரு பகுதியிலேயே தங்கி விடுகின்றன. இதனால் ஒரே கூட்டத்திற்குள்ளேயே இனப்பெருக்கம் நடப்பதால் மரபீனித்தன்மையும் பாதிப்புறுகிறது என்கிறார் காட்டுயிர் பாதுகாப்புக்கழகத்தைச் சேர்ந்த லட்சுமி நாராயணன். சாலையின் இரு மருங்கிலும் தெளிவான பார்வை வேண்டி நாம் அடிக்கடி அக்காட்டுப்பகுதியை இடையூறு செய்கிறோம். இதனால் இயற்கையான மண்ணின் மரபு சார்ந்த  செடிகளை துளிர்க்க விடாமல் தடுப்பதால் அந்த இடங்களில் எல்லாம் அந்நிய களைச்செடிகள் நாளடைவில் ஆக்ரமிக்கின்றன. பின்பு பல்கிப்பெருகி இயற்கையின் பல்லுயிர்ப்பன்மயத்திற்கு பாதகம் செய்கிறது.

காட்டுயிர்கள் இரைதேடியும், இரை விலங்கிடமிருந்து தப்பவும், இணை தேடியும் தண்ணீர் தேடியும், குளிர், வெயில், மழையினின்று தற்காத்துக் கொள்ளவும் இடம் பெயரும் அப்படிச் செல்லும் போது சுருளு; சுருளான சாலைகளை ஒரு விலங்கு அடிக்கடி எதிர்கொண்டு சாலையைக் கடக்க நேரிடுகிறது. இதனால் அதிகம் அடிபட நேரிடுகிறது.

மனிதத் தொந்தரவு கருதியே பெரும்பாலான விலங்குகள் தங்களுடைய நடமாட்டத்தை இரவுப்பொழுதுக்கு தகவமைத்துக் கொண்டன. ஆனாலும் நாம் அவற்றை இரவு நேரங்களில் கூட நிம்மதியாக விடுவதில்லை. காட்டுக்குள்ளே அதிக ஒலியுடன் பாட்டு கேட்டுக் கொண்டும் கை தட்டிக்கொண்டும் செல்வதும் தாறுமாறாக ஓடும் வாகன இரைச்சலும் அதன் புகையும் காட்டுயிர்களை எரிச்சல் படுத்துவதோடு அவை உமிழும் வெளிச்சமும் கண்களை கூசச்செய்து நிலைகுலையச் செய்கின்றன. இதனால் திக்கு முக்காடி எங்கு போவதெனத் தெரியாமல் முட்டிமோதி சாவைத்தழுவுகின்றன. இத்தருணத்தைப் பயன்படுத்தி வேட்டையில் ஈடுபடுவோரும் உண்டு என்கிறார் இயற்கை ஆர்வலர் மேக் மோகன்.

சாலையில் பயணிப்போர் தூக்கிஎறியும் உணவுகளாலும் அவை அடிபட நேரிடுகிறது. பயணிகள் தாங்கள் உண்ணும் மீதங்களைப் போடுவதால் குரங்குகள் அதைத் திண்பதற்கு சாலையை நாடுகின்றன.

நாம் அவைகளுக்கு உணவு அளிக்கிறோம் எனப் பெருமைபட்டாலும் மாறாக நாம் அவற்றிற்கு தீங்கே செய்கிறோம். நாம் அளிக்கும் உணவால் அவைகளை பிச்சை எடுக்க வைப்பதோடு ஒவ்வாமை நேரிடுவதோடு வயிற்று உபாதைகளாலும் அவதியுறுகின்றன கூடவே விபத்தும் நேரிடுகிறது என்கிறார் காட்டுயிர் ஆர்வலர் கோவை சதாசிவம். இதில் கோடை விழா என ஊட்டி, கொடைக்கானல, வால்பாறை, ஏற்காடு போன்ற மலைப்பகுதியில் நாம் நடத்தும் கூத்துக்களால் அவைகளின் வாழிடமே துண்டாடப்பட்டு விடுகின்றன. தொடர்ந்து சாரைசாரையாகச் செல்லும் வாகனங்களால் அவைகள் ஓரிடத்திலிருந்து மற்றொரிடத்திற்கு செல்ல முடியாமல் திண்டாடுகின்றன. யானைகள் பொதுவாக ஒவ்வொரு அசைவின் மூலமும் தனது கூட்டத்தாருடன் ஒருவித தொடர்பை ஏற்படுத்தியபடியே செல்லும். இந்த தார்ச்சாலைகளால் அவற்றின் தொடர்புச்சங்கிலி அறுத்தெறியப்படுகிறது. இதனால் வழிதப்பி வந்து மனிதக் குடியிருப்புக்குள் புகுந்து மனிதனுக்கும் விலங்குகளுக்குமான பிணக்கும் அதிகமாகிறது.

புதிதாக போடப்பட்ட தேசிய நான்கு வழிச்சாலையால் ஒரு யானைக்கூட்டம் திசைமாறி சித்தூர் பகுதியில் தங்கிவிட்டதையும் அவைகளின் வலசைப்பாதைக்கு திரும்ப முடியாமல் மனிதக் குடியிருப்புக்குள் புகுந்து விட்டதையும் நாம் இணைத்துப் பார்க்க வேண்டும். உடனே யானைகளை வில்லன்களாகச் சித்தரிக்கின்றன ஊடகங்கள் மக்களும் அவர்களின் நலன் விரும்பிகளும் கூப்பாடுபோடுகின்றனர். ஏன் அவைகள் ஊருக்குள் புக நேரிடுகின்றன என்ற மறுபக்கத்தையும் பார்க்க வேண்டும்.

சாலையில் எத்தனை உயிர்கள் தான் அடிபடுகின்றன என்ற ஒரு களஆய்வை பந்திப்பூர்; பகுதியில் மைசூரைச் சேர்ந்த இயற்கையாளர் இராஜ்குமார் மேற்கொண்ட போது அதிர்ச்சியான தகவல் கிடைத்தன. வெறும் 14 கி.மீ வனப்பகுதியில் கரடி, பன்றி, மான், காட்டு எருது போன்ற மூன்று பெரிய விலங்குகள் மாதம் ஒன்றுக்கு அடிபடுகின்றன. இதில் ஊர்வன கணக்கிலடங்கர். இதற்காக காட்டுயிர்கள் அதிகம் வாழும்; இடங்களை குறிப்பெடுத்து எச்சரிக்கைப் பலகை, ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு, வேகத்தடுப்பரண்களை ஏற்படுத்தினோம். இது ஓரளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. இறுதியில் நீதிமன்றத்தை அணுகி பந்திப்பூர் - முதுமலையில் இரவுப் பயணத்தை தடை செய்ததால் ஓரளவு காட்டுயிர்கள் மூச்சு விடவாவது வழிபிறந்துள்ளது என்கிறார் அவர்.

காடுகளுக்கு நடுவே பயணிகள் இளைப்பாறுவதற்கென நிறுத்தப்படும் இடங்களில் தீடீர் என முளைக்கும் திருவிழாக்கடைகளால் காட்டுயிர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. பெரும்பாலான காட்டுத்தீ சாலைகளுக்கு அருகிலிருநு;து தான் பற்றிப் படர்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்..

சிறுபாம்புகள் இனப்பெருக்கத்திற்காக ஓரிடத்திலிருந்து மற்றொரிடத்திற்கு செல்லும். அப்படிச் செல்லும் போது வழுவழுப்பான தார்ச்சாலையில் ஊர்ந்து செல்லமுடியாமல் சிரமப்படும். அப்படியே ஊர்ந்து அப்புறம் சென்றாலும் அக்கரையில் விபத்து தடுப்புக்காக எழுப்பியுள்ள உயரமான சுவர்களில் ஏறமுடியாமல் திரும்பி வந்து மீண்டும் முயற்சித்தபடியே இருக்கும். இத்தருணத்தில் அவை சாவைத்தழுவுகின்றன. இதனால் அதன் இனப்பெருக்க சுழற்சியே பாதிக்கப்படுவதோடு அந்த இனமே அழியும் தருவாயில் உள்ளன எனக் கவலையுடன் குறிப்பிடுகிறார் மேற்குத்தொடர்ச்சி மலையில் சாலையில் அடிபடும் விலங்குகள் குறித்து ஆய்வு செய்து வரும் கழுதைப்புலி ஆய்வாளர் ஆறுமுகம்.

மேலும் தற்போது சாலைகள் தரமாய் இருப்பதால் காட்டுக்குள்ளே பொரும்பாலான வாகன ஓட்டிகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட வேகமாகவே செல்கிறார்கள். இதைத் தடுக்க உடனடி அபராதம் தான் வழி. காட்டுப்பகுதியில் புதிதாக எந்த சாலைத் திட்டமும் மேற்கொள்ளக்கூடாது, இருக்கும் சாலையை பழுது பார்த்து செப்பனிடக்கூடாது, அப்படியானால் தான் சக்கரங்களின் பிடியிலிருந்து தப்பமுடியும். மேலும் ஊர்வன வகைகள், ஊனுண்ணிகள் சாலையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் செல்வதற்குத் தோதாக ஆங்காங்கே இடைவெளி விட்டு தடுப்பு சுவர் கட்ட வேண்டும்;. அதேபோல் நீர்நிலைகளை ஊடறுத்துபோகும் சாலைகளிலும் தண்ணீர் இருபுறமும் ஏதுவாக செல்லும் வகையில் குழாய்பதித்தல் கட்டாயமாக்க வேண்டும்.

கர்நாடகா இயற்கையாளர்களின் பெருமுயற்சியாலும் இராஜ்குமார் போன்ற தன்னார்வலர்களாலும் முதுமலை, பண்டிப்பூர் வனப்பகுதியில் இரவு நேர வாகனப்போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. இதே போன்ற முன்னெடுப்புகளை தமிழகத்திலும் மேற்கொள்ள வேண்டும். அனைத்து காட்டுப்பகுதியிலும் சரணாலயங்கள் மட்டுமின்றி இரவு நேர வாகன போக்குவரத்து முற்றாக தடை செய்தால்தான எஞ்சி இருக்கும் காட்டுயிர்களாவது தப்பிப்பிழைக்கும்.

Andy WarholI think having land and not ruining it is the most beautiful art that anybody could ever want.

Andy Warhol